Skip to main content

இதயம் துடித்த இசைத் தாஜ்மஹால்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

காதல் மயக்கத்தால் இசையில் கரைபவர்களை அறிந்திருக்கிறோம். ஆனால் இசை மயக்கத்தால் காதலில் விழுந்தவர்களை அறிவீர்களா? ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பே, இசையால் காதலித்து இணைந்தவர்கள் கே.பி.சுந்தராம்பாளும் எஸ்.ஜி.கிட்டப்பாவும்தான். இது அந்தக் காலத்திலேயே நடந்த காதல் கலப்பு மணம்.

எஸ்.ஜி.கிட்டப்பாவோ எட்டுக் கட்டைவரை அநாயசமாக சுதி உயர்த்திப் பாடக்கூடிய கந்தர்வக் குரலோன் ஆவார். அவருக்கு இணையாக உச்ச ஸ்தாயியில் கம்பீரமாக சஞ்சரிக்கக் கூடிய கந்தர்வக் குரலழகி கே.பி.சுந்தராம்பாள்.

 

k p sundarambal - music - Taj Mahal

 

அந்த சுந்தரம்பாள் இளமையில் பட்ட துயரங்கள் சொல்லி மாளாதவை. அவரோடு பிறந்தவர்கள் ஒரு தம்பியும் ஒரு தங்கையும்தான். அவருடைய பிஞ்சுப் பருவத்திலேயே அவரது அப்பா மரணத்தைத் தழுவிவிட்டார். குடும்ப வருமானம் ஒரே நாளில் போனதில் குடும்பம் இருண்டது. அம்மா பாலாம்மாள் குழந்தைகளுக்கு உணவுகூடக்  கொடுக்கமுடியாமல் தவித்தார். ஒரு நாள் தம் பிள்ளைகள் மூவரையும் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். ’நீங்கள் பட்டினியோடு  கிடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. எல்லோருமாக ஆற்றில் குதித்துவிடுவோம்’ என்று பிள்ளைகளை அணைத்துக்கொண்டு கதறினார்.
 

அப்போது 5 வயதே ஆன சுந்தராம்பாள்... ”அம்மா கவலைப்படாதே.. நான் இருக்கேம்மா. நான் உங்களை எல்லாம் காப்பாத்துவேம்மா” என்றார் மழலை மாறாத குரலில். உடனே அவரை விழிநீரோடு, வாரி அணைத்துக்கொண்டார் பாலாம்மாள்.
 

இதன்பின், கோவைக்கும் கொடுமுடிக்கும் இடையில் ஓடும் ரயிலில் சென்று, தன் கணீர்க் குரலில் தினமும் பாடுவார் சுந்தராம்பாள். பயணிகள்  கொடுக்கும் காசில்தான் அவர்கள் வீட்டு உலை கொதித்தது. கே.பி.எஸ்.சின் குரலில் அந்த வயதிலேயே அதீத ஈர்ப்பு இருந்தது. ஒருநாள் அதே ரயிலில் நாடகத்துக்காக பயணித்த கிட்டப்பா, ரயிலில் பாடிய  சுந்தராம்பாளை வியப்போடு பார்த்தார். இசையில் அவர் ஒரு மகா மேதை என்பதை அறிந்து தன் அருகே அழைத்தார்.  ’யாரம்மா நீ? இவ்வளவு உச்ச ஸ்தாயியில் பாடுகிறாயே? முதலில் உட்கார்’- என்று தன் அருகே அவரை அமரவைத்துக்கொண்டு பாராட்டினார் கிட்டப்பா. 

 

k p sundarambal - music - Taj Mahal


அன்றைய இசைமேதை கிட்டப்பாவே பாராட்டியதால் அப்போதே சுந்தராம்பாளுக்கு ஒளிவட்டம் கிடைத்தது. நாடகமேடைகள் அவரை ஆசையோடு அழைத்தன.  மேடைகளில் நடித்தபடியே பாடி, தனக்கென்று ஒரு ரசிகர் கூத்தத்தைப் பெருக்கினார் சுந்தராம்பாள். 
 

