Skip to main content

பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்! பொறியில் சிக்கிய கவர்னர்!

Published on 09/10/2018 | Edited on 10/10/2018

"கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை! ஆடியோ ஆதாரம்!' என்னும் தலைப்பில், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதத்துறை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, நான்கு மாணவிகளிடம் கவர்னர் லெவல் வி.வி.ஐ.பி. ஒருவரின் பாலியல் தேவைக்காக செல்போனில் பேசிய விவகாரத்தை, கடந்த ஏப்ரல் 8-10 இதழில், முதன்முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன்தான்! மேலும், நக்கீரன் இணையதளத்திலும் "கல்வித்துறை கழுகுகளுக்கு மாணவிகளை இரையாக்கிட துடிக்கும் கல்லூரி பேராசிரியை!- அதிரவைக்கும் ஆடியோ ஆதாரம்' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டோம். அதன்பிறகுதான், அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, தமிழகத்தையே உலுக்கியது. பல தரப்பிலிருந்தும் வெடித்த போராட்டத்தால் ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார் நிர்மலாதேவி.

nirmaladeviதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ‘நிர்மலாதேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்திட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை நியமித்துவிட்டு, பத்திரிகையாளர்களையும் சந்தித்தார். ""எனக்கு 77 வயது ஆகிறது. வயதானவன். பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரன்கள் எனக்கு இருக்கிறார்கள்'' என்று தன்னிலை விளக்கம் வேறு தந்திருக்கிறார். கவர்னரின் பதற்றமே அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது என்று அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவிட, தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், ‘நிர்மலாதேவி வெறும் அம்புதான்! வி.வி.ஐ.பி.க்களின் பாலியல் தேவைகளுக்காக, அவரைப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்?’ என்னும் கேள்வியோடு களமிறங்கினோம்.

கல்லூரிப் பித்தலாட்டம்!

கன்னட மைனாரிட்டி அந்தஸ்து பெற்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியே ‘இடைக்கால நிர்வாகம்’ என்ற பெயரில், அதற்கான காலகட்டம் முடிந்துவிட்ட நிலையில், விதிமீறலாகத்தான் இயங்குகிறது’’ என்று கூறிய குண்டத்தூர் உறவின்முறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் “"13 உறவின்முறைகளுக்குச் சொந்தமான கல்லூரியை தேவாங்கர்குல மூன்று மிராசுகள் லாப நோக்கத்துடன் தனதாக்கிக் கொண்டார்கள்' என்றார். தற்போதைய கல்லூரி நிர்வாகத்தினரை குண்டத்தூர் உறவின்முறையினர் உன்னிப்பாக கவனித்து வருவதால், கல்லூரிக்குள் நடக்கின்ற பல அக்கிரமங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். காவல்துறை வட்டாரம் உட்பட எல்லா தரப்பினரையும் ஊடுருவினோம். பலரும் ஆதங்கத்துடன் கூறிய தகவல்கள் இதோ -

ஆல்-இன்-ஆல் அழகு ராணி ஆக்கப்பட்டார்!

கடந்த 15 வருடங்களாகவே கல்லூரியின் போக்கு சரியில்லை. கல்லூரியின் முன்னாள் செயலாளர்கள் சவுண்டையா, ராஜ்குமார் மற்றும் தற்போதைய செயலாளர் ராமசாமி ஆகியோரின் நடவடிக்கைகள் விரும்பத்தகாதவையாகவே இருக்கின்றன. 2008-இல் இக்கல்லூரியில் உதவிப் பேராசிரியை ஆகிவிட்ட நிர்மலாதேவி, 2012-இல் செயலாளர் பொறுப்பினை ஏற்ற தேவாங்கர் காரியக்காரர் அம்பலத்தைச் சேர்ந்த ராஜ்குமாரின் இயக்கத்தினாலேயே, ஆல்-இன்-ஆல் அழகு ராணியாகி கல்லூரியில் மற்றவர்களுக்குக் கிடைக்காத சலுகைகளைப் பெற்றார். அருப்புக்கோட்டை காவியன் நகரில் உள்ள நிர்மலாவின் வீடே ராஜ்குமாரின் ஆசியோடு கட்டப்பட்ட வீடுதான். நிர்மலாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது கணவர் ஒதுங்கிக்கொண்டதை, சகலவிதத்திலும் பயன்படுத்திக்கொண்டார் ராஜ்குமார்.
governor
கேவலமான விருந்தோம்பல்!


