நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளர் இராஜசேகரன் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டது சுகாதாரத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கவுன்சில்களில் நிரப்பப்பட்ட பணிநியமனத்தில் மாபெரும் முறைகேடுகள் செய்த சித்த மருத்துவக் கவுன்சில், இந்திய மருத்துவக்கவுன்சில், ஹோமியோபதி மருத்துவக்கவுன்சில் ஆகிய மூன்று கவுன்சில்களுக்கும் பதிவாளரான இராஜசேகரன் குறித்து நக்கீரனில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம். நக்கீரனின் செய்தியை வைத்து அதிரடி விசாரணைக்கு உத்தரவிட்டார் சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ்.
விசாரணையில் தனது உறவினர்களுக்கு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் முறைகேடாக அரசுப்பணி வழங்கியிருப்பது தெரியவந்ததால் சித்த மருத்துவக் கவுன்சில், இந்திய மருத்துவக்கவுன்சில், ஹோமியோபதி மருத்துவக்கவுன்சில் ஆகிய மூன்று கவுன்சில்களின் பதிவாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் பதிவாளர் இராஜசேகரன்.
ஆயுஷ்’ எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி அண்ட் யோகா, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவர்கள் ஒரிஜினலா? போலியா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கவுன்சிலிலேயே போலியான பணிநியமனங்கள் நடந்திருக்கிறது. இப்படியிருந்தால், போலி டாக்டர் சான்றிதழ்களை ஏன் இவர்களே அச்சடித்துக் கொடுத்து போலி டாக்டர்களை உருவாக்கமாட்டார்கள்?” என்று கேள்வி கேட்டு ஷாக் கொடுத்தார்கள் நக்கீரனை தொடர்புகொண்ட மருத்துவர்கள்.
இதனால், நாம் விசாரணையில் இறங்கியபோதுதான் பதிவாளர் இராஜசேகரனின் தில்லுமுல்லுகள் தெரியவந்தது.
ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி அண்ட் யோகா மருத்துவங்கள் படித்தவர்கள் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலில் பதிவுசெய்தால்தான் மருத்துவர்களாக பணி செய்யமுடியும். அதேபோல், சித்தமருத்துவம் படித்தவர்கள் சித்தமருத்துவ மன்றத்திலும் ஹோமியோபதி மருத்துவம் படித்தவர்கள் ஹோமியோபதி கவுன்சிலிலும் பதிவு செய்யவேண்டும். ஹோமியோபதி மருத்துவக்கழகத்திற்கு மட்டுமே தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் உள்ளார். மற்ற, இரண்டு கவுன்சிலுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படாததால் தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்த, மூன்று கவுன்சில்களுக்குமே தமிழக சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற இராஜசேகரன் என்பவர்தான் பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்த, கவுன்சில் அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள்தான் எந்த விதமான தகுதியும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தேர்வுகளும் வைக்கப்படாமல் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் இதில் பெரும்பாலானாவர்கள் பதிவாளர் இராஜசேகரனின் உறவினர்கள் என்பது நமது விசாரணையில் தெரியவந்தது.
தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இம்மூன்று கவுன்சில்களும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளன. இதில், சித்த மருத்துவமன்றம் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலில் பதிவாளர் இராஜசேகரனுக்குக்கீழ் உதவியாளர் ஜெயக்குமார், இளநிலை உதவியாளர் நிர்மல்குமார், தட்டச்சர் மோகனாம்பாள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பாலாராஜ், அலுவலக உதவியாளர் எசக்கியேல், துப்புரவு பணியாளர் இந்திராணி ஆகியோரும் ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலில் கவிதா, பாபு, ஜோசுவா என்கிற வாசுதேவன், கோமதி, வில்லியம், டேவிட் ஆகியோர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். சித்த மருத்துவமன்றம் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலுக்கு அரசாணைப்படி தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம்.
இதைப் பயன்படுத்திக்கொண்ட பதிவாளர் இராஜசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் இரண்டு மாதம் மூன்று மாதம் என தற்காலிகப் பணிகளை வழங்கி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக பணியமர்த்தி வைத்திருக்கிறார்.
மேலும், சித்தமருத்துவமன்றம் மற்றும் இந்திய மருத்துவக்கவுன்சில் இரண்டிலும் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் எந்த தகுதி, திறமை, தேர்வும் வைத்தும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுகுறித்து, ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டாலும் கொடுக்காமல் மறைத்துவந்தார் பதிவாளர் இராஜசேகரன்.
ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலுக்கு அதன் விதிப்படி டி.என்.பி.எஸ்.சி. மூலமோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோதான் தகுதி, திறமை, தேர்வு அடிப்படையில் நியமிக்கவேண்டும். அப்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஹோமியோபதி கவுன்சிலில் பணிநியமனம் செய்யப்பட்டவர்தான் உதவியாளர் கவிதா.
ஆனால், இங்கு நடக்கும் தில்லுமுல்லுகள் குறித்து கவிதா வாய்திறக்கக்கூடாது என்பதற்காக கவிதாவின் தங்கை மோகனாவுக்கு சித்தமருத்துவ மன்றத்தில் பணி வழங்கிவிட்டார் இராஜசேகரன். கைலாசம் என்பவர் இத்துறையில் பணியின்போது இறந்துபோனதால் கருணை அடிப்படையில் அவரது மகளுக்கு துப்புறவு பணியாளர் பணி வழங்கப்பட்டது. ஆனால், இவரையும் சரிகட்ட முறைகேடாக ரெக்கார்டு க்ளார்க்காக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜோசுவா என்கிற வாசுதேவன், வில்லியம், அண்ணன் மகன் டேவிட், நிர்மல்குமார், பாலாராஜ் உள்ளிட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பதிவாளர் இராஜசேகருக்கு வேண்டப்பட்டவர்களே. அதுவும், இசக்கியேல் என்பவர் இவரது பர்சனல் கார் டிரைவர். ஆனால், இவருக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக சித்தமருத்துவமன்றத்தில் பியூன் என்ற பணியை வழங்கி அரசு சம்பளத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
மதபோதகர் போல எப்போதும் கையில் பைபிளை வைத்துக்கொண்டு நேர்மையானவர்போல் காட்டிக்கொள்ளும் பதிவாளர் இராஜசேகரன் என்பதால் 67 வயதாகியும் மூன்று கவுன்சில்களுக்கும் பதிவாளராக இருந்துகொண்டு மூன்று சம்பளம் என 1 லட்சத்திற்குமேல் வாங்குவதோடு ஓய்வூதியமும் பெற்றுவருகிறார். இன்னும் சொல்லப்போனால், ஹோமியோபதி கவுன்சிலில் பதிவாளரின் வயது 62 தான் இருக்கவேண்டும். ஆனாலும், தற்போது சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராக உள்ள அன்பு போன்ற அதிகாரிகள் இவருக்குக்குகீழ் பணிபுரிந்தவர்கள் என்பதால் அந்த அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு இவரே மூன்று பதவிகளையும் அனுபவிப்பதோடு பணிநியமனத்திலும் மாபெரும் மோசடியை செய்திருக்கிறார்.
இவரது, தில்லுமுல்லுகள் குறித்து ஆர்.டி.ஐ.யில் மறைக்கிறார் என்று மேல்முறையீடு செய்தால் ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலின் தலைவரும் மேல்முறையீட்டு அலுவலருமான ஞானசம்பந்தத்திடம் கடிதத்தை காண்பிக்காமலேயே இவரே மேல்முறையீட்டு அலுவலராக சட்டத்துக்குப்புறம்பாக பதில் அனுப்புவார். இப்படி, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலி பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.