உலகம் முழுவதும் கரோனா தொற்று ஆட்டிப்படைக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் கூறிவந்தாலும், பெரும்பாலானவர்கள் வௌவால்களிடம் இருந்து இந்த தொற்று வந்ததாக கூறுகிறார்கள். அப்படி இருந்தால் அதனை அழித்துவிட்டால் இந்த தொற்றில் இருந்து மனித இனத்தை காப்பாற்றிவிட முடியுமா? போன்ற பல்வேறு கேள்விகளை பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்த ஜியோ டாமினிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
இன்று உலம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக முடங்கி கிடக்கிறது. வல்லரசு நாடுகள் கூட என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். இதனால் ஒட்டுமொத்தமாக அதனை அழித்துவிடலாம் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக வௌவால்களை அழிப்பது சாத்தியமா? அவ்வாறு அழித்தால் கரோனா வைரஸை அழித்து விடலாமா?
நிச்சயம் முடியாது, மனித சமூகம் விலங்குகளால் பரவக்கூடிய எத்தனையோ நோய்களை சந்தித்துள்ளது. எலிகளால் பரவக்கூடிய நோய்கள், பன்றிகள், சிம்பன்ஸிகளால் பரவக்கூடிய நோய்கள் என்று விலங்குகளிடம் இருந்து பல்வேறு வகையான நோய்கள் மனிதனுக்கு பரவி உள்ளது. வரலாறு முழுவதும் இதுமாதிரியான என்னற்ற நோய்களை நாம் பார்த்துத்துள்ளோம். ஆனால் இப்போதுபோல் அப்போது தொடர்புகள் என்பது இல்லை. இந்த அளவு ஆயிரக்கணக்காண மக்கள் விமானத்தின் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவில்லை. இப்போது அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் நோய் பரவலும் அதிகரித்துள்ளது. அது உலகத்தையே அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது.
முதன் முதலில் எச்.ஐ.வி. சிம்பன்ஸிகளால் பரவுவதாக கூறினார்கள். அதாவது, சிம்பன்ஸி சாப்பிட்ட விலங்கில் இருந்து இந்த நோய் வந்ததாக கூறினார்கள். ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த இந்த நோய் இன்று உலகம் முழுவதும் இருக்கிறது. சிம்பன்ஸிகளும் இருக்கின்றது, மனிதர்களும் இருக்கிறார்கள், எச்.ஐ.வி. நோயும் இருக்கிறது. எச்.ஐ.வி. வந்தவுடன் யாரும் சிம்பன்ஸிகளை அழிக்கவில்லை. அதுபோலத்தான் வௌவால்களை அழித்தால் கரோனா அழிந்து போகும் என்று கூறுவது உள்ளது. சிம்பன்ஸிகளை அப்போது அழிக்க சொல்வது போலத்தான் இதுவும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் வௌவாலுடன் இணைந்தே இருக்கிறோம். ஒரு விரும்பத்தகாத தொடர்பின் மூலம் இந்த மாதிரியான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்கிறோம். அதற்காக வௌவால்களை அழித்துவிடுவது என்று கூறுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருக்கும்.
வௌவால்கள் என்றாலே ஒரு பயம் வருகின்றது, ஒரு அச்சம் வருகின்றது. என்ன காரணத்துக்காக அந்த மாதிரியான பார்வை பார்க்கப்படுகின்றது?
நான் இதை எப்படி பார்க்கிறேன் என்றால், மனிதனுக்கு பரிமாணம் என்பது 2 லட்சம் ஆண்டுகள், இந்த ஆண்டுகளில் அவனுடைய செயல்பாடுகள் என்பது கடைசி சில நூற்றாண்டுகளை தவிர மீதி ஆண்டுகள் முழுவதும் மாலை நேரத்தோடு அவனது அனைத்து பணிகளும் நிறைவறைந்து விடும். நாம் இரவில் நடமாட ஆரம்பித்தது சில நூற்றாண்டுகளாகத்தான். இருட்டு என்பது மனிதனுக்கு பயம் நிறைந்ததாகவும், அச்சமூட்டுவதாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
குறிப்பாக இரவுகளில் விலங்குகளிடம் இருந்து அவனுக்கு ஆபத்து இருந்து கொண்டே இருந்தது. அந்த பயத்தின் பாரம்பரியம் ரொம்ப நீண்டது. குறிப்பாக பறவைகளில் இரவு நேரங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்படும் ஆந்தைகள் மீதுதான் நாம் மிகப்பெரிய மூட நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அதே போன்றுதான் வௌவால்களும். நமக்கு பிடிக்கவில்லை என்று ஒன்றை அழித்துவிட முடியாது. எல்லோரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறோம். இந்த விலங்குகள் மீது இருக்கின்ற பயம்தான் இந்த மாதிரி நம்மை சிந்திக்க வைக்கிறது.