மதுரை ராயல் கோர்ட்டில் தங்கியிருந்த கல்வித்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்றி, ஏ கிரேடு மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரியில் நேர்காணல், நியமனம் என எல்லாவற்றிலும் ஊழல்தான். காமராஜர் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககமும் தேவாங்கர் கல்லூரியின் அத்துமீறலான பணி நியமனங்களுக்கு துணை போயிருக்கின்றன. இதற்குக் காரணம், கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளை வைத்து நடத்திய கேவலமான விருந்தோம்பல்தான் என்கிறார்கள் விவரமறிந்தோர்.

பாலியல் நெட்வொர்க்!

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆசிர் என்பவர் நிர்மலாவோடு படித்தவர். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் ஒரு விசிட்டிங் கார்டாக நிர்மலாவுக்குப் பயன்பட்டிருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருக்கும் ராஜராஜன் பெயரை உரிமையோடு உச்சரித்து வந்திருக்கிறார் நிர்மலா தேவி. இவரை வைத்துத்தான், தேர்வு மற்றும் மதிப்பெண்கள் விஷயத்தில் பின்னாளில் தன்னால் எதுவும் பண்ண முடியும் என்று மாணவிகளிடம் நிர்மலாவால் பேச முடிந்திருக்கிறது. ஆனாலும், திருச்சுழிக்காரரான பி.எச்டி. ஆய்வாளர் கருப்பசாமியும், உதவிப் பேராசிரியர் முருகனும்தான் அனைத்து மட்டத்திலும் நிர்மலாவுக்கு‘லிங்க்’ ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 20 நாட்கள் புத்தாக்க பயிற்சிக்காக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்த நிர்மலாவோடு, நெருக்கமாக அறிமுகமானவர் கல்வியாளர் கல்லூரி இயக்குநர் (பொறுப்பு) கலைச்செல்வன். அங்கிருந்தபடியே மாணவிகளைத் தொடர்பு கொண்டார் நிர்மலாதேவி. அவரது ஆடியோ பேச்சால், அதிர்ந்து போன மாணவிகள் கல்லூரி நிர்வாகத்துக்குத் தந்த நெருக்கடியால், நிர்மலாதேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனால், புத்தாக்கப் பயிற்சியைத் தொடர இயலாத நிலையிலும் அங்கேயே தங்கியிருந்து, கலைச்செல்வன் ஒத்துழைப்புடன் அகடமிக் கவுன்சில் அதிகாரிகள் தலையிட்டதன் பேரில் 6 நாட்களிலேயே சஸ்பென்சன் பீரியட் முடிந்துவிட்டதாகச் சொல்லி, மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொண்டனர்.

கவர்னரைக் காட்டிக்கொடுத்த நிர்மலா!

கடந்த ஜனவரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 51-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து, முனைவர் பட்டங்களை வழங்கினார். இதே பல்கலைக்கழகத்தில், கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். அன்று நடந்த கொடைக்கானல், மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில்தான் நிர்மலாதேவியும் கலந்துகொண்டிருக்கிறார். அந்த வீடியோவைத்தான் 4 மாணவிகளையும் பார்க்கவைத்து, காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கு குறித்துப் பேசியிருக்கிறார். அந்த வகையில்தான், "கவர்னர் தாத்தா இல்லை; கவர்னர் லெவல்' என்றெல்லாம் ஆடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். டெல்லி வரையிலும் கவர்னர் லெவல் வி.வி.ஐ.பி.க்களுடன் தனக்குள்ள நெட்வொர்க்கை பெருமையாகச் சொல்லி, கல்லூரியில் பலரையும் மிரள வைத்திருக்கிறார். அந்த ஆடியோவில் கூட, "சில விஷயங்கள் உள்ளே நடந்துச்சு. நடுவுல ஒரு ஸ்கிரீன் இல்லாம இருந்துச்சுன்னா...' என எதையோ மறைத்துப் பேசுகிறார்.

