கடந்த திங்களன்று தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட தி.மு.க.தலைவர் ஸ்டாலின், " தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள உட்பிரிவுகளை சேர்த்து ஒரே பெயரில் "தேவேந்திரகுல வேளாளர்" என்று பெயரிட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. தி.மு.க. ஆட்சி இருந்தபோது கலைஞரிடம் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரை அழைத்துப் பேசினார் கலைஞர். அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் கோரிக்கையினை ஆய்வு செய்ய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படும் என ஜனவரி 2011 ல் அறிவித்தார். அறிவிப்போடு நில்லாமல் உடனே ஒரு நபர் கமிஷன் அமைத்து அரசிதழில் வெளியிட்டார் கலைஞர். ஆனால், அரசு ஆணை வெளியிடுவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் முறையாக என்ன செய்திருக்க வேண்டும், கோட்டையில் ஏற்கனவே இதுகுறித்து இருந்த கோப்புகளை எடுத்து, நிறைவேற்றுகிற முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், குப்பையில் போட்டு விட்டார்கள். ஆகவே, இப்போது சொல்கிறேன். திமுக ஆட்சி அமைந்ததும் கலைஞரால் நியமிக்கப்பட்ட அந்த கமிஷன் அறிக்கையை, கையில் எடுத்து நீங்கள் விரும்பக்கூடிய வகையில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற அரசு ஆணை வெளியிடப்படும் என்கிற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
ஸ்டாலின் பேசி 2 நாட்கள் கடக்கவில்லை அதற்குள் ஆதி திராவிடரில் உள்ள பிரிவுகளை இணைத்து தேவேந்திர குலவேளாளர் என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இங்குதான் எடப்பாடி பழனிசாமியின் ராஜ தந்திரம் இருக்கிறது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. விரைவில் நடைபெற இருக்கும் 21 தொகுதிகளையும் வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பது தான். இந்த 21 தொகுதிகளில் 12 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு இருக்கிறது. அதில் 8 தொகுதிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் இந்த சமூக மக்கள் தான். அதேபோல், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 20 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த கட்சிக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. அதேபோல், புதிய தமிழகம் கட்சியில் இடம்பெறாத அந்த சமூகத்து மக்கள் அதிமுக, திமுக, மதிமுக என இந்த தொகுதிகளில் பரவிக் கிடக்கின்றனர். அவர்களது கோரிக்கை எங்களது அடையாளத்தை மீட்பது என்பது தான். தேவேந்திர குல சமூகத்தினர் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், செந்தில் மள்ளர், அண்ணாமலையார் என பல்வேறு பிரிவுகளில் பிரிந்து கிடந்தாலும். அவர்களின் கோரிக்கை தங்களது அடையாளத்தை மீட்க வேண்டும் என்பது தான். இந்த நேரத்தில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றினால் வாக்குகளை அள்ளி விடலாம் என்பது எடப்பாடியின் கணக்கு.
அதேபோல், அதிமுக நிர்வாகிகள் பலர் டிடிவி அணிக்கு சென்றுவிட்டால் ஏற்கனவே, கட்சியின் நிலைமை பரிதாபத்தில் இருக்கிறது. தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தஞ்சை, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் தேவேந்திரகுல சமூக மக்கள் கணிசமாக உள்ளனர். இவர்கள் பல்வேறு கட்சிகளில் பிரிந்து கிடந்தாலும், பெரும்பாலானவர்களின் மனநிலை தங்களது அடையாளத்தை மீட்க வேண்டும் என்பது தான். இந்த நேரத்தில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றினால் கட்சியின் வாக்கு சதவீதத்தையும் அதிகரிக்கலாம் என்று வியூகம் அமைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றிய புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சிவசெல்வம், செண்பககனி, "நாங்கள் புதுசா ஒன்றும் கேட்கலை இந்த அரசாங்கத்திடம். எங்களோட அடையாளத்தை கொடுங்கள் என்று கேட்கிறோம். எங்கள் தொழிலே விவசாயம் தான். விவசாயம் இல்லாத பட்சத்தில் விறகு வெட்டுதல், கரிமூட்டம் போடுதல், கட்டிடம் கட்டுதல் போன்ற தொழில் செய்கிறோம்" என்றனர்.
"தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் ஆய்வுக்குழு அமைத்தது பெரிய விஷயமல்ல. இந்த கோரிக்கையை நிறைவேற்ற 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபோல், நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் அப்போதைய முதல்வர் கலைஞர். அதற்கு பிறகு 9 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதைய முதல்வர் ஒரு குழுவை அமைத்திருக்கிறார். இந்த குழுவின் அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் நாகலாபுரம் தேவேந்திர குல சமூகத்தின் தலைவர் மாரியப்பன்.
அடுத்தடுத்து முதல்வர் எடுக்கும் நகர்வுகளை பொறுத்து, எடப்பாடியின் வியூகம் பலிக்குமா? என்பது தெரியவரும்.