
அடுத்தடுத்து மாணவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது நீட். அமைச்சரின் மகனான அந்த மாணவரோ ஆஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் கூத்தடித்து கொண்டிருப்பதை இன்ஸ்டாகிராமில் படமாக வெளியிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
22 வயதாகும் இவர், அமைச்சர் வேலுமணியின் மகன். சுகுணா மில்ஸில் வேலை பார்த்து சொந்த வீடும் ஒரு ஏக்கர் நிலமும் கொண்டிருந்த பழனிசாமியின் பேரன். பழனிசாமி தனது மகன்கள் அன்பரசன், வேலுமணி, செந்தில் ஆகியோருடன் எளிமையான நடுத்தர வாழ்வு வாழ்ந்து வந்தார். வேலுமணி நல்ல உயரம். சினிமாவில் நடிக்க விரும்பி, கோடம்பாக்கத்தில் சுற்றிவிட்டு கோவைக்குத் திரும்பியபோது, மில் தொழிலாளியான பழனிசாமி, தனது அண்ணா தொழிற் சங்கம் மூலம் அமைச்சர் தாமோதரனிடம் வேலுமணியை வேலைக்கு சேர்த்துவிட்டார்.
வேலுமணியின் விசுவாசத்தால், ஒப்பந்த வேலைகளில் சிலவற்றை மேற்பார்வையிட அனுமதி கொடுத்தார் தாமோதரன். அப்புறம் என்ன அதிரடிப்படை அமாவாசை தான். தனது நண்பரான கே.சி.பி. நிறுவனத்தினர் மூலம் ஒப்பந்ததாரர் ஆனார். முன்னாள் மேயர் செ.ம. வேலுச்சாமி, சசிகலா உறவினர் ராவணன் எல்லாருக்கும் நெருக்கமாகி, எம்.எல்.ஏ. சீட் வாங்கி, 2001ல் அமைச்சர் பதவியும் பெற்றுவிட்டார். திடீரென அமைச்சர் பதவியை ஜெ. பறித்து விட, பின்னர் கோவை வந்த ஜெ.வின் கார் டயரை ஜெயா டி.வி. கேமராமேன் சிபாரிசில் தொட்டுக் கும்பிட்டு, செ.ம.வேலுச்சாமியின் மா.செ. பதவியை வாங்கினார். 2011, 2016 என அமைச்சர் பதவிகளை வகித்தவர், ஜெ மறைவுக்குப் பிறகு, தனது தொண்டா முத்தூர் தொகுதிக்குள் ஆசிரமம் நடத்தும் ஜக்கிக்கு நெருக்கமானார்.
மத்திய அரசுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் ஜக்கி, வேலுமணியை தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்கிற ரேஞ்சுக்கு டெல்லியில் காய் நகர்த்துகிறார். வேலுமணி உயர, அவரது மகனும் உயர்ந்தார். நெதர்லாந்தில் இருந்த செந்தில்தான் வேலுமணி குடும்பத்தில் முதன்முதலில் அந்நிய மண்ணை தொட்டவர். வேலுமணி அமைச்சரான பிறகு அவரையும் இந்தியாவிற்கு வரவழைத்து அவருக்கு தனியாக கோவை மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலையம்பாளையம், பாலத்துறை, ஆகிய பகுதிகளில் மூன்று பிரமாண்ட கல்குவாரிகளை உருவாக்கி கொடுத்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக எம்-சேண்ட் மற்றும் கற்களை கொண்டு போகும் தொழிலை ஒப்படைத்தார்.
சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் கோவையில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வந்தது. இந்த சூயஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்கிறது. இதை பார்க்க சென்றதுதான் வேலுமணியின் முதல் வெளிநாட்டு பயணம், முதல்வர் எடப்பாடி வெளிநாட்டிற்கு சென்றபோது வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். அவருடன் அவர் மகன் விகாஸும் சென்றிருந்தார். எடப்பாடியின் மகன் மிதுன் எடப்பாடியின் வியாபார நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதை பார்த்த வேலுமணி தனது மகன் விகாஸையும் மிதுனைப் போல கொண்டுவர முடிவு செய்தார்.
எஞ்சினியரிங் படித்துக் கொண்டே பொள்ளாச்சி ஜெயராமன் மகனுடன் நட்பு வட்டாரத்தில் சுற்றிவந்த விகாஸை கொரோனோ பாதிப்புகள் தமிழகத்தில் அதிகமானபோது, பாதிப்பு அதிகமில்லாத ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தார் வேலுமணி. சூயஸ் கம்பெனி தயவுடன் ஆஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் கலக்கி கொண்டிருக்கிறார் விகாஸ்.

ஆஸ்திரேலியாவில் சுற்றித்திரிவதெற்கென தனியாக குட்டி விமானம் ஒன்று ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. விமானம் மட்டுமல்ல ஹெலிகாப்டர், ஜீப் என பயணம் செய்து ஸ்விமிங்பூல் பீச், என ஜாலியாக பொழுதை போக்கிக்கொண்டே வேலுமணியின் வியாபார நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டிருக்கிறார் விகாஸ். ஆஸ்திரேலியாவில் அவர் நடத்தும் களியாட்டாங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி கோவை உள்பட தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கின்றன.

தனது அண்ணன் அன்பரசனை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் தனது தம்பி செந்திலை கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் தான் சூலூர் தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ள வேலுமணி, தனது மகனை அரசியல்-வணிகத் தொடர்புகளுக்குத் தயார் படுத்துகிறார். தனது இளம்வயது சினிமா கனவை விகாஸை நடிகராக்கி நிறைவேற்றி, உதயநிதி போல அரசியலுக்கு கொண்டுவரவும் திட்டம் உள்ளதாம்.
வேலுமணி குடும்பத்தினரின் அபார வளர்ச்சியும், விகாஸின் ஆடம்பரமும் கோவை அ.தி.மு.கவினரை கடுப்பாக்கியுள்ளது. இதுபற்றி கருத்தறிய விகாஸ் வேலுமணியின் இன்ஸ்டா கிராமைத் தொடர்புகொள்ள நுழைய முயன்றோம். விகாஸ் அதை ஒரு தனிப்பட்ட பக்கமாக மாற்றிவிட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என தடுத்துள்ளார். இதுபற்றி வேலுமணியின் கருத்தை அறிய அவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோம். அவர் நமக்கு பதில் அளிக்கவில்லை.
-தாமேதரன் பிரகாஷ், சிவா