மதுரையிலிருந்து சென்னைக்கு நிர்மலாதேவி விமானத்தில் பறந்த விவரங்களைச் சேகரித்தாலே, அவருடன் பயணித்தவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

nakkheeran

மாணவிகள் வைத்த பொறி!

ஒரே நேரத்தில் பேச வேண்டும் என, 5 மாணவிகளை அழைத்திருந்தார் நிர்மலாதேவி. பி.எஸ்.சி. மூன்றாமாண்டு மாணவிகள் 4 பேரிடம் மட்டுமே அன்றைய தினம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் அவர். இன்னொருவரான பி.காம். முதலாமாண்டு மாணவி, பயந்துகொண்டு அந்த நான்கு மாணவிகளோடு சேரவில்லை. ஏனென்றால், நிர்மலாதேவியைப் பொறி வைத்துப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை அந்த மாணவி அறிந்திருந்ததால்தான்.

நான்கு மாணவிகளில் இருவருக்கு தந்தை இல்லை. ஒரு மாணவியின் தந்தை அதே கல்லூரியில் பணிபுரிகிறார். இன்னொரு மாணவியின் தந்தை, வங்கியில் பணிபுரிகிறார். கல்லூரியில் வேலை பார்ப்பவருக்கு நிர்மலாவின் நடவடிக்கைகள் தெரியும். தன் மகளையும் சீரழிக்கப் பார்க்கிறாரே என்று உடைந்து போகிறார். வங்கி ஊழியரோ, கல்லூரிக்கே வந்து, முதல்வரிடமும் செயலாளரிடமும் முறையிட்டு, நேரடியாகவே கோபத்தை வெளிப்படுத்துகிறார். உதவிப் பேராசிரியரும் மகளிர் மன்றத்தின் தலைவியுமான உமா ராணியிடமும், நிர்மலா தேவி குறித்து மாணவிகள் தரப்பில் புகார் செய்திருக்கின்றனர். அந்தப் புகாரை, கல்லூரி செயலாளர் ராமசாமியின் முன்வைத்து, நடவடிக்கை எடுக்கும்படி வேண்டியிருக்கிறார். ராமசாமியோ ‘ஆதாரம் இல்லாத புகார் இது’ என்று வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. பிறகுதான், லைனைத் துண்டிக்காமல், 20 நிமிடங்கள் வரை நிர்மலாவைப் பேச வைத்து, ரெகார்ட் செய்துவிட்டனர். நிர்மலாவும் அந்தப் பதிவில் மாட்டிக்கொண்டார். இதன் பின்னணியில் பெற்றோர் மட்டுமல்ல, உள்ளூர் கல்விப் போட்டியாளர்களும் இருப்பதாக பேச்சு றெக்கை கட்டிப் பறக்கிறது. நிர்மலா ஏற்கனவே மாணவிகளிடம் இப்படி ஆபாச பேச்சு பேசியதால்தான் இம்முறை பொறி வைத்து பிடித்தனர். அரசியல்வாதிகள், ஆட்சியில் இருப்போர், உயரதிகாரிகள் எனப் பலரும் பழைய மதுவும் புதிய பெண்ணையும் தேடுவதால் கல்லூரி மாணவிகளை நிர்மலா போன்றவர்கள் குறிவைக்கின்றனர்.

வி.வி.ஐ.பி.க்களுக்கு காட்டிய போட்டோக்கள்!

