மோடி அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களோடு, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அண்ணா கடைப்பிடித்த இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் நீடிக்க வேண்டும். அதற்கு ஆபத்து என்றால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று திமுக மட்டுமின்றி பெரும்பாலான எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
அதிமுகவும் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்பட்டது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ட்விட்டர் பதிவு தமிழகத்தை பரபரப்பாக்கியது. பிரதமரை தாஜா செய்யும் நோக்கத்திலோ, மற்றவர்களைக் காட்டிலும் தமிழ் மீது தனக்கு அக்கறை இருக்கிறது என்பதை வெளிக்காட்டவோ அந்த பதிவை அவர் போட்டிருக்கலாம்.
அந்தப் பதிவு மோடியின் மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக ஆதரிக்கும் பதிவாக மாறிவிட்டது. உலகின் பழமையான மொழியான தமிழை மற்ற மாநிலங்களில் விருப்பப்பாடமாக படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம் தமிழை மற்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக விருப்பப்பாடமாக எடுக்கக் கோரிக்கை விடுக்கிறார் என்று சொல்லப்பட்டது. அப்படியானால், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை முதல்வர் ஆதரிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக சார்பில் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார். விசிக தலைவர் திருமாவும் முதல்வரின் நோக்கத்தை சந்தேகம் எழுப்பினார்.
இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி தனது பதிவையே தூக்கிவிட்டார். நல்லவேளை எச்.ராஜாவைப் போல எனக்குத் தெரியாமல் எனது அட்மின் பதிவை போட்டுவிட்டார் என்று சொல்லாமல் விட்டார்.