Skip to main content

ஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி?எதிர்க்கட்சிகள் ப்ளான்!

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தில் சிக்காமல், மோடி ஆட்சியை வீழ்த்து வதில் சோனியாவும் ராகுல்காந்தியும் வேகம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மட்டுமல்லாது பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவதில் தீவிரமாக இருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.  தேர்தல் முடிவுகளை எதிர்கொள் வது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், அகமதுபடேல், குலாம்நபிஆசாத், கமல்நாத்  உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுடன் கடந்த 19-ந்தேதி விவாதித்தார் சோனியாகாந்தி இந்த விவாதம் 2 மணி நேரம் நீடித்தது. 

 

congress



எந்த ஒரு கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக் காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் அதனை எதிர்கொள் வது எப்படி? அப்படிப்பட்ட சூழலில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி? காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரு வதற்கான வழிகள் என்ன? ஆகியவை  முக்கியமாக விவாதிக்கப்பட்டன. இதுகுறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது,  உடல்நலக் குறைவால் தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்த சோனியாகாந்தி, கடந்த 10 நாட்களாக புதிய ஆட்சி அமைக்கும் அரசியலில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக, கட்சியின் சீனியர் களிடம் நள்ளிரவு தாண்டியும் விவாதிக்கும் சோனியா, மோடியை வீட்டுக்கு அனுப்பு வதில் சில சமரசங்களுக்கும் தயாராகியிருக்கிறார். 

 

bjp



ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸும் அதன் தோழமைக் கட்சிகளும் போட்டியிட்ட இடங்கள், அதே போல பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்ட இடங்கள் ஆகியவைகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது பேசிய மன்மோகன்சிங், "காங்கிரஸ் கூட்டணி 240 இடங்களில் ஜெயித்தால் மம்தா, மாயாவதி, சரத்பவார், கெஜ்ரிவாலின் ஆதரவை கேட்கலாம். நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். அந்தச் சூழலில், பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோரலாம். மம்தா அல்லது மாயாவதியை  துணை பிரதமர் பதவியை ஏற்க வைக்கலாம்' என தெரிவித்திருக்கிறார். 

 

naidu



ஆனால்,காங்கிரஸ் மட்டுமே 170 இடங்களைப் பிடித்தால்தான் பிரதமர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க மற்றவர்கள் சம்மதிப்பார்கள்' என ஏ.கே.அந்தோணி சொல்ல, "120-க்கும் குறைவான இடங்கள் கிடைத்தால் மட்டுமே பிரதமர் பதவியை மற்றவர்களுக்கு நாம் விட்டுக்கொடுக்கலாம். இதில் எந்த விவாதமும் தேவையில்லை. அப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் சார்பில் சந்திரபாபுநாயுடுவை பிரதமர் பதவிக்கு நாம் முன்னிறுத்தலாம். ஆனால், தனித்து காங்கிரஸ் 170 இடங்களை கைப்பற்றினால் பிரதமர் பதவி காங்கிரசுக்குத்தான்' என ராகுல்காந்தி தெரிவித் திருக்கிறார்.  இதனை ஆமோதித்த சோனியா, "மம்தாவும் மாயாவதியும் தலா 30 இடங்களை பிடித்து விட்டால் நாயுடுக்கான ஆதரவு குறையும்' என சொல்ல, மம்தா-மாயாவதி-அகிலேஷ்-சரத்பவார் ஆகியோரை சம்மதிக்க வைப்பதை நாயுடு பார்த்துக்கொள்வார்' என்றிருக்கிறார் குலாம்நபி ஆசாத்'' என்கின்றன டெல்லி தகவல்கள். 

 

modi



இந்த விவரங்களை நாயுடுவிடம் பகிர்ந்துள்ளார் ராகுல்காந்தி. இதனையடுத்து மம்தாவிடம் நாயுடு பேச, காங்கிரஸ் கூட்டணி 240 சீட்டு களைப் பிடித்துவிட்டால் பிரதமர் பதவியை நாங்கள் கேட்கப்போவதில்லை. இல்லையென்றால் காங்கிரசுக்கு பிரதமர் கனவு கூடாது. உங்கள் பெயரைப் பரிந்துரைக்கும் சூழல் வரும்போது  உங்களுக்கு ஆதரவாக நிற்பேன். அதனால், தேர்தல் முடிவுகளுக்கு முன்னால் காங்கிரசுக்கு எந்த உத்தரவாதத்தையும் தர விரும்பவில்லை'' என தனது அரசியலை விவரித்துள்ளார் மம்தா.


இதனை அப்படியே ராகுலுக்கு பாஸ் செய்த நாயுடு, தொடர் முயற்சியாக மாயாவதி, அகிலேஷ் மற்றும் சரத்பவாரிடமும் பேசினார். மாயாவதியிடம், பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த நாம் அனை வரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகிறது. அதனால், சோனியா தலைமையில் மே 23-ல் கூட்டப்படும் கூட்டத்துக்கு நீங்கள் அவசியம் வர வேண்டும். எந்த சூழலிலும் பா.ஜ.க. ஆதரவு நிலையை எடுத்துவிடாதீர்கள். சீட்டுகளின் எண்ணிக்கையை வைத்தே பிரதமரை முடிவு செய்யலாம். அதேசமயம், பா.ஜ.க. கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணி அதிகமான இடங்களைப் பெறும்போது உங்களை பிரதமராக்க பா.ஜ.க. வலைவிரிக்கும் என்பதை அறிவீர்கள் என மாயாவதியிடம் வலியுறுத்தியுள்ளார் நாயுடு. அகிலேஷ் மற்றும் சரத்பவாரிடமும் இதே தொனியில் தனித்தனியாக விவாதித்தார்.  அப்போது, "மோடி தோற்கடிக்கப்பட வேண்டியவர்தான். ஆனால், தேர்தல் முடிவுகள் குறித்து எந்த பதட்டமும் மோடியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி என்கிற அளவில் யோசிக்க வேண்டும். அதனால், முடிவுகள் வரட்டும். மோடியை அகற்றுவதில் எனது கட்சியின் வெற்றி பயன்படுமானால் உங்கள் முயற்சிக்கு துணை நிற்பேன்' என தெளிவுபடுத்தியுள்ளார் சரத்பவார். 

இந்த நிலையில், தனது தலைமையில் 23-ந்தேதி கூடும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்த சோனியா, தனிப்பட்ட முறையில் அவர்களை தொடர்புகொண்டு பேச, கூட்டத்தில் கலந்து கொள்வதாக பலரும் சொல்லியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் கட்சியின் சீனியர்களிடம் விவாதித்த சோனியா காந்தி, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கேள்வி எழுப்ப, எக்ஸிட் போல் குறித்த சந்தேகங்களையும் பழைய அனுபவங்களையும் முன்வைத்து பா.ஜ.க.வின் நிஜமான பலம் குறித்த புள்ளி விபரங்களை சோனியாவுக்கு சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் மூத்த தலைவர்கள்.