நிர்மலா தனது நெட்வொர்க்கில் இருப்பவர்களின் பார்வைக்கு, தான் தேர்வு செய்து வைத்திருக்கும் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை அனுப்பி வைப்பார். அதுவும், வி.வி.ஐ.பி. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்காக, முழு உருவ போட்டோக்களை அனுப்பி வைப்பார். அது எப்படி மாணவிகளின் படங்கள் இவருக்கு கிடைக்கின்றன? ""மாணவிகளுக்காக நான் ஒரு வாட்ஸப் குரூப் வைத்திருக்கிறேன். உங்களின் சந்தேகங்களை அதில் நீங்கள் கேட்கலாம். நான் பதிலளிப்பேன்'' என்று கூறி, ""உங்களின் பெயரைக் காட்டிலும் முகம்தான் எனக்கு முக்கியம். முகத்தைப் பார்த்தால்தான், கேள்வி கேட்பது யாரென்று உடனே தெரியும். அதனால், வாட்ஸப்பில் ப்ரொஃபைல் பிக்சராக உங்களது போட்டோவைத்தான் வைக்க வேண்டும்''’ என்று கறாராகச் சொல்ல, மாணவிகளும் அப்பாவித்தனமாக தங்களின் போட்டோவை வாட்ஸப் ப்ரொஃபைலில் வைத்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, யாரோடும் சேர்ந்திருக்காமல், தனித்தனியாக மாணவிகளின் முழு உருவமும் தெரியும் விதத்தில், போட்டோ எடுத்திருக்கிறார். ‘

""எதுக்கு மேடம் எங்களை இப்படி போட்டோ எடுக்குறீங்க?'' என்று ஒரு மாணவி கேட்டபோது, ""கண்ணுங்களா.. என் மகளுக்கு உங்க போட்டோவைக் காட்டுவேன்.. உங்க ஒவ்வொருத்தரோட டிரஸ் சென்ஸும் வேற வேற இல்லியா? அதைப் பார்த்து அவ சந்தோஷப்படுவா..''’என்று சமாளித்திருக்கிறார். இந்த முழு உருவப் படங்களால் ஈர்க்கப்பட்டுத்தான், ‘வி.வி.ஐ.பி.க்கள் டிமாண்ட் வைத்திருக்கிறார்கள். இவரும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

protest


கொடைக்கானலில் ஜாலி!

தற்போது 35 மாணவிகள் வரை தயங்கித் தயங்கி தங்களுக்கும் நிர்மலா தூண்டில் போட்டதைக் கூறியிருக்கின்றனர். இந்த மாணவிகளெல்லாம், நிர்மலாவின் ஆஃபரை மறுத்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக அந்தக் கல்லூரியில் நிர்மலா பணிபுரிந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிகள் எத்தனை பேரோ? மாணவிகளை மட்டுமல்ல, உடன் பணிபுரிபவர்களையும் வலையில் வீழ்த்துவதில் குறியாக இருந்திருக்கிறார். "வாங்க கொடைக்கானலுக்கு போவோம். ஜாலியா இருப்போம். அங்கே எல்லா வசதிகளும் பண்ணித் தருகிறேன். அதிக பணமும் தருகிறேன்' என்று சுயநிதிப்பிரிவு பேராசிரியர்களை அழைத்து, அந்த விவகாரம் செயலாளர் வரைக்கும் சென்றபோது, ‘"இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்' என்று நிர்மலா ஆதரவு நிலை எடுத்திருக்கிறார் செயலாளர் ராமசாமி.

இதுலயும் ஜாதி!

ramasamy""நாங்க ஒண்ணும் உங்ககிட்ட தப்பா பேசலைல்ல.. நிர்மலாதானே பேசினார்.. அதை எழுதிக்கொடுங்க..'' என்று முன் ஜாக்கிரதையாக மாணவிகளிடம் எழுதி வாங்கியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். ‘""எங்க காலேஜ் பேரு கெட்டுப் போச்சு. இதை அந்த காலேஜ்காரங்க கொண்டாடுறாங்க. அவங்க மட்டும் யோக்கியமாம். அவங்க நடத்துற சி.பி.எஸ்.இ. ஸ்கூல் பெண் முதல்வரை, அந்த நிர்வாகி செக்ஸ் டார்ச்சர் பண்ணி வெளியேற்றியது எங்களுக்குத் தெரியாதா?'' என்று அருப்புக்கோட்டையில் சாதி ரீதியாகவும், தேவாங்கர் கல்லூரிக்கு ஆதரவாக சிலர் முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள்.

