Skip to main content

“ராஜேந்திர பாலாஜியையும் செல்லூர் ராஜுவையும் அமைச்சராக வைத்திருந்தவர்கள் உதயநிதியை பற்றி பேசலாமா?” - கார்த்திகேய சிவசேனாதிபதி கேள்வி

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

i

 

தமிழகத்தில் நீண்ட காலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, "கட்சியில் அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான பதவிகளையும் பொறுப்பாகவே கருதிச் செயல்பட்டு வந்தார். இதை நாம் அனைவரும் நேரில் பார்த்துள்ளோம். 

 

குறிப்பாகச் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் அவரின் உழைப்பை நாம் பார்த்துள்ளோம். அவரின் உழைப்புக்கு நல்ல பலன் தேர்தல் முடிவுகளில் கிடைத்துள்ளது. எனவே அவர் இந்த பொறுப்புகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுவார். இரண்டு துறைகள் முழுவதுமாக அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அது மாற்றப்பட்டிருக்கலாம். அதுதொடர்பாக முதல்வருக்குத் தான் தெரியும். அதிமுக ஆட்சியை போல் திமுக அமைச்சர்கள் இல்லை. அதிமுக அமைச்சரவையிலிருந்த 30 பேருமே விஞ்ஞானிகள். அனைவருமே நோபல் பரிசு பெறக்கூடிய தகுதி படைத்தவர்கள். அவர்களின் விஞ்ஞான பூர்வ அறிவை நாம் அவர்களின் ஆட்சியில் பார்த்தோம். எனவே இந்த மாற்றம் என்பது நிர்வாக ரீதியிலான ஒன்றே தவிர வேறு ஒன்றும் இல்லை. 

 

அதிமுக அமைச்சர்களுக்கு முதலில் வருவோம். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் இருந்த அறிவுப்பூர்வமாகச் செயலாற்றக்கூடிய அமைச்சர்கள் முந்தைய அதிமுக ஆட்சியிலிருந்தார்களா? ராஜேந்திர பாலாஜியும், செல்லூர் ராஜுவும்தான் அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். இவர்கள் எப்பேர்ப்பட்ட அறிவாளிகள் என்று அனைவருக்கும் தெரியும். மோடி டாடி என்று கூறும் அளவிற்குத்தான் இவர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர்களாக வந்தார்கள். ராஜேந்திர பாலாஜி போன்ற அமைச்சர்களை நாங்கள் உருவாக்கவில்லை என்று இவர்கள் வருத்தப்படுகிறார்களா என்று கூடத் தெரியவில்லை" என்றார்.