Skip to main content

அரியலூர் மாவட்டத்தை கைகழுவுகிறதா எடப்பாடி அரசாங்கம்? அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு

Published on 06/05/2020 | Edited on 07/05/2020
S. S. Sivasankar




கை கழுவுங்கள், கை கழுவுங்கள் என்று விளம்பரம் செய்த எடப்பாடி அரசு, அரியலூர் மாவட்ட மக்களை கைகழுவி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை என கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிக்கப்பட்டோர் பட்டியலில் அரியலூர் மாவட்டம் சென்னைக்கு அடுத்த இடத்தை பிடித்து,  இரண்டாவது இடத்தில் இருப்பதை பார்த்து, வெளியூர் நண்பர்கள் தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளார்கள். உள்ளூரில் எல்லோரும் பதட்டத்தோடு உள்ளார்கள். இன்றைய எண்ணிக்கை 188. 


காலையில் தொலைக்காட்சியில் வந்த செய்தி ]தான் பதற்றத்தின் துவக்கம். காலை 168 என்று எண்ணிக்கை வந்தது. பிறகு, ஏதோ அழுத்தம் கொடுக்கப்பட்டு அந்த செய்தி நிறுத்தப்பட்டது. ஆனால் 188 ஆக, மாலையில் அறிவிப்பு வந்துள்ளது.


20 எண்ணிக்கை அதிகமானது எப்படி என்பதை புரிந்து கொண்டால் தான் தமிழக அரசின் போர்ஜரி வேலை புரியும். 


நேற்று முன்தினம் காலையில் கரோனா தொற்று பரவியவர்கள் பட்டியல் மாவட்ட அளவில் வெளியானது. மாலை அரசு அறிவித்த பட்டியலில் 6 பேர் தான் இருந்தது, உண்மை எண்ணிக்கை மறைக்கப்பட்டது. நேற்று 35 பேர் பதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. ஆனால் பட்டியலில் அரியலூர் இல்லை.


மறைக்கப்பட்ட எண்ணிக்கையை தான் இன்றைய பட்டியலுடன் சேர்த்து வெளியிட்டார்கள். சரி தான், வெளியிட்டு விட்டார்களே இது பெரிய பிரச்சினையா என்று விட்டோம் என்றால், இன்றைய முழு பட்டியல் வரவில்லை என்பது தான் செய்தி. ஏன் இன்றைக்கு மறைக்கிறார்கள் என்றால், உண்மை எண்ணிக்கையை அறிவித்தால், சென்னை எண்ணிக்கையை விட கூடுதலாக, இன்றைய முதல் இடத்தை அரியலூர் பிடித்து விடும் என்பதால் தான்.


இதை விட அதிர்ச்சி செய்திகள் இருக்கின்றன. இன்றைக்கு பாசிட்டிவ் என்று அறிவிக்கப்பட்டுள்ள 188 பேர் எங்கே இருக்கிறார்கள் என்றால், எல்லோரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். 


அரசியல் செய்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பாணியில் சிலர் சொல்லலாம்.


அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமம் சுண்டக்குடி. வெளியூரில் வேலை பார்க்கும் மூன்று பேர் ஊர் திரும்பிய உடன் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இன்று மதியம் அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். மாலை அவர்கள் பாசிட்டிவ் என பட்டியலில் அறிவிக்கப்பட்டு விட்டது. செய்தி அறிந்த கிராம நிர்வாக அலுவலர், அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கே திரும்ப அனுப்பி விட்டார்கள். "வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்", என்று அறிவுரை சொல்லி அனுப்பி விட்டார்களாம்.


இந்த செய்தி வந்ததில் இருந்து, குழுமுர், நக்கம்பாடி, இடையக்குறிச்சி என பல கிராமங்களில் இருந்து தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.  இரண்டு பேரும் ஊருக்கு வந்துட்டாங்க. நாலு பேர் வந்துட்டாங்க என செய்திகள். அரியலூர் மாவட்டமே பீதியில் மூழ்கி உள்ளது.


மதியமே இதற்கு முன்னோட்ட செய்திகள் வந்தன. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள், சொந்த ஊருக்கு போகாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். நானே 100 பேரை காவல்துறையிடம் ஒப்படைத்தேன். வந்தவர்களை பல்வேறு பள்ளிகளில், கல்லூரிகளில் தங்க வைத்திருந்தார்கள். அவர்களை மதியம் ஊருக்கு கிளம்ப சொல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் " டெஸ்ட்" எடுக்கவில்லை. 


தொழிலாளர்கள், "ஊருக்கு போக மாட்டோம். டெஸ்ட் எடுங்கள்" என்று மறுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை காவல்துறை உதவியுடன் மிரட்டி ஊருக்கு அனுப்பி விட்டார்கள். 500க்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு போய் விட்டார்கள். பரிசோதித்தால் அதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் வரும் எனத் தெரியவில்லை. இது குறித்து இன்று மதியமே தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தேன். இப்போது, பாசிட்டிவ் ஆனவர்களையே வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். 


ஏன் இவர்களை அனுப்பினார்கள் என்று விசாரிக்கப் போனால் தான் சுகாதாரத்துறை அமைச்சர் 'போதிதர்மர்' விஜயபாஸ்கர் கதை வெளியில் வருகிறது. "எல்லா இடங்களிலும் தேவையான மருத்துவர்கள் இருக்கிறார்கள், தேவையான வசதிகள் இருக்கின்றன", என மைக்கை கண்டாலே சிரித்துக் கொண்டிருந்தார் ப்ரெண்ட்லியாக. உண்மையோ வேறு.

