Skip to main content

குறைகுடம்தானே கூத்தாடும்?

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
குறைகுடம்தானே கூத்தாடும்? டி.ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?



பழம்பெருமை பேசியே சிலர் தங்கள் காலத்தை கழிப்பார்கள். அந்த மாதிரி ஆட்களின் பட்டியலில் நடிகரும் டைரக்டருமான டி.ராஜேந்தர் இணைகிறாரோ என்ற சந்தேகம் சமீப காலமாக ஏற்பட்டுள்ளது.

அவருடைய நடவடிக்கைகள்தான் இப்படி யோசிக்க வைக்கின்றன. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் எதுகை மோனை என்ற பேரில் மொக்கையாக வசனம் பேசி பரபரப்பை ஏற்படுத்துகிறார். பிரஸ்மீட் என்ற பெயரில் நூறு மைக்குகளை வரவைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி யூ டியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் இடம்பிடிக்க முயற்சிக்கிறார். இதெல்லாம் சீனியா் இயக்குனர், சீனியர் நடிகர் என்ற வகையில் டி.ராஜேந்தருக்கு பெருமை தரக்கூடிய விஷயமல்ல என்பதை அவர் உணரவில்லை என்பதையே காட்டுகிறது.

சினிமா புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் குறிப்பிட்ட அந்த படத்தைப்பற்றியும் நடிகர்களைப் பற்றியும் பேசுவதை விட்டுவிட்டு தன்னை முன்னிறுத்தும் வகையில் பேசுவது டி.ராஜேந்தரின் பாணியாகிவிட்டது.

மூன்று முதலமைச்சர்களை எதிர்த்து அரசியல் செய்தவன். எம்ஜியாரை எதிர்த்து சினிமாவில் வளர்ந்தவன் என்றெல்லாம் டி.ராஜேந்தர் பெருமை பேசுவது வாடிக்கை. ஆனால், அப்படி அவர் எதிர்த்து அரசியலில் சாதித்தது என்ன என்று கேட்டால் பூஜ்யம்தான் விடையாக கிடைக்கும்.

சினிமாவில் செண்டிமென்ட் காட்சிகளாலும் அன்றைக்கு புதிதாக இருந்த எதுகை மோனை வசனங்களாலும் புகழ்பெற்றார் என்பது நிஜம்தான். சில வெற்றிப்படங்களை கொடுத்தார் என்பதும் உண்மைதான்.

அதற்காக அவரை தமிழ் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடி முடித்துவிட்டார்கள். காலம் பூராவும் அவரை தலையில் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தால் சிறுபிள்ளைத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

இன்றைய சினிமா பாணியே முழுவதுமாக மாறிக் கொண்டிருக்கிறது. நிறைய பேசினாலே ரசிகர்கள் எழுந்து வெளியே போய்விடுகிறார்கள். புதிய நடிகர்களுக்கு இவருடைய படங்களில் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதே மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால் அவருடைய படங்கள் அனைத்துமே இன்றைய தொலைக்காட்சித் தொடர்களைப் போன்றவைதான்.

இந்த உண்மைகளை ராஜேந்தர் உணரவில்லை. மாறாக தன்னை மிகப்பெரிய சாதனையாளர்போல பில்டப் செய்துகொண்டு இளம் தலைமுறையினரை காய்ச்சி எடுத்து பரபரப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற விழித்திரு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ராஜேந்தர் கலந்து கொண்டார். அந்த படத்தில் நடித்த நடிகை தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தரின் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.

இதற்காக தன்ஷிகாவை உண்டு இல்லையென்று பண்ணிவிட்டார் ராஜேந்தர். அவர் பேசப்பேச தன்ஷிகா பதற்றம் அடைந்தார். தனக்கு மேடையில் பேசி பழக்கமில்லை என்றும், வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் மன்னிப்பு கேட்டார். அப்போதும்கூட டி.ராஜேந்தர் தன்ஷிகா மீது இரக்கம் காட்டாமல் அடுக்குமொழி வசனம் பேசிக்கொண்டிருந்தார்.

கண்கள் கலங்கி, ராஜேந்தரின் காலில் விழும் நிலைக்கு சென்றார் தன்ஷிகா. அதையும் கண்டுகொள்ளாமல் தனது பெருமைகளை பேசுவதிலேயே குறியாக இருந்தார்.

இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் பேசும்போது மேடையில் இருந்தவர்கள் ரசித்து சிரித்தார்கள். யாருமே தன்ஷிகாவின் மனநிலையைக் கண்டுகொள்ளவில்லை. அவருக்காக பரிந்து பேச யாருமே இல்லை.

நிகழ்ச்சி முடிந்ததும் தன்ஷிகா சரக்கென்று எழுந்து மேடையை விட்டு வெளியேறினார். டி.ராஜேந்தரின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நடிகர்சங்க பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இனியாவது டி.ராஜேந்தர் தனது போக்கை மாற்றிக்கொள்வாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்