தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்குமான உரசல்கள் நீடித்துவரும் நிலையில், ஊழல்களில் விஞ்சியிருக்கும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினரையும் கண்காணித்து வருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த 3 தரப்பிலுமிருந்து தலா டாப்-10 பேரை குறி வைத்து ரிப்போர்ட்டுகள் ரகசியமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களை விஞ்சிய அதிகாரிகள், அதிகாரிகளை விஞ்சிய அமைச்சர்கள் என சமீபத்தில் ஆளுநர் ரவியிடம் ஒரு கனமான பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை ஒன்றிய அரசின் உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார் கவர்னர் ரவி. உள்துறையிலிருந்து கிடைத்த க்ரீன் சிக்னல்படி, அந்த டாப்-டென்னில் இடம் பிடித்தவர்களைப் பற்றிய கடந்த கால ரெக்கார்டுகளையும் தோண்டித் துருவுகிறார் ஆளுநர்.
இதற்காக, ரகசியமாக ஒரு டீம் இயங்குகிறது. கடந்த கால அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிக் காலங்களில் தொடங்கி தற்போதைய தி.மு.க. ஆட்சிக் காலம்வரை அவர்களின் சொத்துகள், முதலீடுகள், வெளிநாட்டு தொடர்புகள், ஹவாலா பரிவர்த்தனைகள், பினாமிகள் என அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. ஒருமாத இடைவெளியில் இவை அனைத்தையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஒப்படைக்கவிருக்கிறார் ஆளுநர் ரவி.
இதுகுறித்து ராஜ்பவன் வட்டாரங்களில் விசாரித்தபோது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், ஆட்சி நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர்தான். அதனால்தான், அரசின் நிதி மசோதா தொடங்கி அனைத்து அரசாணைகளும் ஆளுநரால் ஒப்புதலளிக்கப்படுகிறது. அதனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் கடமை ஆளுநருக்கு உண்டு.
அந்த வகையில், மாநில ஆட்சியை கண்காணித்து ரிப்போர்ட் தாக்கல் செய்வது ஆளுநரின் நிர்வாக ரீதியிலான பணி. அதன்படிதான் ஒவ்வொரு மாநில ஆளுநர்களும் ஒன்றிய உள்துறைக்கு மாதத்திற்கு ஒரு முறை மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட ரிப்போர்ட்டுகளை தாக்கல் செய்து வருகிறார்கள். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பணியாற்றும் ஆளுநர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு கூடுதல் உத்தரவுகள் அடிக்கடி பிறப்பிக்கப்படுகின்றன. அதன்படி இயங்கிவரும் ஆளுநர் ரவி, மாதத்திற்கு 2 முறை ரிப்போர்ட் தாக்கல் செய்கிறார்.
இப்படிப்பட்ட சூழல்களில்தான், சமீபத்தில் டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்படி, தி.மு.க. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கடந்த 20 ஆண்டுகால ரெக்கார்டுகள் தோண்டப்படுகின்றன. இதனை ஒரு வேள்விபோல் ரகசியமாக செய்துவருகிறார் ஆளுநர் ரவி. அந்த பணிகள் முடியும்போது ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் உண்மை முகம் அம்பலமாகும்” என்கிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமானவர்கள்.
மேலும் நாம் விசாரித்தபோது, “ஆளுநர் கொடுக்கும் ரிப்போர்ட்டுகளில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படவிருக்கிறது. அவர்கள் தங்கள் பாணியில் நடவடிக்கைகளை திட்டமிடுவார்கள். அதற்கேற்ப டெல்லியில் சிலபல உளவு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் தி.மு.க. அரசுக்கு எதிரான அசைன்மெண்ட்டை துரிதப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்கள் ஆளுநர் ரவிக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தி.மு.க. ஆட்சி 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தி.மு.க. அரசின் நிர்வாகச் செயல்பாடுகள், ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியின் நிலை, வெளிநாடுகளில் தி.மு.க. அரசு வாங்கும் கடன்களின் நிலை, தமிழ்நாட்டில் நடமாடும் போதைப்பொருள் வர்த்தகம், அதன் பின்னணியிலுள்ள ரகசியங்கள் ஆகியவை ஒரு வகை. ஊழல்களிலும், சொத்து குவிப்புகளிலும் உள்ள டாப்- டென் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்.- ஐபி.எஸ். அதிகாரிகள் ஆகியோர்களை கணக்கெடுப்பது மற்றொரு வகை! இதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிரான ரிப்போர்ட்டுகள் கவர்னரால் தயாரிக்கப்படுகின்றன” என்கிறார்கள்.