“ராஜ்குமார் உஷார்!

""வீடு கட்டிக் கொடுத்ததிலிருந்து சகலமுமாக நிர்மலாதேவியை இயக்கியது நீங்களாமே?'' அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் கேட்டோம்.

""நீங்க சொல்லுறதெல்லாம் கரெக்ட். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். எல்லாமே வதந்திகள். உண்மைகள் என்றைக்காவது வெளிவரும். நிர்வாகத்தில் இல்லாதபோது, நான் பதில் சொல்ல முடியாது. நான் தெய்வத்துக்கு பயப்படுபவன். தப்பு பண்ணியிருந்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பிரச்சனைகள் என்னென்ன ரூட்லயோ போய்க்கிட்டிருக்கு. தேவையில்லாத விவாதப்பொருளாக நான் ஆகிவிடக்கூடாது'' என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

முன்னாள் செயலாளர் சவுண்டையா, தொடர்ந்து தொடர்புகொள்ள முடியாத நிலையிலேயே இருந்தார். முழு விவகாரத்தையும் எடுத்துக் கூறி, விளக்கத்தைப் பெறுவதற்காக, தேவாங்கர் கலைக்கல்லூரியின் செயலாளர் ராமசாமியை சந்திப்பதற்காக அந்தக் கல்லூரிக்குச் சென்றோம். தகவல் தெரிவித்து, அவரது அறைக்கு வெளியே பல மணி நேரம் காத்திருந்தோம். நம்மைச் சந்திப்பதை முற்றிலுமாக அவர் தவிர்த்தார்.

""பைத்தியத்தின் உச்சக்கட்டம்!'' - துணைவேந்தர் செல்லத்துரை
chelladurai
""உங்கள் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறதே?'' என்று காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் செல்லத்துரையிடம் கேட்டோம்.

""ஒரு கல்லூரி பேராசிரியை பேசக்கூடிய பேச்சா அது? இப்படி யாராவது மொபைலில் பேசுவார்களா? ஏற்கனவே அந்தக் கல்லூரி குறித்து நிறைய புகார்கள் வந்திருக்கின்றன. என் பெயரை இதில் சம்பந்தப்படுத்துவதெல்லாம் கற்பனைக்கும் மோசமான கற்பனை. இன்றைக்கு அரசின் சட்டங்கள், நீதிமன்றங்களின் உத்தரவெல்லாம் மிகக் கடுமையாக இருக்கின்றன. கல்லூரி மாணவிகளோடு தொடர்பு வைத்துக்கொள்வது, நெருப்போடு விளையாடுவது போன்றது. இது தற்கொலைக்குச் சமம். அந்தப் பொம்பளை யாரென்றே எனக்குத் தெரியாது. பல்கலைக்கழகத்தில் யாராவது அவரோடு தொடர்பில் இருக்கலாம். யாராவது பேசியிருக்கக்கூடும். அவங்க யார் யாருன்னு அந்தப் பொம்பள சொன்னால்தான் தெரியும்'' என்றார்.

இந்த விசாரணை சரிப்படாது!

nirmalaraniகல்லூரி வாசலில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் நிர்மலாராணி, ""இது டிராபிக்கிங் கேஸ்ல வரும். பெரிய பெரிய ஆளுங்க இதுல சம்பந்தப்பட்டிருக்காங்க. இந்த போலீஸ்காரங்க விசாரிக்கிறது, மற்ற விசாரணைகளெல்லாம் சரியா வராது. தங்களுக்கு மேல உள்ள வி.வி.ஐ.பி.கள் இதுல சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களைக் காப்பாற்றத்தானே செய்வார்கள்'' என்றார் அவநம்பிக்கையோடு.

