வெறும் 20 ரூபாய் இருந்தா வயிறு நெறைய சாப்பிட்டுவிட முடியும் என யாராவது சொன்னால், நமட்டுச்சிரிப்புடன் நகர்ந்து சென்றுவிடுவோம். ஆனால், ஷீலா அக்காவும் அவரது கணவரும் இது சாத்தியம் எனப் புன்னகையுடன் நமது கைப்பிடித்து அவர்களின் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ளது திருவம்பட்டு கிராமம். இந்த கிராமத்தில்தான் ஷீலா அக்காவும் அவரது குடும்பத்தாரும் ஹோட்டல் நடத்திவருகின்றனர். இட்லி -3 ரூபாய், கல்தோசை -3 ரூபாய், ரோஸ்ட் -15 ரூபாய் இதுதான் ஷீலா அக்கா கடையின் மெனு. தட்டுத்தடுமாறி நடக்கும் முதியவர்கள் முதல் தத்தி தத்தி நடக்கும் குழந்தைகள் வரை அத்தனை வயதினரும் ஷீலா அக்கா கடையின் ரெகுலர் கஸ்டமர்கள். மலிவான விலை என்பது ஒரு காரணியாக இருந்தாலும் சாப்பாட்டில் உள்ள ருசிதான் இங்கு வருவதற்கு பிரதான காரணம் என அக்கா கடையைப் பாராட்டி மகிழ்கின்றனர் அதன் வாடிக்கையாளர்கள்.
இதே விலையில் இதே ஏரியாவில் போட்டிக்கடைகள் சில இருந்துவந்தாலும், ஷீலா அக்காவின் கடைக்கு மட்டும் எப்போதுமே தனி மவுசு உண்டு. சுமார் 30 ஆண்டு பாரம்பரியத்துடன் பந்தாவோ படாடோபமோ இல்லாமல் விறகு அடுப்பில் கடை நடத்தி வருகிறார் ஷீலா அக்கா. வெளியாட்கள் யாரும் வேலைக்கு இல்லை. சமையலராக, சர்வராக, பார்சல் கட்டுபவராக கல்லாவில் பணம் வாங்கிப் போடுபவராக எங்கும் ஷீலா அக்காவின் குடும்பத்தாரே சுற்றிச் சுற்றி வேலை செய்கின்றனர்.
இது எப்படிச் சாத்தியம்.. இந்த விலையில் கடை நடத்துவதால் சாப்பிடுபவரின் வயிறு நிறையலாம்.. முதல் போட்டு கடை நடத்தும் உங்களது வயிறும் வாழ்வும் நிறையுமா எனக் கேட்டோம்..
கொஞ்சமும் சலனமில்லாமல் பேசத் தொடங்கிய ஷீலா அக்கா, இதுவே எங்களுக்கு போதுமானதா இருக்கு சார். 10 பைசாவுக்கு ஒரு தோசை என ஆரம்பிச்சாங்க. வருஷங்கள் ஓட ஓட 2 ரூபாயில வந்து நின்னுச்சு. இதோ.. இப்போ இந்த கொரோனா லாக்டவுனால 1 ரூபா ஏத்த வேண்டியதா போச்சு. இப்போ 3 ரூபாய்க்கு ஒரு தோசை குடுக்குறோம். பரபரப்பான நாளுல ஒரு நாளைக்கு 1000 தோசை ஓடும். மத்த நாளுல 600 தோசை வரைக்கும் ஓடும். எல்லாம் போக எங்களுக்கு 500 ரூபா கைல நிக்கும். எங்களுக்கு அது போதும். நிறைவா இருக்கு சார் வாழ்க்கை என மெல்லிய புன்னகையுடன் கண்சிமிட்டுகிறார் ஷீலா அக்கா.
கடவுள் தூணிலும் துரும்பிலும் மட்டுமல்ல ஷீலா அக்காக்களின் கடைகளிலும் மெல்லிய புன்னகையுடன் நிறைந்திருக்கிறார்.