நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர் 25ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75வது ஆண்டு எட்டியதை குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 4 நாட்கள் விவாதம் நடத்தப்பட இருக்கிறது. இந்த விவாதத்தை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் இன்று (13-12-24) தொடங்கி வைத்தார். ஒவ்வொரு எம்.பிக்களும் பேசியதையடுத்து, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்த அரசியலமைப்பு நமது கவசம், நமது பாதுகாப்பு. தேவைப்படும் போதெல்லாம் அது நமக்கு பலத்தை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளின் உண்மையான பாதுகாவலராக அரசியலமைப்பு உள்ளது. 20 கோடிக்கும் அதிகமான மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், இரண்டாம் தர குடிமக்களாக குறைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன, வீடுகள் இடிக்கப்படுகின்றன, வழிபாட்டுத் தலங்கள் நிர்வாக உதவியுடன் கைப்பற்றப்படுகின்றன.
எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். இது சாதிய பாகுபாடுகளை அதிகரிக்காது. நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமையும், சமத்துவத்தையும் அளிக்கும். சமூக நீதிக்காக முக்கிய கருவியாக இடஒதுக்கீடு இருக்கிறது. எல்லைகளை பாதுகாப்பது என்பது எந்தவொரு அரசுக்கும் முதன்மை கடமையாகும். ஆனால், நாம் ஊடுருவல்களை பார்க்கிறோம். லடாக்கில், நமது சொந்த படைகள் சொந்த தேசத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். 142 கோடி மக்களில், 82 கோடி மக்கள் தங்கள் வாழ்நாளை கழிப்பதற்கு அரசு ரேஷன்களையே நம்பி இருக்கிறார்கள்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா ஒன்றாக இருக்கிறது என்று பெருமை கொண்டாலும், இந்த உண்மையை மறுக்க முடியாது. உத்தரப் பிரதேச இடைத்தேர்தலின் போது, பலருக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. வெளிப்படையாக துப்பாக்கியை காட்டி போலீஸ் அதிகாரிகள் பெண்களை மிரட்டினர். ஆனாலும், அந்த துணிச்சலான பெண்கள் மிரட்டலை மீறி வாக்களித்தனர். இதுதான் நாம் வாழும் ஜனநாயகமா?” என்று கூறினார்.