Skip to main content

காங்கிரஸிலும் திமுகவிலும் மட்டும்தான் குடும்ப அரசியலா? நாடு முழுவதும் பரம்பரை ஆதிக்கம்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று நாம் கூறுகிறோம். ஆனால், அது பரம்பரை ஜனநாயக ஆட்சி முறையாக மாறிக் கொண்டிருப்பதாக பரவலான கருத்து உருவாகி வருகிறது.

 

dmk

 

அமெரிக்காவை ஜனாதிபதி ஆட்சிமுறை ஜனநாயக நாடு என்றும், பிரிட்டனை நாடாளுமன்ற ஆட்சிமுறை ஜனநாயக நாடு என்றும் கூறுவார்கள். அந்த வரிசையில் இந்தியாவை பரம்பரை ஆட்சிமுறை ஜனநாயக நாடு என்று அழைக்கும் நிலை விரைவில் வந்துவிடுமோ என்று சொல்கிறார்கள்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில், பரம்பரை ஆட்சிமுறை என்று நேருவின் குடும்பத்தை வைத்தே மற்ற கட்சிகள் குறைகூறுவது வாடிக்கை. அதேபோல தமிழகத்தில் திமுகவை நோக்கி மட்டுமே குடும்ப ஆட்சிமுறை குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

 

தமிழகத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவினர் பதில் சொல்கிறார்கள். திமுகவை பாதுகாக்க எல்லாவித கஷ்டங்களையும் தாங்கியவர்களுக்கு அந்தக் கட்சி மரியாதை கொடுப்பதாக அவர்கள் சுருக்கமாக பதில் சொல்கிறார்கள். அதுதவிர, திமுகவை கொள்கை ரீதியாகப் பாதுகாக்க அந்தக் கட்சியிலேயே வளர்ந்து வந்தவர்கள்தான் அக்கறை காட்டுவார்கள் என்றும் விளக்கம் அளிக்கிறார்கள்.

 

இந்த விஷயத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுகவில்கூட வாரிசுகளுக்கு பதவி என்பது அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. தேமுதிக தொடங்கும்போதே குடும்பக் கட்சியாக உருவெடுத்தது. பாமக உருவாகும்போது, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறிய வாசகங்கள் புகழ்பெற்றவை. “இந்தக் கட்சியில் நானோ, எனது குடும்பத்தினரோ பதவிக்கு வந்தால் நடுரோட்டில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள்” என்று கூறினார். நாட்கள் கடந்தபோது, அவருடைய மகன் அன்புமணிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுத்ததோடு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், மக்களவை உறுப்பினர் பதவியும் கொடுத்தார். 2016 தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவே அறிவித்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியில் கூட சீமான் தனது மைத்துனருக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

 

இந்நிலையில் காங்கிரஸ் பரம்பரை ஆட்சி நடத்த விரும்புகிறது என்ற மோடியின் குற்றச்சாட்டு கடந்த ஐந்தாண்டுகளாக திரும்பத்திரும்ப ஒலிக்கிறது. அவருடைய குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, பாஜகவில் உள்ள வாரிசுகள் குறித்தும், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளில் நிலவும் வாரிசு அரசியல் குறித்தும் இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது.

 

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தமட்டில் மோதிலால் நேரு தனது வீட்டை காங்கிரஸுக்கு கொடுத்திருந்தார். அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். அப்போதெல்லாம் காங்கிரஸுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தலைவர் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று இளம் வயதிலேயே சிறைசென்ற ஜவஹர்லால் நேருவும் காங்கிரஸில் தலைவராக சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

 

அவர் சிறையில் இருக்கும்போதே அவருடைய மனைவி கமலா நேரு இறந்தார். சிறுமியாக இருந்த இந்திராவும் விடுதலைப் போராட்டங்களில் தன் வயதுடைய சிறுவர் சிறுமிகளை சேர்த்து பிரச்சாரம் செய்திருக்கிறார். காஷ்மீர் பார்ப்பனர்களாக இருந்தாலும் மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு குடும்பம் சமத்துவ மனப்பான்மை கொண்டதாக, இந்திய மக்களிடம் சாதி, மத வேறுபாடு பார்க்காத குடும்பமாக அடையாளம் காணப்பட்டிருந்தது. நாடு விடுதலை பெற்ற சமயத்தில் இந்தியாவின் வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை அனுசரித்துப் போகும் தன்மை நேருவுக்கே உண்டு என்று நம்பியதால்தான் பிரதமர் பதவிக்கு நேருவை காந்தி பரிந்துரைத்தார்.

 

paatel

 

படேலை பிரதமராக்கி இருந்தால் இந்து மதத்தை தூக்கிப்பிடித்து மக்கள் மத்தியில் மேலும் பிளவுகளை அதிகரித்திருப்பார் என்று வரலாற்று ஆசிரியர்களே கூறியிருக்கிறார்கள். காந்தியின் நம்பிக்கையை நேரு காப்பாற்றினார். சோசலிஸக் கொள்கைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அணிசேராக் கொள்கை, மதசார்பற்ற கொள்கை, வேற்றுமையில் ஒற்றுமை, மாநில மொழிகளுக்கு பாதுகாப்பு என்று நேரு இந்திய மக்களை ஒருங்கிணைப்பதில் வெற்றிபெற்றார். அவருடைய மரணத்தைத் தொடர்ந்து லால் பகதூர் பிரதமராக பொறுப்பேற்றாலும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறமுடியவில்லை. இந்தியாவைப் பொறுத்தமட்டில் நாடுமுழுவதும் அறிந்த ஒரு தலைவரையே மக்கள் விரும்பினார்கள். அதையறிந்த காமராஜ், நேருவின் மகளாக இந்தியா முழுவதும் அறியப்பட்டிருந்த இந்திராவை பிரதமராக தேர்வு செய்தார். அதேசமயம், காங்கிரஸின் பழமைவாதத் தலைவர்களின் முட்டுக்கட்டைகளால் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல முடியாது என்பதை உணர்ந்ததால்தான் இந்திரா துணிச்சலாக மூத்த தலைவர்களின் முடிவை புறக்கணித்து, தனக்கான வழிமுறைகளின்படி ஆட்சி செய்ய புதிய கட்சியை உருவாக்கிக் கொண்டார்.

