கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்த கரோனா தொற்றுக்கு சமூக இடைவெளி வேண்டும் என்பதை தவறாக சித்தரித்து புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அவர்கள் கூறும்போது, " சுத்தம் என்பது வேறு, தீண்டாமை என்பது வேறு. இன்றைக்கு ஒரு நோய் ஏற்படுகின்றது என்றால் அதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை நாம் மேற்கொள்ளுவோம். இன்றைக்கு கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இதற்காக கைகளை சுத்தம் செய்தல், குறிப்பிட்ட அளவு இடைவெளி விடுதல், விலகி இருத்தல் முதலியவற்றை நாம் கடை பிடிக்கிறோம். ஆனால் இன்றைக்கு தீண்டாமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பத்திரிக்கையில் படம் போட்டுள்ளார்கள். அதில் தீண்டாமையை ஆதரிப்பது போன்று வாசகங்களை எழுதியுள்ளார்கள். இந்த நூற்றாண்டில் வெட்கப்பட வேண்டிய காரியத்தை அவர்கள் செய்து வருகிறார்கள். கரோனாவை விட இந்த தீண்டாமை மிகக் கொடிய ஒரு நோய். அது தவிர்க்கப் படவேண்டிய ஒன்று" என்றார்.