






''பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறு உங்கள் பகுதியில் மூடப்படாமல் உள்ளதா?'' அப்படி இருந்தால் 9677081370 வாட்ஸ் அப் எண்ணிற்கு புகைப்படம் மற்றும் முழு தகவலையும் மெசேஜ் அனுப்புங்கள் என தெரிவித்திருந்தோம்.

''அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் பஞ்சாயத்திற்குள் வரும் அகினேஸ்புரம் கிராமத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஆழ்துளை கிணறு உள்ளது. இது குடிநீர் தொட்டி கட்ட போடப்பட்ட ஆழ்துளை கிணறு 500 அடி இருக்கும், சிறார் பள்ளி அருகில் உள்ளதால் அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க உதவுங்கள்'' என்று நமக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து நாம் உடனடியாக செல்போன் மூலம் ஆண்டிமடத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையில் உள்ள சிலரை தொடர்பு கொண்டோம். இந்த தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் வரை சென்றதும், அவரது அறிவுறுத்தல் பேரில் ஆண்டிமடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், சம்மந்தப்பட்ட இடத்திற்கு ஜெ.சி.பி. இயந்திரத்துடன் சென்று ஆழ்துளை கிணறை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
துரிதமாக நடவடிக்கை எடுத்த காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் ஆண்டிமடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.