என்ன இருக்கிறது அஹிம்சையில்? அது ஒரு வெற்று வழியான போராட்டக்குணம்! அச்சம் உள்ளவர்கள் அதை கையாளலாம், வீரம் நிறைந்த நாம் அதைப் பின்பற்றலாமா? காந்தியால் நூறாண்டுகளில் பெறப்பட்ட விடுதலை; சுபாஷ் சந்திரபோஸ் வழியில் சென்றிருந்தால் அரை நூற்றாண்டில் பெற்றிருக்கலாம். இதுதான் பொதுவாக மக்கள் மனதில் இருக்கும் கருத்து. காந்தியின் அறவழி போராட்டமும், சுபாஷ் சந்திரபோஸின் போர்முனை போராட்டமும், ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை. இரண்டுமே சமம்தான். ஆனால் கத்தி முனையைவிட பேனா முனை கூர்மையானது. அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என நம்புகிறேன். அதனால் காந்தியை பற்றிய நமது கருத்து எதுவாய் இருந்தாலும் அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு. அறவழி என்ன செய்தது என்று கொஞ்சம் பார்ப்போம்.
மகாத்மா காந்தி, இந்த பெயர் எப்பொழுதெல்லாம் உச்சரிக்கப் படுகிறதோ அப்பொழுதெல்லாம் முரண்களைக் கடந்தபடியேதான் பேச வேண்டியிருக்கும். இது இவருக்கு மட்டுமில்லை, சாதாரண மனிதரை எடுத்துக்கொண்டாலும் இதுதான் நிதர்சனம். எப்பொழுதும் ஒரு மனிதருக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். வரலாறும் அந்த இருபக்கங்களையும் பிணைத்துதான் ஒரு மனிதனை தன்னுள் எழுதிக்கொள்ளும். மகாத்மாவையும் அது அப்படிதான் எழுதி வைத்திருக்கிறது. இந்த தொகுப்பு மகாத்மா என்பவர் எந்த பக்கம் இருக்கிறார் என்பதைக் காட்டப்போவதில்லை. மாறாக அவரின் முதல் சத்தியாகிரகத்தையும், மகாத்மாவால் முதலில் கையாளப்பட்ட அறப்போரைப் பற்றியும் ஒரு சிறிய முன்னோட்டத்தை தரப்போகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலப் பிரபுத்துவம் உயர்ந்த இருந்த தருணம். பிஹாரில் உள்ள சம்பாரண் மாவட்டத்தில், அவுரி என்னும், துணிகளுக்கு சாயம்போட உதவும் செடியைதான் வளர்க்க வேண்டும் என்று பிரிட்டிஷார் கட்டளை இட்டிருந்தினர். அவுரி துணி ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விளைவிப்பதில் 75% பிரிட்டிஷ் அரசுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அந்த மாவட்ட விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். அதே காலகட்டத்தில் 1915 ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியிருந்தார் காந்தி. அவர் இந்தியா வந்ததும், நாடு முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 1916 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'லக்னோ' நகரத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தி கலந்துகொண்டார். அங்குதான் ராஜ்குமார் சுக்லா என்னும் சம்பாரண் விவசாயி, காந்தியை முதன்முதலில் சந்தித்து அவர்கள் படும் துயரத்தைப் பற்றி எடுத்துச்சொல்லி, காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றார். அதற்கு காந்தி "நான் நேரில் வந்து பிரச்சனை என்னவென்று பார்க்காமல் எதுவும் செய்ய முடியாது" என்றார். அதன் பிறகு பல பேச்சுவார்த்தைகளுக்கு பின் காந்தி நிச்சயம் ஒருநாள் தான் வருவதாய் ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு எளிதில் காந்தி அங்கு செல்லவில்லை. வெகுநாட்கள் பின்தொடர்ந்த ராஜ்குமார் சுக்லா காந்தியை 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 அன்று சம்பாரண் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த விவசாயிகளை சந்தித்து பேசிய காந்தி, அவர்களின் குறைகளை எல்லாம் இனம் கண்டார். இது குறித்து தோட்ட முதலாளிகள், சங்கத் தலைவர்களை சந்தித்து பேசினார். இதனை எல்லாம் தெரிந்துகொண்ட அந்த ஜில்லா மாஜிஸ்திரேட் 'காந்தி உடனடியாக சம்பாரணை விட்டு வெளியே செல்ல வேண்டும்' என்றார். அதற்கு காந்தி 'இவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறாமல் நான் வெளியேற மாட்டேன், அதற்காக சிறை சென்றாலும் மீண்டும் வெளியே வந்து இவர்களுக்கான தீர்வு காண்பேன், அதுவரை நான் இங்கேயேதான் இருப்பேன்" என்று தெரிவித்தார். பெருந்திரளான விவசாயக்கூட்டம் அவருக்குப்பின் நின்றதால் நீதிமன்றம் பின்வாங்கியது.
காந்தி சம்பாரண் மாவட்டத்தின் கிராமங்களுக்கு எல்லாம் சென்று அவர்களின் குறைகளை பதிவு செய்தார் மொத்தம் 8,000 விவசாயிகளின் பதிவை தன் கையில் வைத்திருந்தார். இந்த நடவடிக்கைகளை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த லெஃப்டினெண்ட் கவர்னர் 'சர் எட்வர்டு கெய்ட்' ஜூன் 4 அன்று காந்தி ராஞ்சியில் தன்னை சந்திக்கவேண்டும் என்று சம்மன் அனுப்பினார். அதனை ஏற்ற காந்தி தன் கையில் வைத்திருந்த விவசாயிகளின் சாட்சிகளோடு காந்தி ஜூன் 4ல் 'சர் எட்வர்டு கெய்டை' சந்தித்தார். பிறகு அதன் மீது விசாரணை நடைபெற்றது அதைத் தொடர்ந்து ஜூன் 13 ஒரு விசாரணைக் குழுவை அறிவித்தார் 'சர் எட்வர்டு கெய்ட்'. அதில் காந்தியும் இடம் பெற்றிருந்தார். கடைசியாக அக்டோபர் 3 அன்று அந்தக் குழு இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பிறகு 1918 மே மாதம் அந்த மசோதாவிற்கு லெஃப்டினெண்ட் கவர்னர் 'சர் எட்வர்டு கெய்ட்' ஒப்புதல் அளித்தார்.