அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.
இதையடுத்து தொண்டர்கள் இனி அ.தி.மு.க. நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கட்சியின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் ஜீன் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த 3 எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திடம் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையா?
இதேபோன்று ஆலோசனைக் கூட்டம் என்றால் அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சொல்லுவார்கள். இல்லையென்றால் கடிதம் அனுப்புவார்கள். ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால் இப்போது எந்த தகவலும் வரவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 3 பேர் மீது (கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு) நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றதால் அனுப்பவில்லையா?
அது என்னவென்று தெரியவில்லை. அழைப்பு அனுப்பாதது குறித்து அதிமுக தலைமைதான் சொல்ல வேண்டும். அழைப்பு வராததால் கலந்து கொள்ளவில்லை.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறினார். அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ராமச்சந்திரனும் அதனையே வலியுறுத்தினார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இப்போது இருக்கும் இருவரில் ஒருவர் ஒற்றைத் தலைமையாக இருக்க வேண்டுமா?
ஒற்றைத் தலைமை அவசியம் வேண்டும் அதிமுகவுக்கு. ஜெயலலிதாவால் காக்கப்பட்ட கட்சியை, அவரால் உருவாக்கப்பட்ட ஆட்சியை சிறப்பாக வழிநடத்தக்கூடிய ஒற்றைத் தலைமை வேண்டும். இப்போது ஆண்டுக்கொண்டிருப்பவர்கள்தான் ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒற்றைத் தலைமையை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்களிக்கக்கூடிய மக்களும் ஏற்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும். கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளவர்கள் முதல் அனைவரும் தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்தலை நடத்தி தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்தால் கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். பொதுமக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
கட்சியில் வெளிப்படைத்தன்மை வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் எத்தனையோ அமைச்சர்களை மாற்றியிருப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோது வெளிப்படைத்தன்மை இருந்தது. இப்போது யார் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அமைச்சர்கள் பேட்டி கொடுக்கிறார்கள், எம்எல்ஏக்கள் பேட்டி கொடுக்கிறார்கள். இவர்கள் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த ஐயப்பாடு எனக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலேயே இருக்கிறது.