1926-ல் இலங்கையிலிருந்து நாடகத்தில் நடிக்க, பதினெட்டே வயதான சுந்தராம்பாளுக்கு அழைப்பு வந்தது. அங்கேயும் சென்று தன் ஞானக்குரலால் ரசிகர்களை வசியம் செய்யத்தொடங்கினார். வள்ளித்திருமணம் நாடகத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ்நாட்டில்  இருந்து கிட்டப்பாவும் அழைக்கப்பட்டார். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தனர். ரசிகர்கள் இரட்டை அடைமழையில் நனைந்தனர்.  ஒருநாள் சுந்தராம்பாளின் குரலால் பித்தேறிய கிட்டப்பா,  உணர்ச்சி மேலீட்டில் அவர் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்தார். அங்கே என்ன நடந்தது? சுந்தராம்பாளே பின்னாளில் அது பற்றிச் சொன்னார். ''நான் படுத்து இருந்தேன். 'உன்னைப் பார்க்க ராஜகுமாரன் போல ஒருத்தர் வந்து இருக்கார்’னு அம்மா சொன்னார். நான் எழுந்து உட்காருவதற்குள், அவர் மின்னல்போல வந்து என் அருகே கட்டிலில் உட்கார்ந்துவிட்டார். அவர் பேசினார். நான் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். எனது கந்தர்வன் வந்துவிட்டார் என்று என் மனசு சொல்லியது! என்று அந்த தருணத்தைப் பற்றி சுந்தராம்பாள் வியந்து சொன்னார்.-  

ஏற்கனவே திருமணமாகி, கிட்டம்மாள் என்கிற மனைவி இருக்கும் நிலையில்... ‘உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்... உனக்கு விருப்பமா?’ என்று நேரடியாக விசயத்துக்கு வந்தார் கிட்டப்பா. ஒரு கணம் தயங்கிய சுந்தராம்பாள் ”என்னைக் கடைசி வரை கைவிடாமல் காப்பாற்றுவீர்களா?’ என்று கேட்டார். கிட்டப்பா உறுதிகொடுத்த பின்னரே, அவருக்கு சம்மதம் சொன்னார் கே.பி.எஸ்.

 

k p sundarambal - music - Taj Mahal

 

இந்தக் காதல் விவகாரத்தை அறிந்த கிட்டப்பாவின் சகோதரர் அப்பாதுரை ஐயரும், சுந்தராம்பாளின் மாமா மருக்கொழுந்துவும் கலந்து பேசினர். இதைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் 1927-ல் மயிலாடுதுறையில் எளிமையாக நடந்தது. அப்போது கிட்டப்பாவுக்கு வயது 21. சுந்தராம்பாளுக்கோ 19 வயது.

’அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. அது பதிவுத் திருமணமும் அல்ல. அது ஈசனருளால் நடந்த திருமணம். ஜென்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்!’ என்று, தங்கள் திருமணத்தைப் பற்றி பெருமிதமாக சொன்னார் கே.பி.எஸ். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை நீண்டநாள் தொடராமல் போனதுதான் துயரம்.

கணவருக்காக கதராடை உடுத்தினார். கணவரின் ரசனைக்கு ஏற்பத் தன்னை முழுதாய் மாற்றிக்கொண்டார் சுந்தராம்பாள். தேசபக்தி நாடகங்களில் அவரோடு சேர்ந்து நடித்துப் பாடல்களையும் பாடினார். இடையிடையே குறும்புத்தனத்தால் ஏற்பட்ட ஊடலும் கூடலுமாகக் கொஞ்சநாள் அவர்களின் இல்லறம் சென்றது. இதில் சுந்தராம்பாள் கருவுற்றார். இந்த நிலையில், உள்ளூரில் நடந்த கிருஷ்ணலீலா நாடகத்துக்குப் புறப்பட்டார் கே.பி.எஸ். கிட்டப்பாவோ, ’நான் வரலை. நீயும் போகவேண்டாம்’ என்றார். ஆனால் நாடகத்தின் மீதான ஆர்வத்தில் சுந்தராம்பாள் கிளம்ப, ‘என் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா?’ என்று கே.பி.எஸ்.சிடம் கோபித்துக்கொண்டு முதல் மனைவியிடம் போனார் கிட்டப்பா. கூடவே சஞ்சலம், சந்தேகம் என்று அவர் மனம் பழுதாகி, சுந்தராம்பாளிடமிருந்து கொஞ்சம் விலகி நின்றது.

