10 வருடங்களுக்கு முன், இதே நாள், பரபரப்பு மிகுந்த மும்பை மாநகரின் மத்தியில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். வேலையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்களுக்கு அதுவரை கேட்டிடாத ஒரு புதிய சத்தம் அவர்களை நோக்கி எதிரொலியாய் ஒலித்தது. வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கு மும்பை மக்கள் வெகுவாக பழகிப்போயிருந்த காலம் அது. ஆனால் இது வேறு. ஏ.கே 47 கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல்தான் 26/11 தாக்குதல். சில பாகிஸ்தானியர்களின் துணையோடு லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு, இந்தியா மீது கட்டவிழ்த்துவிட்ட மிகப்பெரிய தாக்குதல். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவரும் சம்பவ தினத்தன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்க, அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டு பின் தூக்கிலிடப்பட்டான்.
26/11, இரவு 8 மணி, இருபது முதல் முப்பது வயதிற்குள் உள்ள 10 இளைஞர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மும்பை மீனவர்களின் கப்பலில் அவர்களை தாக்கிவிட்டு ஏறுகின்றனர். கடல் வழியாக மும்பை வந்தடைந்த அவர்கள் இரவு 9.30 மணியளவில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் புகுந்து சுட ஆரம்பிக்கின்றனர். ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்த தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டு 104 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காபி ஷாப்பிலும், டாக்சியிலும் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதே வேகத்துடன் அடுத்து அவர்கள் நுழைந்தது தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்கள்.
இந்த ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களில் மொத்தம் 61 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் மக்களை கொல்ல உபயோகப்படுத்தப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பின் நவம்பர் 29ம் தேதி காலை ஹோட்டல்களை சுற்றிவளைத்த 'தேசிய பாதுகாப்பு படை' உள்ளிருந்த தீவிரவாதிகள் 9 பேரை சுட்டு கொன்றது. கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டான். முதலில் பாகிஸ்தான் அரசு அவனை அந்நாட்டின் குடிமகன் இல்லை என்றது. பிறகு ஒப்புக்கொண்டது. நான்கு வருட விசாரணைக்கு பின் 2012 நவம்பர் 21 ஆம் நாள் தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டான்.
லஷ்கர் ஈ தொய்பா அமைப்பால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புதிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதாகும். தீவிரவாதிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள சாட்டிலைட் போன்கள், நவீன ஆயுதங்கள், இடத்தை சரியாக அறிந்துகொள்ள கூகுள் எர்த் மூலம் பயிற்சி என பெரிய அளவில் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்தத் தாக்குதலில் 174 பேர் கொல்லப்பட்டனர். இப்படி பல கதைகளை தனக்குள் கொண்டிருக்கும் மும்பை தாக்குதல் நடந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில் அதன் வடு மட்டும் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ஆறா ரணமாகவே உள்ளது.