 

ccc


அரியலூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 33 மருத்துவர்கள். அதில் மூவர் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள். மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் நிபுணர், குழந்தைகள் நல மருத்துவர் என 15 பேர் சீமான்க் சென்டரில் பணியாற்றுகிறார்கள். வயதானவர், உடல் நலம் சரி இல்லாதவர்கள் போக  மீதி11 மருத்துவர்கள் தான் கொரோனா வார்டையும் பார்க்க வேண்டும், வழக்கம் போல் உள்நோயாளிகள், வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். 


ஏற்கனவே கரோனா வார்டில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 45 பேர் பாசிட்டிவ். போதிய மருத்துவர்கள் இல்லாமல் அரியலூர் அரசு மருத்துவமனை திண்டாடுகிறது.


இதை விட அதிர்ச்சியான செய்திகள் உண்டு. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார்கள். பிரசவம் முடிந்து தான் அந்தப் பெண்ணுக்கு 'ரிசல்ட்' வந்திருக்கிறது, 'பாசிட்டிவ்'. அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


இதைவிடக் கொடுமை இன்னும் இருக்கிறது.


அரியலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவருக்கு 'பாசிட்டிவ்' என இரண்டு நாட்களுக்கு முன் உறுதியாகி விட்டது. அவருக்கு இன்று வரை ட்யூட்டி போடப்பட்டு, நோயாளிகளை சந்திக்க கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார். அவர் மூலம் எவ்வளவு பேருக்கு தொற்றியதோ தெரியவில்லை.
 

nakkheeran app



இது குறித்து புகார் அளிக்கலாம் என இணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என்றால் அதுவும் சிக்கல். அரியலூருக்கான இணை இயக்குனர் பணியிடம், காலி. பெரம்பலூர் இணை இயக்குநர் தான் பொறுப்பு. அரியலூருக்கு அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிக்கு ஒரு டீனை அறிவித்தார்கள். அவருக்கு உடல் நலம் சரி இல்லை.  கரோனா கேஸ் எண்ணிக்கை அதிகமான உடன், பெரம்பலூர் இணை இயக்குநர் அந்தப் பொறுப்பை டீன் இடம் தள்ளி விட்டுவிட்டார். உடல் நலம் சரி இல்லாத டீன் பொறுப்பேற்று இரண்டு நாட்கள் தான் ஆவதால், நிர்வகிக்க தடுமாறுகிறார்.

 

aa



மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளிக்கலாம் என்றால், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, பாதுகாப்பு கருதி அவர் யாரையும் சந்திப்பதில்லை. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் கூட மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த உண்மை நிலவரத்தை சொல்ல வாய்ப்பில்லை.

இது இல்லாமல் பரிசோதனை மேற்கொள்வதிலும் பிரச்சனைகள். நேற்று அரியலூருக்கு அனுமதிக்கப்பட்ட பரிசோதனை நிலையம் செயல்பட துவங்கியது. 35 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருகின்றன. 35ம் 'பாசிட்டிவ்'. மிரண்டு போன நிர்வாகம், மீண்டும் அவற்றை சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் பணி நெருக்கடியால் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி என ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். அந்த ரத்த மாதிரிகளின் எண்ணிக்கை 600.


எப்படி பார்த்தாலும், அரியலூரில் இன்றைய தேதிக்கு 1,000க்கும் மேற்பட்டோர் கரோனா பாசிட்டிவ் ஆக இருப்பார்கள். இதில் 45 பேர் தான்  அரியலூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள். மீதி பேர் வீட்டில் உள்ளார்கள். இவர்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு கரோனா பரவி இருக்கும், அவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதற்குள் எவ்வளவு பேருக்கு அவர்கள் மூலம் தொற்று பரவும் என்பதை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. நிச்சயம் அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற பெரும்பாலோர் பாதிக்கப்படும் சூழல் தான் வரும். அத்தனை பேருக்கும் கடுமையாகாது என்றாலும், மிக கணிசமான எண்ணிக்கையில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.


இன்னொரு புறம், பாசிட்டிவ் ஆகி வீட்டில் இருப்போரை காணும் ஊர் மக்கள் அவர்களை அணுகும் விதத்தில் வரும் சிக்கலால் பல பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பது சமூக சிக்கல். கோயம்பேடு தொழிலாளர்கள் மீது பழியை சுமத்தி விட்டு, பாசிட்டிவ் நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் தமிழக அரசு தான் உண்மைக் குற்றவாளியாக திகழ்கிறது. இன்னொரு புறம், அரியலூர் அரசு மருத்துவமனை 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறி விட்டது. இதற்கும் அரசு தான் பொறுப்பு.


கை கழுவுங்கள், கை கழுவுங்கள் என்று விளம்பரம் செய்த எடப்பாடி அரசு, அரியலூர் மாவட்ட மக்களை கைகழுவி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை.
 

இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் உண்மையை ஒப்புக் கொண்டு பொறுப்பை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் நாங்களே தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுக்கும் சூழல் வரும் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்