Skip to main content

திருநங்கையாக இருந்து சாதித்தது எப்படி..? - இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் பேச்சு!

Published on 19/02/2020 | Edited on 20/02/2020

இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இது ஆண், பெண் என்று அனைவருக்கும் சரிசமமான உரிமைகளை வழங்குகிறது. பெண்கள் ஆண்களுக்கு இணையான சமத்துவத்தை வாங்குவதற்கே ஒரு நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு திருநங்கையாக இருந்து கொண்டு ஆண், பெண் இருவருக்கும் கிடைக்கக்கூடிய அனைத்து உரிமைகளையும் தனக்கும் வேண்டும் என்று சட்டத்தோடு போராடி ஒரு ஆளுமை ஜெயித்து வெற்றிபெற்றுள்ளார்கள். அவர்களை பற்றித்தான் நாம் பேச இருக்கிறோம். அவ்வாறு போராடி ஜெயித்த திருநங்கை ரக்ஷிக்கா ராஜ் அவர்களிடம் தான் நாம் கேள்விகளை முன்வைக்க இருக்கின்றோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 

jh



இந்தியாவிலேயே முதல்முறையைக செவிலியராக பணியாற்றுவதற்குரிய லைசென்ஸை திருநங்கையாக பெற்ற முதல்நபர்  நீங்கள் தான். இது எப்படி சாத்தியமானது. அதற்காக நீங்கள் கடந்த பாதைகள்தான் என்னென்ன?

இந்த லைசென்ஸை திருநங்கைகள் பெறுவது என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. இதற்காக நான் பட்ட கஷ்டங்கள் மிக அதிகம். பல கடினமான சூழ்நிலைகளை கடந்துதான்  இது சாத்தியப்பட்டது. இதற்காக நான் பல்வேறு நிலைகளில் போராடி இருக்கிறேன். இதுகுறித்து இந்த துறையில் இருக்கும் அதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனால் எனக்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை. எனவே நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தேன். அங்கு எனக்கு வெற்றி கிடைத்தது. அதில் திருநங்கைகளை பெண்கள் பிரிவுக்கு கீழே தற்காலிகமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். அந்த உத்தரவுவின் அடிப்படையில் நான்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக செவிலியராக பணியாற்றுகிறேன். 

இந்த போராட்டங்கள் தான் என்னை வெற்றிபெற வைத்தது. நான் பிஎஸ்சி நர்சிங் படிக்குமே போது கூட பெற்றோர் ஒத்துழைப்பு என்பது முழுமையாக கிடைக்கவில்லை. சராசரிக்கும் கீழாகவே அது எனக்கு கிடைத்தது. எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தது என்னுடைய கல்லூரி முதல்வர்தான். அவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து என்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். கல்லூரியில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருந்தது எனக்கு பெரிய உதவியாக இருந்தது. நண்பர்கள், ஆசிரியர்கள்  என அனைவரும் எனக்கு உதவிகரமாக இருந்தார்கள். அந்த ஒரு காரணத்தால்தான் என்னால் பிஎஸ்சி நர்சிங் முடிக்க முடிந்தது. 

உங்களின் பள்ளிகாலத்தில் இருந்து கல்லூரிக் காலத்துக்கு மாறியது என்பது கண்டிப்பாக சவால் நிறைந்ததாகவே இருந்திருக்கும். அதை எவ்வாறு கடந்து வந்தீர்கள்?

கண்டிப்பாக, அது ரொம்ப சவால் நிறைந்ததாகவே இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அது ஒரு நரக வேதனை என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளியை விட்டு நின்றுவிடும் சூழல் கூட ஏற்பட்டது. ஆனால் என்னுடைய தன்னம்பிக்கையால் அது அடிப்பட்டு போனது. நான் பள்ளி காலத்தில் மாணவர்களோடு இருக்க வேண்டிய சூழ்நிலையில், பெரிய அளவில் கேலி, கிண்டலுக்கு உள்ளாக நேர்ந்தது. தனிமையில் இருக்கும் போது அழுவேன், எனக்குள் அது ஒரு தனிமையை உணர வைத்தது. 

கல்லூரி படிக்கும் காலத்திலும் இந்த மாதிரியான கேலி கிண்டல்கள் ஏற்பட்டிருக்கும். அதை எல்லாம் தாண்டி படிக்க வேண்டும், இலக்கை நோக்கி ஓட வேண்டும், புறக்கணிப்புக்களை புறந்தள்ள வேண்டும் என்று எது உங்களை தூண்டியது?

இந்த சமூகத்தில் படிப்பு இருந்தால் எதையும் சாதிக்க முடியும். இல்லை என்றால் நாமும் சாதாரண மனிதராக மட்டுமே வாழ முடியும். அப்படி இருந்த சூழ்நிலையில் நான் படிப்பை மட்டும் தான் ஒரு ஆயுதமாக எடுக்க வேண்டி இருந்தது. நம்முடைய முன்னேற்றத்திற்கு படிப்பை தாண்டிய வேறு ஒன்று இல்லை என்று நான் உணர்ந்து கொண்டேன்.