Skip to main content

"திமுக வேணாம் போடா" என்ற வார்த்தை கூடத்தான் ட்ரெண்ட் ஆனது... - டீ சர்ட் விவகாரத்தில் கே.டி ராகவன் பதில்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020
gh

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தது. 

 

லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த பல்வேறு நபர்கள் இதற்கு திமுக தான் காரணம் என்றும், அவர்கள் தூண்டுதல் இதில் இருக்கிறது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இதில் உண்மை இருக்கிறதா, இல்லை இது வழக்கம் போல் எதிர்தரப்பு மீது செய்யப்படும் அரசியலா என்ற பல்வேறு கேள்விகளை பாஜகவை சேர்ந்த கே.டி ராகவனிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,  

 

தமிழகத்தில் இதற்கு முன்பு மிகப்பெரிய அளவில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. யார் கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்பது என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு இதற்கு அரசியல் சாயம் எதற்காக பூசப்பட்டு வருகின்றது?

 

யாரும் எந்த மொழியையும் திணிக்க முடியாது என்பதுதான் நிஜம். தமிழ்நாட்டில் உருது பேசுபவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இல்லையா, தெலுங்கு பேசுபவர்களுக்காக தெலுங்கு கற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றது. அதைப்போலத்தான் இந்தி மொழியும். புதிய கல்விக்கொள்கையில் எந்த இடத்திலாவது மூன்றாவது மொழியாக இந்தியை படிக்க வேண்டும் என்றும் என்று கூறி இருக்கிறார்களா? 

 

அது உண்மையாக இருந்தால் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியுமா? மும்மொழி கொள்கை என்றால் அங்கே இந்தி தானே வந்து நிற்கின்றது?

அவர்களுக்கு போதுமான வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம். அரசாங்கத்திடம் பெரிய ஆற்றல் இருக்கிறது. மாணவர்களின் மொழி விருப்பத்துக்கு ஏற்ப ஆசிரியர்களை அவர்கள் நியமிக்க வேண்டும். இந்தி தெரியாது போடா என்று பெரிய ட்ரெண்டிங்கில் போனதாக சொல்கிறீர்கள், திமுக வேணாம் போடா என்று கூடத்தான் பெரிய ட்ரெண்டிங் ஆனது. அதுவும் முதல் இடத்தில் வந்தது. அதை நீங்கள் பார்க்கவில்லையா? 

 

தமிழகம் முன்னேறி இருக்கின்றது என்பதை உங்கள் தலைவரும் ஏற்றுக்கொள்கிறார், புதிதாகக வந்த அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார். இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா, தமிழகம் முன்னேறி இருக்கிறது என்பதை பற்றிய தங்களின் கருத்து என்ன? 

யாருடன் ஒப்பிடுகிறோம் என்பதில் இருக்கிறது. தமிழகத்தை பீகாரோடு ஒப்பிடக்கூடாது. இந்தியாவை சோமாலியாவோடு ஒப்பிடக்கூடாது. அப்படி ஒப்பிட்டால் இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக இருப்பதாகத்தான் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். ஒப்பிடுதல் இவ்வாறு இருக்க கூடாது. 

 

வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்போம் என்று கூறிய பாஜக அதற்கான முயற்சிகளை எடுத்து அதனை நிறைவேற்றியுள்ளதா? 

நாங்கள் வேலை வாய்ப்பு உருவாக்குவோம் என்று கூறினமே தவிர அனைவருக்கும் அரசாங்க வேலை தருகிறோம் என்று கூறவில்லை. புதிய வேலை வாய்ப்புகளை முத்ரா முதலிய திட்டங்கள் மூலம் உருவாக்கி பயனாளிகளுக்கு கொடுத்து வருகிறோம். பல திட்டங்களை நாங்கள் புதிதாக கொண்டுவந்துள்ளோம். எனவே என்ன கூறினவோ அதனை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம். இதைத்தான் எங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருக்கிறோம்.

 

பக்கோடா போடுவது கூடத்தான் நல்ல வேலை என்று பிரதமர் கூறியுள்ளாரே? 

அப்படி பிரதமர் சொல்லவில்லை. அதையும் தாண்டி பக்கோடா போடுவது என்பது ஒரு வியபாரம். இன்று முத்ரா திட்டத்தின் கீழ் பல்வேறு நபர்கள் கடன் வாங்கி தொழில் செய்து வருகிறார்கள். இது ஒரு வேலைவாய்ப்பு தானே, இவர்கள் பலர் முதலாளிகளாகக்கூட மாறி இருக்கிறார்கள். இது எல்லாம் இந்த அரசாங்கத்தின் திட்டங்களால் நடந்த ஒன்று தானே. அப்புறம் எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று கூறுகிறீர்கள்.