Skip to main content

ஊரடங்கால் மன அழுத்தமா? கட்டணமில்லா ஆலோசனை வழங்க மருத்துவர்கள் தயார்! 

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனித்திருத்தலும், சமூக விலகலும் மட்டுமே இப்போதைக்கு வைரஸ் பரவலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளாக சொல்லப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில், மலேரியா பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை, கரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஓரளவு மீட்க உதவுகிறது என்பது மட்டும்தான், இப்போதைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல் செய்தி.

இது ஒருபுறம் இருக்க, திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்கா, கடற்கரைகள் என பொழுதுபோக்கிய மக்களுக்கு தற்போதைய ஊரடங்கு உத்தரவு, அவர்களை சொந்த வீட்டுக்குள்ளேயே கைதி போன்ற மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. 'ஒர்கஹாலிக்' எனப்படும் பணியிடங்களிலேயே மூழ்கியவர்களுக்கு இந்த வீடடங்கல், கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.

 Is curfew stress? Doctors are ready to provide free consultation!

ஊரடங்கு உத்தரவினால் பெரிதும் மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பது உலகளவில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் என சில நாள்களுக்கு முன்பு, கவலை தெரிவித்து இருக்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா கட்டரெஸ். சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியோ நாடுகளில் குடும்ப வன்முறைகள் பெருகி இருக்கின்றன. 

இந்தியாவில், நம்ம ஊரிலும்கூட, 'எப்போது சார்... இந்த கரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும்? வீட்டில் அவரோடு மல்லுக்கட்ட முடியல. குழந்தைகளைக் கூட பார்த்துக்கலாம் போலருக்கு. அவரை வைத்து சமாளிக்க முடியல,' என கணவர்களால் ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றி பேசி வருகிறார்கள் பெண்கள். 

இது இப்படி இருக்க, ஏப். 11ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக இருக்க, டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டவர்கள், ஆல்கஹாலுக்கு பதிலாக வார்னீஷ், சானிடைஸர் லோஷன் ஆகியவற்றை நீரில் கலந்து குடித்து உயிரிழந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் என்கிறது காவல்துறை புள்ளிவிவரம். 

மதுரையில், ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய இளைஞர் ஒருவர் விரக்தியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை கடித்தே கொன்ற சம்பவமும், வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மற்றொருவர் மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. 

சமூகத்தில் பலருடைய மன அழுத்தத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் அவர்கள் அங்கீகாரத்திற்காக ஏங்குவதும்; அல்லது, அவர்களுடைய பிரச்னைகளை கேட்பதற்கு ஆள் இல்லாமல் போவதும்கூட முக்கிய காரணங்களாக சொல்லலாம். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மனக்குமுறல்களை ஒருவரிடம் கொட்டித் தீர்த்து விட்டாலே அவர்களின மனச்சுமை பாதியாக குறைந்து விடுகிறது. 

இந்நிலையில்தான், ஊரடங்கினால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு மற்றும் மதுவினால் தடம் புரண்டவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்குவதற்கான முன்னெடுப்புகளை 'நக்கீரன்' சார்பில் மேற்கொண்டோம். சேலத்தில், இலவசமாக மொபைல் போன் மூலமாக மனநல ஆலோசனை வழங்க சில மருத்துவர்கள், மன ஆலோசகர்களிடம் கேட்டோம். இதையறிந்த தோல் மருத்துவர் மேஜர் கனகராஜ், அவருடைய நண்பர்கள் இருவரை நம்மிடம் பரிந்துரை செய்தார். ஒருவர், மருத்துவர் பிரதீப். மற்றொருவர், மருத்துவர் தனராஜ் சேகர்.

சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த மருத்துவர் தனராஜ் சேகர், ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவரை தினமும் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இலவசமாக ஆலோசனை பெறலாம். அவரை, 97517 83771 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சேலம் தரண் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பிரதீப்பிடம் ஆலோசனை பெற விரும்புவோர், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அவரை 88723 77927 என்ற செல்போன் எண்ணில் அழைக்கலாம்.

இவர்களுடன், சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் விஜயும் இணைந்திருக்கிறார். இவர், தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகராக பணியாற்றி வருகிறார். விஜயை, தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை, 95002 12178 தொடர்பு கொள்ளலாம். 

மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள், குடிபோதையில் இருந்து மீள விரும்புவோர் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வரை மேற்குறிப்பிட்ட தன்னார்வ மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அவர்களுடைய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். தடை உத்தரவு அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே இந்த இலவச சேவை தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.