வெளியில் கிளம்பும் பெண் பிள்ளைகளிடம் "ரோட்டுல பார்த்துப் போம்மா; பஸ்ஸுல பார்த்துப் போம்மா..'’ என்று பதறிப்போய் சொல்வார்கள் பெற்றோர். பாதுகாப்பானது என்று நம்பித்தான், படிப்பதற்கு கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். "கல்லூரிக்குள்ளும் மோசமானவர்கள் இருப்பார்கள். பார்த்து நடந்துக்கம்மா..' என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த எச்சரிக்கையை ஏப்ரல் 8-ந்தேதி இதழிலேயே ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு, கல்வி மையங்கள் முதல் அதிகாரங்கள் மையம் வரை உள்ள பூனைகளுக்கு மணி கட்டியது நக்கீரன். அந்த மணி ஒலித்ததன் விளைவாகத்தான், தானே முன் வந்து பேட்டி கொடுத்து பொறியில் சிக்கியிருக்கிறார்கள் கவர்னர் உள்ளிட்டவர்கள். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் தன் கடமையைச் செய்தால் உயர்கல்வித்துறையும் மாணவர்கள் எதிர்காலமும் காப்பாற்றப்படும்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

--------------------------------------------------------------------------

சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து!

nirmaladevi

16-ஆம் தேதி பேராசிரியை விவகாரம் பெரும் பரபரப்பாகிவிட, அருப்புக்கோட்டையில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது காவல்துறை. தேவாங்கர் கலைக்கல்லூரியின் செயலாளர் ராமசாமியிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் எழுதி வாங்கியது. அதே நேரத்தில், அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மயில், நிர்மலாதேவியின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். நிர்மலாதேவி கைது செய்யப்படுவார் என்பதை அறிந்த மீடியா நண்பர்கள் மயில் கிளம்புவதற்கு முன்பாகவே, மதியம் 12-30 மணியளவில் அருப்புக்கோட்டை காவியன் நகரில் உள்ள நிர்மலாதேவியின் வீடு முன்பாக குவிந்தனர். அங்கு வந்த மயில், உள்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், நிர்மலாதேவியை தொடர்புகொண்டு கதவைத் திறக்கச் சொன்னார். அவரோ, தன் வீட்டை மீடியாக்கள் முற்றுகையிட்டிருந்ததை லைவாக டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்ததைக் கூறி வெளியில் வர மறுத்தார். மேலதிகாரிகளுக்கு தெரிவித்தும் அதிரடி நடவடிக்கைகள் ஏதுமில்லை.

ஆறரை மணி நேரம் கடந்தது. யாரும் தெளிவாகப் படம் எடுத்துவிடக் கூடாது என்ற திட்டத்தோடு, லாவகமாக போலீஸ் வாகனத்தை நிர்மலாவின் வீட்டுக் கதவருகே நிறுத்தினர். நிர்மலாவே பூட்டைத் திறந்து வெளியில் வந்து, தாவிக்குதித்து வாகனத்தில் ஏறிக்கொண்டார்.

நிர்மலாதேவிக்கு ஏன் இத்தனை ராணி மரியாதை?’என்று அந்த அதிகாரியிடம் கேட்டபோது, “""ஆறரை மணி நேரம் வீட்டுக்குள் இருந்தபோது, யார் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடமெல்லாம் அவர் பேசியிருப்பார்தான். குறிப்பாக, வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டிருக்கிறார். அவர் போலீசுக்கோ, மீடியாக்களுக்கோ பயப்படக்கூடியவர் அல்ல. வீட்டை விட்டு வெளியில் வரும்போது, பொதுமக்கள் யாரும் செருப்பை வீசிவிடக்கூடாது; விளக்குமாற்றால் அடித்துவிடக் கூடாது என்ற பயம்தான் அவரை ஆக்கிரமித்திருந்தது. அதுதான் அவர் உடனே வெளிவராததற்கு காரணம்'' என்றார்.

அந்த ஆறரை மணி நேரத்தில் யார் யாரை தொடர்புகொண்டார் என்று கால் டீடெய்ல்ஸ் எடுத்தாலே, நிர்மலாவுடன் தொடர்பில் உள்ள அத்தனை பேரும் மாட்டிக்கொள்வார்கள்.