தி.மு.க. அரசுக்கு எதிரான ஊழல் ரெக்கார்டுகளை கவர்னர் ரவி சேகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்களில் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்டமாதங்களாக ஆளுநர் ரவி கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.
உண்மையில் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கிறாரா? என்று விசாரித்தபோது, “தி.மு.க. அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை 76. இதில், 61 மசோதக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தந்துவிட்டார். அவை அனைத்தும் நிதி தொடர்பான மசோதாக்கள். சட்டப் பேரவையிலிருந்து மசோதாக்களை கொண்டு வருபவர்களை ராஜ்பவனில் இருக்க வைத்து கையோடு கையாக, அப்போதே ஒப்புதலளித்து மசோதாக்களை அரசுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். முந்தைய ஆளுநர்கள் மாதிரி படித்துப் பார்ப்பதற்காக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதில்லை.
76 மசோதாக்களில் 61 மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்ததுபோக மீதமிருப்பவை 15. இதில், 12 மசோதாக்கள் பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது தொடர்பானவை. அதாவது, 12 பல்கலைக்கழகங்களுக்கு 12 மசோதாக்கள். இவைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. காரணம், இதே மாதிரி கேரள அரசாங்கம் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், யூ.ஜி.சி.யின் சட்டவிதிகளுக்கு எதிராக இருப்பதால் அந்த சட்ட மசோதாவை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்திருப்பதுதான். அதனை ஆளுநர் ரவி கவனத்தில் கொண்டதால் ஒப்புதல் தரவில்லை.
அந்த வகையில், கூட்டுறவு சங்கங்களை தனி அதிகாரியின் உத்தரவின் பேரில் கலைத்தல், தனியார் கல்லூரிகளை அரசுடைமையாக்குதல், ஆன்-லைன் சூதாட்டம் தடை ஆகிய 3 மசோதாக்கள் மீதமிருப்பவை. இதில், கூட்டுறவு சங்கங்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகாரங்களைப் பறிப்பதால், அந்த சட்ட மசோதாவுக்கு அனுமதி தரவில்லை. அடுத்து, தனியார் கல்லூரிகளை அரசுடைமையாக்குவதன் பின்னணியில் சில நோக்கங்கள் இருப்பதை ஆராய்ந்து வருவதால் அதையும் கிடப்பில் வைத்துள்ளார். ஆன் லைன் சூதாட்டம் என்பது திறன்மிகு விளையாட்டு என்ற பட்டியலில் மத்திய அரசு வைத்திருப்பதால் மாநில அரசால் தடை செய்ய இயலாது என்பதாலும், அப்படியே ஒப்புதலளித்தால் ஆளுநரின் உத்தரவு சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன், சூதாட்ட வர்த்தகத்தில் இருப்பவர்கள் உடனடியாக ஸ்டே வாங்கிவிடுவார்கள் என்பதாலும் அந்த மசோதாவும் கிடப்பில் இருக்கிறது.
இந்த மசோதாவை பொறுத்தவரை, ஆன் லைன் ரம்மி விளையாட்டில் மக்களை பாதிக்காத வகையில் என்னென்ன சட்டநெறிமுறைகளை கொண்டுவரலாம் என்று ஆலோசித்துவருகிறார் ஆளுநர். ஆக, தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாக்களின் உண்மை நிலை இதுதான். இந்த சூழலில், ஆளுநருக்கு எதிராக டி.வி. சேனல்களின் விவாதங்களிலும், சோசியல் மீடியாக்களிலும் தொடர்ச்சியாக பதிவு செய்துவரும் பத்திரிகையாளர்கள் சிலர், ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசினர். பல்வேறு விசயங்களை ஆளுநரிடம் கேள்விகளாக எழுப்பிய பத்திரிகையாளர்கள், நிலுவையில் உள்ள மசோதாக்களைப் பற்றியும் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆளுநர் ரவி. ஆளுநரின் விளக்கத்தில் அவர்கள் மிரண்டு போய்விட்டனர்” என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறது ராஜ்பவன் வட்டாரம்!
சட்ட மசோதாக்களை நிறுத்தி, தி.மு.க. அரசுக்கு செக் வைக்கும் ஆளுநர் ரவி, தி.மு.க. அரசுக்கு எதிரான டாப்-டென் ரிப்போர்ட்டுகளை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யும்போது ஏகத்துக்கும் தி.மு.க. அரசு மிரளப்போகிறது” என்கிறார்கள்.