தெலுங்கானா ஆளுநர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முரசொலியில் கடிதம் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக திமுகவின் கான்ஸ்டைன் ரவீந்திரன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " தமிழிசை தமிழக முதல்வர் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்து என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வீட்டில் தெலுங்கு பேசுவதைப் போலவும், வெளியில் தமிழ் பேசுவதைப் போன்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்குக் கண்டனம் என்பதைத் தாண்டி அவரின் கருத்து மிகக் கேவலமான ஒன்று. அரசியல் அவரை எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.
தமிழிசையின் திருமணத்தின்போது திமுக ஆட்சியில் இல்லை என்றாலும் கலைஞர் தலைமையில் திருமணம் நடைபெற வேண்டும் என்று தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் விரும்பினார். கலைஞரும் அதனை ஏற்று அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். கலைஞர் தமிழ் மீது வைத்துள்ள அந்த அன்புதான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது என்று தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் பலமுறை மேடைகளில் கூறி இருக்கிறார்.
அந்த அளவிற்குத் தமிழ் வளர்வதற்கும், தமிழகம் வளர்வதற்கும் அயராது பாடுபட்டவர் கலைஞர் அவர்கள். தமிழிசையின் இந்த அறிக்கை அவர் கொடுத்ததா அல்லது யாரேனும் எழுதி அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததா என்பதைப் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் அவரின் அறிக்கையை நாகரிகம் தெரிந்த யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழிசையை தமிழகத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்று நீங்கள் ஏன் கூறினீர்கள் என்று கேட்கிறீர்கள். அவர் என்னுடன் விவாதத்தில் கலந்துகொண்ட காலத்திலேயே அவர் கூறியிருக்கிறார். ஆளுநர் என்பவர் அந்த மாநிலத்தில் முதல் குடிமகள் என்று அவரே கூறியிருக்கின்றபோது, தற்போது அவர் அம்மாநிலத்தின் முதல் குடிமகளாகவே இருக்கிறார். எனவே உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற அரசியலைப் பேசுங்கள். இங்கே அரசியல் பேசுவது உங்கள் வேலை அல்ல.
இதற்கு முன் ஆளுநராக இருந்தவர்கள், குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் இவரைப் போல யாராவது பேசியிருக்கிறார்களா? அவர்களுக்கும் பேச உரிமை இருக்கிறது. ஆனால் என்ன பேச வேண்டும். தமிழகத்தின் பண்பாட்டைப் பற்றிப் பேசலாம், இலக்கியத்தைப் பற்றிப் பேசலாம். ஆனால் அரசியல் பேசத் தமிழிசைக்கு எந்த உரிமையையும் இல்லை. அதற்கானப் பதவியிலும் அவர் இல்லை. அவர் பல ஆண்டுக் காலம் தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளார். அப்போது நாங்கள் அவரை அரசியல் பேச வேண்டாம் என்று எந்த இடத்திலேயும் கூறியதில்லையே. அவர் தலைவராக இருந்தபோது அவர் கேட்பதற்கு நாங்கள் பதில் கொடுத்துக்கொண்டு தானே இருந்தோம். இப்போது அவர் அரசியல் கட்சித் தலைவர் அல்ல. இரண்டு மாநிலத்தின் ஆளுநராக இருக்கிறார். இது அவருக்குத் தேவையில்லாத ஒன்று என்று கூறுகிறோம்.
இவரை நாங்கள் ஏன் விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுவரை எந்த ஆளுநரும் ஊடகத்தில் இவரைப் போலக் கருத்துச் சொன்னதில்லை. அந்தக் கருத்து முற்றிலும் தமிழகத்துக்கு எதிராக, தமிழக மக்களுக்கு விரோதமாக இருந்தது. அதற்காக அவருக்கு முரசொலி பதில் கூறியது. அவர் தவறிழைக்கும் போது அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. அதனால் அதுதொடர்பாக பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் கூட தமிழிசையை எந்த இடத்திலும் விமர்சனம் செய்யவில்லையே. ஆளுநர் அதிகாரத்தை மீறுகிறார் எனும்போது கொடுக்க வேண்டிய பதிலடியை நாங்கள் திருப்பிக் கொடுத்தோம். நீங்கள் அங்கே ஆளுநராக இருக்கிறீர்கள், அந்த மாநில மக்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள்.
ஏன் தமிழகத்தில் அரசியல் செய்கிறீர்கள் என்றால் வாரத்தில் மூன்று நாட்கள் தெலுங்கானாவிற்கும், மூன்று நாட்கள் பாண்டிச்சேரிக்கும் மீதமுள்ள ஒரு நாளை தமிழகத்திற்கும் செலவிடுகிறேன் என்கிறார். அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொண்டாலும் ஒரு ஆளுநர் மூன்று மாநிலத்தில் பணியாற்ற முடிகிறது என்றால், இந்தியாவில் ஆளுநரின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம் அல்லவா? இந்தியாவின் 28 மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை 7 ஆகக் குறைத்துவிடலாம். இவர்கள்தான் மூன்று மாநிலத்தில் ஒரே நேரத்தில் பணி செய்கிறார்களே? அப்புறம் எதற்கு வீண் செலவு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஆகின்ற செலவை வேறு ஒரு நல்ல செயலுக்குச் செய்துவிட்டுப் போகலாம் அல்லவா? அதைத் தமிழிசை ஏற்றுக்கொள்வாரா என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள்.
தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டீ பார்ட்டிக்கு 27 லட்சம் செலவு ஆனது. இதை யார் கொடுத்தது, தமிழக அரசுதானே கொடுக்கும். அண்ணா இதைத்தானே பல ஆண்டுகளுக்கு முன் சொன்னார். ஆளுநர் பதவி தேவையில்லை. அரசியல் அமைப்பு பிரச்சனை மாநிலங்களில் வருகின்றபோது டெல்லியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்புங்கள். பத்து நாளில் பிரச்சனை தீர்ந்ததும் டெல்லிக்கே திரும்ப அனுப்பி விடுங்கள் என்று கூறினார். தமிழிசை இன்று அந்த இடத்துக்குத்தானே அவரே அறியாமல் வந்துள்ளார். எதற்கு வீண் செலவு செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் இந்த அளவுக்கு வீணாவதற்கு இத்தனை ஆளுநர்களை ஏன் போட வேண்டும். அதை தமிழிசை குறைக்க வலியுறுத்துவரா என்பதை அவர்தான் கூற வேண்டும்" என்றார்.