இரவு நேரம் என்பதால், அதுவும் பெண் என்பதால், எச்சரிக்கை உணர்வோடுதான் காவல்துறையினர் நிர்மலாதேவியை விசாரித்திருக்கின்றனர். காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ‘""விசாரணையின் போது, பதற்றமோ, பயமோ துளியும் நிர்மலாதேவியிடம் காணப்படவில்லை. இந்த நிலைக்கு ஏன் தள்ளப்பட்டேன்? யார் யாருடன் தொடர்பில் இருந்தேன்? என்பது குறித்தெல்லாம், ஓரளவுக்கே சொன்னார். திருச்சுழியைச் சேர்ந்த கருப்பசாமி, ஜூனியர் முருகன் என்று இரண்டு பெயர்களை, அவராகவே குறிப்பிட்டார். அதனால், நிர்மலாவைக் கட்டாயப்படுத்தி ஸ்டேட்மென்ட் வாங்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அந்த இரண்டு பேரை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தாலே, அத்தனை உண்மைகளும் வெளிவந்துவிடும்'' என்கின்றனர். ‘

""என்னுடைய தேவைக்காகவும், பொருளாதார தேவைக்காகவும்தான் நான் அப்படி பேசினேன்; நடந்துகொண்டேன். அந்த நான்கு மாணவிகளின் முன்னேற்றத்துக்காக பேசியது எப்படி தவறாகிவிடும்? நான் யாரையும் மிரட்டவில்லையே? ஆப்ஷன் என்றுதானே சொன்னேன். திட்டமிட்டு என்னை மாட்டிவிட்டார்கள்'' என்று புலம்பினார். ‘இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கணும்’ என்று எண்ணக்கூடிய கேரக்டராக அவர் இருக்கிறார். ஆனாலும், தன் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையை அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை என்றனர்.

குறிப்பிட்ட நாட்களில் நிர்மலாதேவி யார் யாரிடம் பேசினார் என்ற கால்-டீடெய்ல்ஸையும், அவர் பேசிய ஆடியோ பதிவையும் காவல்துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர். அதன்பிறகு, டேட்டா பேஸிலிருந்தே அவரது மூன்று கைபேசி எண்களையும் காலி பண்ணிவிட்டார்கள். அந்த நம்பர்கள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் செய்துவிட்டார்கள். வி.வி.ஐ.பி.யைக் காப்பாற்றுவதற்கோ, டெக்னிகலாக மிரட்டுவதற்கோ, அந்த ஆடியோ பதிவு ஆட்சியாளர்களுக்கு பலவிதத்திலும் உதவும் என்பதுதான், காவல்துறையினர் எடுத்த இந்த நடவடிக்கையின் நோக்கமாம். மேலிடப் புள்ளிகள் தொடர்புடைய டீடெய்ல்கள் என்பதால் ஃபைலை குளோஸ் செய்யும் வகையில், சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு அதிகம் என கல்வித்துறை வட்டாரத்தில் அச்சப்படுகின்றனர்.

--------------------------------------------

வி.ஐ.பி.க்கள் லிஸ்ட்!

பல்கலைக்கழகத்தினரோடு நெருக்கத்தில் இருந்த பெரிய ஆட்களோடும் நிர்மலாதேவியால் பழக முடிந்திருக்கிறது. ‘வள்ளலின்’ பெயரைக்கொண்டவர், பிறகு, விளையாட்டு என்ற பெயரில், அரசியல் மேலிடத்தை குஷிப்படுத்துவதற்காக, எல்லா ஆட்சிக் காலத்திலும், மாணவிகளின் வாழ்க்கையோடு விளையாடியபடியே இருக்கும் முரட்டுப்பின்னணி கொண்ட சோலையான அதிமுக நிர்வாகி என பல பெயர்கள், அவர்களின் நடத்தை காரணமாக, இந்த விவகாரத்தில் அடிபடுகின்றன. அரசியலின் தொடக்கத்தில் மாணவரணியில் இருந்த அந்த ஆளும் கட்சி பிரமுகர், தமிழக அரசில் இடம் பெற்ற பிறகு, தேவாங்கர் கல்லூரி விழாக்களிலும் தலைகாட்டியது உண்டு. அதனால், அவரையும் இந்த விவகாரத்தில் கோர்த்து விடுகிறார்கள். இந்நாள் அல்ல; முன்னாள் உயர்கல்வித்துறை பொறுப்பில் இருந்த ‘பழமான’ அந்த ஆளும் கட்சிப் பிரமுகரைக் கல்லூரி நிர்வாகத்தினர் அடிக்கடி குஷிப்படுத்தியிருக்கிறார்கள். மதுரை சீனியர் ஒருவர், சட்டத்தை வளைப்பதற்காக, இந்தக் கல்லூரியை எல்லாவிதத்திலும் பயன்படுத்திக்கொண்டார். மாணவிகளை வைத்து ‘நாக்’ கமிட்டியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் என்று அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டவரின் ‘செல்லமான’ சகோதரர், தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து, இதுபோன்ற விஷயங்களிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். அட, விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் கவர்னர் உட்பட, ராஜ்பவன் வட்டாரம் வரையிலும் தனக்கு தொடர்பு உண்டு என்பதை நிர்மலாதேவியே, செல்போனில் பேசி ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டாரே! பிறகென்ன?