 

K. B. Sundarambal


 

இதன்பின் பல கடிதங்கள் எழுதி, அதில் தன் உயிரையே இழைத்து இழைத்துத் தன் காதலை சுந்தராம்பாள் தெரியப்படுத்தியும், கிட்டப்பாவுக்கு மனம் இரங்கவில்லை. சுந்தராம்பாளின் தத்தளிப்பைக் காட்டும் அவரது கடிதங்களில் இரண்டு மட்டும்... இங்கே.
 

அன்புள்ள பதி அவர்களுக்கு,
 

அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொல்லியபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான். உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோஜனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்ய வேண்டுமென்று நினைத்தால் செய்யலாம். ‘வளை காப்பு’ இடவேண்டுமென்று தங்களிடம் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை. என்னைப் பற்றிக் கவனிக்க நான் ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுகதுக்கங்களுக்கும் பாத்தியப்படும் தன்மையில் இருக்கிறேனா? தாங்கள் அங்கும் நான் இங்கும் இருக்கும் நிலைமையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள்? ஏதோ என்மீது இவ்வளவு அன்பு வைத்துத் தவறாமல் கடிதம் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாகிலும் அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன்.
 

எது எப்படியிருந்தாலும் தாங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் உங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் (கிட்டப்பாவின் முதல் மனைவி)  கேட்பேனென்று அவளிடம் சொல்லுங்கள். அடிக்கடி வெளியில் சுத்தவேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலாகாலத்தில் சாப்பிடவும். அனாவஸ்ய விஷயங்களில் புத்தியைச் செலவு செய்ய வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன். மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாத விஷயமல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை நான் என்ன செய்கிறேன் பாருங்கள்!
 

இப்படிக்கு……..
தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்….
சுந்தரம், கரூர், நவம்பர் 1928.
 


தேவரீர் அவர்கள் சமூகத்திறகு எழுதியது.
 

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி தெரிந்தேன். தங்களுக்கு நான் எவ்வகையிலும் துரோகம் செய்தவளல்ல. மனதில் ஒன்று, வாக்கில் வேறொன்று வைத்துப் பேசக்கூடியவளல்ல. தாங்கள் அறிந்த கிணடல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு சேமமாக இருப்பீர்கள்! அம்மாதிரி எல்லாம் எழுதினால் தங்களுக்குப் பலன், மீளாத நரகக் குழி தான். கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப்பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும். எத்தனையோ வித்தியாசத்தில் இது ஒன்று. மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றிய கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேனென்று வருத்தம் வேண்டாம். தங்களுக்குப் பதில் போட இஷ்டமிருந்தால் எழுதவும். இல்லையேல் வேண்டாம். இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசீ. இதுதான் கடைசீ. இது உண்மையென்றும் பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு…
சுந்தரி, சென்னை.

