Skip to main content

"காவல்துறையினர், நடமாடும் அய்யனார் சாமியாகத் தெரிகிறார்கள்" -நடிகர் சூரி உருக்கம்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

j


கரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு வரும் நிலையில் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனச் சில பிரிவு ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் காவல் நிலையம் ஒன்றிற்குச் சென்று அங்கிருந்த காவலர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.


இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "கரோனா என்கிற இந்த வைரஸ் இன்று உலகத்தையே உலுக்கிக் கொண்டு இருக்கின்றது. அது நம் எல்லோருக்கும் தெரியும். அது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, நம்முடைய ஊரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கஷ்டமான ஒரு கால கட்டத்தை நாம் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் நாம் பாகாப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக "நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருங்க, பத்தடி தள்ளி நில்லுங்க, சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்க, கையில் கிளவுஸ் போட்டுக்குங்க" என்று சொல்லி, நம்மை வீட்டிற்குள்ளே வைத்துவிட்டு சாலையில் இருபகலாக நின்று நம்மைக் காத்து வருகிறார்கள் காவல்துறை நண்பர்கள்.

நம்முடைய குடும்பத்துக்காக, தன் குடும்பத்தைப் பிரிந்து 24 மணி நேரமும் அவரகள் வேலை செய்து வருகிறார்கள். ஊருக்கு வெளியில் அய்யனார் சாமி இருக்கிறார் என்று நாம் எல்லாம் நிம்மதியாகத் தூங்குவோம். அதேபோல இன்றைக்கு காக்கிச்சட்டை போட்ட அய்யனார் சாமி போல இன்றைக்கு காவல்துறையினர் நமக்கு தெரிகின்றார்கள். 

 

 


நடமாடும் தெய்வமாக நாம் அவர்களைக் கும்பிட்டு வருகிறோம். நமக்குச் சாமியாக அவர்கள் தெரிகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அவர்கள் நம் அனைவரையும் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாமும் அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறோம். காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த கரோனா பாதிப்பு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 50, 60 நபர்களுக்கு இந்தப் பாதிப்பு வந்துள்ளது. உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்கிறோம் என்று கூறிவிட்டு இன்றைக்கு அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறார்கள்.

இன்றைக்கு அவர்களுக்குத் தொற்று வந்ததால் அவர்களுடைய குடும்பமே கதறிப்போய் இருக்கின்றது. மனைவி, மக்கள் எல்லாம் போனில் அழைத்து கதறுகிறார்கள். எதாவது உடம்புக்குச் சொல்லிவிட்டு சீக்கரம் வந்துவிடுங்க என்று கதறுவதை நாம் கேட்க முடிகின்றது. அவர்களுக்கும் பிள்ளை பாசம், மனைவி பாசம் இருக்கும் இல்லையா? நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள், நாங்கள் வேலை செய்கிறோம், என்று சொல்லி அவ்வாறு களத்தில் இறங்கி வேலை செய்யும் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்" என்றார் மிகவும் உருக்கமாக.