Skip to main content

நடிகை சித்ரா விவகாரம்! ஹேம்நாத் ரவியின் அப்பா காவல் ஆணையரிடம் கொடுத்த பரபரப்பு புகார்!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

ddd

 

நடிகை சித்ராவின் தற்கொலை, மர்ம மரணம் என்கிற திசையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஈ.வி.பி ஃபிலிம் சிட்டிக்கு எதிரே உள்ள “"பிரசன்ட்ஸ் ஸ்டெ' ஹோட்டலில் சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் காணப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்தது சரியாக இரவு 2.45 மணிக்கு என போலீசாரால் சொல்லப்படுகிறது. 

 

நெடுஞ்சாலையை ஒட்டி அந்த ஹோட்டல் இருந்தாலும், உள்ளே செல்வதற்கு 30 அடி சாலை உள்ளது. அந்த 30 அடி சாலையில் சென்றால் தனித்தனி குடியிருப்புகளாகக் கட்டப்பட்ட ஹோட்டல் அறைகள் வரும். நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் என வாடகை வசூலிக்கப்படும் அந்த அறைகளில் நடப்பவை வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாது. 

 

2.45 மணிக்கு நடந்த இந்த மரணத்தைப் பற்றி விசாரிக்க 45 நிமிடம் கழித்துத்தான் போலீசார் வந்திருக்கிறார்கள். சித்ரா எத்தனை மணிக்கு அந்த ஹோட்டலுக்கு வந்தார் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. 

 

சித்ராவின் அறையிலிருந்து ஹேம்நாத் எத்தனை மணிக்கு வெளியே சென்றார் என்பதற்கான பதிவு எதுவும் இல்லை. சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடப்பதை ஹேம்நாத்தும் அந்த ஹோட்டல் மேனேஜரான கணேஷ் என்பவரும்தான் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் சித்ராவை தூக்கில் இருந்து கழட்டி இறக்கியிருக்கிறார்கள். இதுவே சட்டவிரோதம் என்கிறார்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.

 

ஒருவர் பிணமாகக் கிடக்கிறார் என்றால் அந்தப் பிணத்தை யாரும் தொடக்கூடாது. காவல்துறை வந்து தடயங்களைச் சேகரித்த பின்பு அவர்கள்தான் பிணத்தை அப்புறப்படுத்த வேண்டும். இவையெல்லாம் சித்ராவின் விஷயத்தில் நடக்கவில்லை. அவசர அவசரமாகத் தற்கொலை நடந்த தடயங்கள் மாற்றப்பட்டிருக்கலாம்- மறைக்கப்பட்டிருக்கலாம் என விஷயம் தெரிந்த காவல்துறை அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். போலீஸ் விசாரணையில் ஹேம்நாத் தெளிவான பதில்களைச் சொல்லவில்லை.

 

முதலில், சித்ரா குளிக்கிறார் அதனால் நான் வெளியே போனேன் என்று சொன்ன ஹேம்நாத் அதன்பிறகு, காரில் ஒரு ஆவணத்தை எடுக்கப் போனதாக மாற்றிச் சொன்னார். மொத்தத்தில் ஹேம்நாத் எதற்காக சித்ராவை விட்டுவிட்டு அறைக்கு வெளியே போனார். எவ்வளவு நேரம் அவர் வெளியே இருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

ஹேம்நாத் வெளியே சென்றிருந்த சமயத்தில் வேறு யாராவது சித்ராவின் அறைக்குள் நுழைந்து அவரை கொலை செய்துவிட்டு, நட்சத்திர ஹோட்டல் கதவு பூட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மூடும் வசதியைப் பயன்படுத்தி அறையை மூடிவிட்டுச் சென்றிருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது எனவும், சித்ராவின் மரணத்தில் மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், அந்த நபர் சித்ராவுக்கு நன்கு தெரிந்த அரசியல் புள்ளிகளில் யாராவது ஒருவராகவும் இருக்கலாம் என்றும் சந்தேகங்களைக் கிளப்பும் போலீஸ் அதிகாரிகள், சித்ராவின் பிணத்தை அவசர அவசரமாக ஹேம்நாத்தும், ஹோட்டல் மானேஜர் கணேசும் தூக்கில் இருந்து இறக்கியதை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள்.

 

அதிகாலை 3.30 மணியிலிருந்து காலை 6.30 மணிவரை விசாரணை செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன், டி.எஸ்.பி சுதர்சனம், துணை ஆணையர் டாக்டர் தீபா சத்தியன் ஆகியோர் இதுகுறித்து ஒன்றும் பேசவில்லை. ஹேம்நாத் ரவியின் அப்பா ரவிச்சந்திரன் காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில், சித்ரா குடிப்பழக்கம் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார்.