இந்த நிலையில் அவரது குடிப்பழக்கமும் அதிகமானது. இதில் குடல்வெந்து அவதிப்பட்ட அவர், 1933-ல் சுந்தராம்பாளின் காதலை வெறுத்த நிலையிலேயே மரணம் அடைந்தார். சுந்தராம்பாளோ, இடிந்து உட்கார்ந்தார். இனி யாருக்கும் ஜோடியாக நடிக்கமாட்டேன் என்றபடி, அன்றே வெள்ளையாடையும், நெற்றியில் திருநீறும் அணிந்துகொண்டு 25 வயதிலேயே துறவுக்கோலம் பூண்டார். இனிப்பு உள்ளிட்ட சுவையான உணவுகளை ஒதுக்கினார். மேடையேறுவதையும் தவிர்த்தார். காந்தியடிகள் கேட்டுக்கொண்டதால் தேசபக்திப் பாடல்களை மீண்டும் பாடத்தொடங்கினார். 
 

k p sundarambal - music - Taj Mahal

 

 

இந்த நிலையில், 1935-ல் நந்தனார் படத்தில் நடிக்கும்படி தயாரிப்பாளரான ஆசான்தாஸ், அவரை வலியுறுத்தினார். எவ்வளவோ மறுத்தும் வலியுறுத்தலும் சிபாரிசும் தொடர்ந்ததால், தட்டிக்கழிக்கும் நோக்கத்தில் 1 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தால் படத்தில் நடிக்கிறேன் என்றார் சுந்தராம்பாள். அப்போது 40 ஆயிரம் ரூபாய் இருந்தாலே ஒரு படத்தை எடுத்துவிடலாம். எனினும், 1 லட்ச ரூபாயை எடுத்துவைத்துவிட்டார் தயாரிப்பாளர். அதனால் அவர் நந்தனார் படத்தில் நடித்தார். இதன்பின், ஒளவையார், மணிமேகலை, பூம்புகார், திருவிளையாடல் என 11 படங்களில் நடித்தார் சுந்தராம்பாள். எனினும் எந்தப் படத்திலும் எவருக்கும் அவர் ஜோடியாக நடிக்கவே இல்லை. 
 

தன் இசையெனும் ஞானப்பழத்தைப் பிழிந்து, தன் ரசிகர்களுக்குத் தொடர்ந்து கொடுத்துவந்த அந்த இசைச்சுடர், தனிமைத் திரியில் சோகமாய் எரிந்துகொண்டே இருந்தது.  தன் காதல் தலைவனான கிட்டப்பாவை மட்டுமே நெஞ்சில் சுமந்த சுந்தராம்பாள் என்ற அந்த இசைத் தாஜ்மஹால், 1980-ல் புற்றுநோயால் நம்மிடம் இருந்து கண் மறைந்தது. எனினும் ஏதேனும் ஒரு கல்யாண மண்டபத்திலிருந்தோ, கோயிலில் இருந்தோ வரும் சுந்தராம்பாளின் குரல்... இன்னும் கூடக் காற்றில் தன் காதல் தலைவனின் முகத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறது.
 

 

 

 

 

Next Story

ஆக்ரா பெயர் மாற்றம்; தாஜ்மஹாலில் தொல்லியல் துறை?

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Agra name change?; Department of Archeology at Taj Mahal

 

முகலாய மன்னர் ஷாஜகானால் தாஜ்மகால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இது தொடர்பான வழக்கு, கடந்த 3 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம், இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு நகரத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு அங்குள்ள பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முகல் சாராய் என்ற இடத்தின் பெயரை தீன் தயாள் உபாத்யாயா நகர் என்று மாற்றப்பட்டது. அதே போல், அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் பெயரை அயோத்தி என்றும் மாற்றப்பட்டுள்ளது. 

 

அந்த வரிசையில், அலிகார் என்ற இடத்தின் பெயரை இனிமேல் ஹரிகார் என்று மாற்றப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி அலிகார் நகர மேயர் பிரசாந்த் சிங்கால் தலைமையிலான கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆக்ராவை அக்ராவன் அல்லது அகர்வால் என்று மாற்றவும், முசாபர் நகர் என்ற இடத்தின் பெயரை லட்சுமி நகர் என்று மாற்றவும் உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

 

 

Next Story

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டவில்லையா? - ஆய்வு செய்ய பரிசீலனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Consideration to study whether Taj Mahal was built by Shahjahan or not

 

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இன்று இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.