 

 

ஆக, அது இந்திரா காங்கிரஸ்தான். அதாவது இந்திரா தனது நோக்கப்படி இந்தியாவை ஆட்சிசெய்ய உருவாக்கிக்கொண்ட கட்சிதான். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்திரா தலைமையிலான கட்சிதான் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரை தக்கவைக்கிறது. பிளவுபடுத்தியவர்கள் காணாமல் போனார்கள், அல்லது தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என்று தனிப் பெயர்களில் மாநிலக் கட்சிகளாக இயங்குகின்றன. இந்நிலையில்தான் இந்திரா காந்தியை காலிஸ்தான் தீவிரவாதிகள் 1984ல் சுட்டுக்கொன்றனர். அதைத்தொடர்ந்து அவருடைய மகன் ராஜிவ் காந்தி பிரதமரானார். அவரும் 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்து சிதறடிக்கப்பட்டார்.

 

nehru

 

இந்தியா முழுக்க மக்களுக்கு அறிமுகமான நேரு குடும்பத்திற்கு அடுத்தடுத்து நடந்த இந்த இழப்புகளின் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவில் நிலையற்ற தன்மையை உருவாக்கி, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தேசத்தின் முன்னேற்றத்தை தடுப்பதே இந்தச் சதியின் நோக்கம் என்கிறார்கள். அந்த சதியை உறுதி செய்யும் வகையில்தான் 1996 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்தது. மாநிலக் கட்சிகள் எழுச்சி பெற்றன. பாஜகவும் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டது. காங்கிரஸின் படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸின் முக்கிய தலைவர்களே சோனியாவை கட்சிக்கு தலைமை ஏற்கும்படி கோரிக்கை விடுத்தனர். சோனியாவுக்கு உதவியாக ராகுலும், ராகுலுக்கு உதவியாக பிரியங்காவும் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

 

காங்கிரஸில் மட்டும்தான் பரம்பரை ஆதிக்கம் என்ற கருத்தை பாஜகதான் முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கிறது. அதிலும் பிரதமர் மோடி ரொம்பவே இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால், பரம்பரை ஆதிக்கத்துக்கு பாஜகவோ, மற்ற கட்சிகளோ விதிவிலக்கல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.

 

vasunthra

 

முதலில் பாஜகவில் உள்ள குடும்ப ஆதிக்கத்தை பார்க்கலாம். ராஜஸ்தான் மாநில பாஜக முதல்வராக இருந்த வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் எம்பியாகி இருக்கிறார். வசுந்தராவின் சகோதரி மத்தியப்பிரதேச மாநில பாஜக அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகித்தார். வசுந்தராவின் தாய் விஜயராஜே சிந்தியா பாஜகவை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர், மத்தியப்பிரதேச மாநிலத்தில் எம்.பியாக இருந்தவர். வசுந்தராவின் சகோதரர் மாதவராவ் சிந்தியா காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்தவர். அவருடைய மகன் ஜோதிராதித்ய சிந்தியா இப்போது எம்பியாக இருக்கிறார்.

 

சத்தீஷ்கர் மாநில பாஜக முதல்வராக இருந்த ராமன்சிங்கின் மகன் அபிஷேக் எம்பியாக இருக்கிறார். ஹிமாச்சல பிரதேச பாஜக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிரேம் குமார் துமாலின் மகன் அனுராக் தாகுர் எம்பியாக இருக்கிறார்.
 

 மகாராஸ்டிரா மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தந்தையும், அத்தையும்கூட மாநில அரசியலில் முக்கிய இடம் பிடித்தவர்கள்தான். அந்த மாநில பாஜக தலைவர் ஏக்நாத் கட்ஸேவின் மருமகள் ரக்‌ஷா இப்போது எம்பியாக இருக்கிறார். மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்து மரணம் அடைந்த கோபிநாத் முண்டேவின் மூத்த மகள் பங்கஜா அமைச்சராகவும், அவருடைய சகோதரி பிரிதம் எம்எல்ஏவாகவும் இருக்கிறார். பிரமோத் மகாஜனின் மகள் பூனம் எம்பியாகவும், மாநில பாஜக இளைஞர் பிரிவு தலைவராகவும் இருக்கிறார்.

 

yeshwant

 

பாஜகவின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்த் சின்கா எம்பியாகவும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் உ.பி.மாநில பாஜக பொதுச்செயலாளராகவும், எம்எல்ஏவாகவும் இருக்கிறார். கல்யாண்சிங்கின் மகன் ராஜ்வீர் சிங் எம்பியாக இருக்கிறார்.

 

இதெல்லாம் பாஜகவின் பரம்பரை ஆதிக்கத்துக்கு சில சாம்பிள்கள் என்றால், மாநில கட்சிகளில் நிலவும் பரம்பரை ஆதிக்கத்துக்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

 

(நாளை மாநிலக் கட்சிகளில் பரம்பரை ஆதிக்கத்தை பார்க்கலாம்)