 

அவர் திருவான்மியூரில் ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு வீடும், 75 லட்சம் மதிப்புள்ள ஆடி காரும் வாங்கியிருக்கிறார். இதில் ஒரு தொகை சித்ராவுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் கொடுத்திருக்கிறார்கள். மீதமுள்ள பணத்திற்கு அவர் தவணை கட்டி வருகிறார். அவர் பலருடன் தொலை பேசியில் பேசுவார். முக்கியமானவர்களுடன் பேசும்பொழுது அவர் தனியாகப் போய்தான் பேசுவார். ஒரு சில சமயம் மிகவும் பதற்றத்துடன் பேசுவார். அவர் நடிகர்களுடன், அரசியல்வாதிகளுடன் போனில் பேசிட்டு அந்த எண்களை அழித்துவிடுவார். அவர் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள சி.சி.டி.வி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன என்கிற தகவல்கள் வெளிவருகிறது. அதேபோல் அவரது செல்ஃபோன் பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது எனச் சந்தேகங்களை அந்தப் புகாரில் எழுப்பியுள்ளார்.

 

இப்படி பிரபலங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் சித்ரா, திருமணம் செய்து கொண்டால் அவரது டி.ஆர்.பி ரேட் குறைந்துவிடும் என அவரது தாயார் நினைத்ததால், சித்ராவுக்குத் திருமணம் செய்துவைக்கத் தயங்கினார். ஆனால் நான் கடன் வாங்கி அவருக்குத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தேன் என காவல்துறை கமிஷனருக்கு அளித்த புகாரில் தெரிவிக்கும் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், அந்தப் புகாரில், ரக்ஷனுடன் சித்ராவுக்கு இருக்கும் நட்பு பற்றியும், ரக்ஷன் சித்ராவை மிரட்டியிருக்கக்கூடும் என சித்ராவின் நண்பர்கள் இணையத்தளங்களில் சொன்ன செய்திகளையும் குறிப்பிடுகிறார்.

 

சித்ராவுக்குத் திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோரே விரும்பவில்லை. அவருக்கு மிரட்டல் இருந்தது. சித்ராவின் தற்கொலை பற்றிய செய்தி தாமதமாகத்தான் தெரிந்தது எனவும், 5 நாட்கள் விசாரணைக்குப் பின்பு ஹேம்நாத் குற்றவாளி ஆக்கப்பட்டான் எனவும் ஹேம்நாத்தின் அப்பா தெரிவிக்கிறார். இதுபற்றி இன்றுவரை சென்னை மாநகரக் காவல்துறை எதுவும் பேசவில்லை. இணையத்தளங்களில் வரும் செய்திகள் பற்றி நசரத்பேட்டை காவல்நிலைய காவலர்கள் முதல் போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் வரை ஒரு கடுமையான மவுன விரதத்தையே கடைப்பிடிக்கிறார்கள்.
 

cnc

 

சித்ரா மர்ம மரணம் பற்றி நக்கீரன் வெளியிட்ட முதல் கவர் ஸ்டோரியிலேயே ஹேம்நாத்துடன் இந்த சந்தேக வலை முடிந்துவிடாது என்பதையும் இதன் பின்னணியில் மேலும் சிலர் இருப்பார்கள் என்பதையும் வெளியிட்டிருந்தோம். தற்போது சின்னத்திரை நடிகர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அமைச்சர் குடும்ப வாரிசுகள் எனப் பல பெயர்களும் சந்தேக வலைக்குள் வருகின்றன. அத்துடன், சித்ராவுக்கு பெரிய திரை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான ஃபோட்டோ ஷூட் செய்த டீம் உள்பட பல தரப்பிலும் விசாரணை வளையம் விரிவடைய உள்ளது என்கிறார்கள் காவல் துறையினர்.

 

நள்ளிரவு கடந்து நடந்த அந்த மர்ம மரணத்தின்போது சித்ரா-ஹேம்நாத் ஆகியோரைக் கடந்து மூன்றாவது நபர் ஒருவர் அங்கே இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்குள் இத்தனை பேர் உள்ள நிலையில், சித்ராவுடன் நடித்தவர்களிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது போலீஸ். உண்மைகள் வருமா? அல்லது மெகா தொடர் போல இழுத்துக் கொண்டே போகுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

பிரிட்டன் முழுவதும் விமான சேவை முடங்கியது!

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Flight services across Britain are suspended

 

பிரிட்டன் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை முடங்கி உள்ளது.

 

பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அருகில் இருந்த விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்கின. அதே சமயம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரிட்டன் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.