 

----------------------------------------------------

மனம் திறந்த பேராசிரியை!

""சென்னையில் கணவனும் மனைவியுமாக நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில், அவரது நடவடிக்கைகளும் தொடர்புகளும் எனக்கு வெறுப்பை உண்டாக்கியது. அவரது நண்பர்களுக்கெல்லாம் என்னை விருந்தாக்கினார். அந்த வாழ்க்கை தந்த எரிச்சலில்தான் அருப்புக்கோட்டை வந்தேன். இங்கும் அப்போது தேவாங்கர் கல்லூரி செயலராக இருந்த சவுண்டையாவிடம் என்னை ஒப்படைத்தார். நிர்வாகத் தேவைக்காக பெரிய பெரிய மனிதர்களெல்லாம் எனக்கு மிகச் சாதாரணமாகிப் போனார்கள்.

நல்ல குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும் முற்றிலும் மாறிப்போனேன். சங்கரன்கோவில் இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஏர்போர்ட்டிலிருந்து காரில் செல்லும்போது யாராவது லிஃப்ட் கேட்டால், தயங்காமல் ஏற்றிக்கொண்டு அவரைப் பயன்படுத்திக்கொள்வேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வைத்து, கருப்பசாமியும் முருகனும் தங்கள் இஷ்டத்துக்கு ஆட்டி வைத்தனர். சொன்னபடியெல்லாம் கேட்டால், ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்கிவிட முடியும் என்று அடித்துச் சொன்னார்கள். தேவைகளையும் சொன்னார்கள். முதலில் துணை வேந்தர், அடுத்து வேந்தர் என்று பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களைக் கை காட்டினார்கள். அந்த நம்பிக்கையில்தான், அந்த 4 மாணவிகளிடமும், அவர்களின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளைச் சொன்னேன். இதுதான் பெரிய விவகாரமாகிவிட்டது'' என விசாரணையின் போது மனம் திறந்திருக்கிறார் நிர்மலாதேவி.’

-----------------------------------------

தாங்க முடியாத வலி!

thangapandianஅருப்புக்கோட்டை அரண்கள்’ முகநூல் அட்மினும் வழக்கறிஞருமான தங்கப்பாண்டியன் “விசாரணையில் எந்த அளவுக்கு உண்மை பேசுவார் நிர்மலாதேவி? பெரிய தலைகளை எப்படி காட்டிக்கொடுப்பார்? இந்த வழக்கில், ""அதிகார பலத்தோடு திமிங்கலங்கள் தப்பிவிடும். சில அயிரை மீன்கள்தான் மாட்டும். விசாரணை என்ற பெயரில் ஆதாரங்களை அழித்து, மூடி மறைக்கின்ற காரியங்கள் மட்டுமே நடக்கும். நிர்மலாதேவியும், அவரை இயக்கியவர்களும் அருப்புக்கோட்டைக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்திவிட்டார்கள்'' என்றார் வேதனையுடன்.