'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' எனச் சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தி.மு.க ஆதரவில் வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல ஒரு படத்தை காட்டுவதற்குள் எடப்பாடி திக்குமுக்காடிப்போனார்.
இதுதவிர ஓ.பி.எஸ். மூன்று முறை முதலமைச்சராகி ஜெயலலிதாவின் சாய்ஸ் நான் என மக்கள் மத்தியில் சுற்றி வருகிறார். போதாக் குறைக்கு சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி தனக்கென ஒரு ஆதரவு தளத்தை தமிழகம் முழுவதும் உருவாக்கியிருக்கிறார். ஆனால் எடப்பாடி சசிகலா ஆதரவு பிரதிநிதியாக, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூலமாக முதல்வராகி ஆட்சியைத் தொடர்கிறார். அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் பற்றிய பயம் அவருக்குள் தொற்றிவிட்டது. கரோனா காலத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் கூட்டம் போட முடியாது. பொதுமக்களைச் சந்திக்க முடியாது. ஆனால் முதலமைச்சர் என்கிற போர்வையில் கரோனா பாதிப்புகளை ஆய்வு செய்கிறேன் என எடப்பாடி கிளம்பிவிட்டார். கோவை, மதுரை, திருச்சி, தர்மபுரி, வேலூர், கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டிணம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சுற்றி வந்துவிட்டார்.
ஒவ்வொரு மாவட்ட பயணம் குறித்தும் தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளரான செந்தில்குமார், கிரிராஜன், விஜயகுமார், தளவாய் சுந்தரம் என முதல்வர் அலுவலகத்தில் ஒரு டீமே முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தைக் கச்சிதமாகத் திட்டமிடுகிறது. அந்த மாவட்டங்களுக்கு முதலில் சுகாதாரத்துறை சார்பாக ஒரு மருத்துவர் குழு, நடமாடும் நவீன கரோனா டெஸ்டிங் லேபுடன் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடிய கூட்டம்-சந்திப்புகளில் பங்கேற்பவர்களுக்கு சோதனை செய்கிறார்கள். ரிசல்ட் அறிந்தபிறகே, முதலமைச்சர் அந்த மாவட்டத்திற்கு பயணம் செய்கிறார். பொதுக்கூட்டம் முடிந்து வீடு திரும்பியவுடன் முதலமைச்சருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
ஜெ. முதலமைச்சராக இருந்த காலங்களில் மக்களையும் பத்திரிகையாளர்களையும் நேரில் சந்திப்பது அரிதினும் அரிது. அதுபற்றி விமர்சனங்கள் வரும்போது, தனது சுற்றுப்பயணத்தில் திடீரென ரோட்டோரம் காரை நிறுத்தி, மக்களைச் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்துவார். அதுபோல எடப்பாடியின் திருவாரூர், தஞ்சை மாவட்ட ஆய்வுப் பயணத்தின்போது வயலில் களை பறித்துக்கொண்டிருந்த விவசாயிகளை திடீரென முதல்வர் சந்தித்தார். அவர்களுக்கு முகக் கவசம் வழங்கினார் என்பதற்கான புகைப்படம், பயணம் செய்யும் செய்தி மக்கள் தொடர்பு துறையால் வெளியிடப்பட்டது.
களைபறித்துக் கொண்டிருந்த பெண் விவசாயத் தொழிலாளர்கள் முகக் கவசம் அணிந்திருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது. "இது திடீர் நிகழ்வல்ல. அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு முதலமைச்சரின் வருகை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கும் கரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. அதன் ரிசல்ட் தெரிந்தபிறகே விவசாயிகளை எடப்பாடி சந்தித்தார்'' என்கிறார்கள் முதலமைச்சருடன் பயணம் செய்யும் அதிகாரிகள்.
தர்மபுரியில் முதலமைச்சருடன் விழாவில் கலந்துகொள்ள சென்ற தி.மு.க எம்.பி. செந்தில்குமார் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதில் சொன்ன எடப்பாடி, கரோனா டெஸ்ட் செய்யாமல் யாரையும் அனுமதிக்க முடியாது என்றார். அப்படியிருக்கும்போது, வயலில் வேலை செய்பவர்களை டெஸ்ட் எடுக்காமல் முதல்வர் சந்திப்பாரா என்றும் கேட்டனர்.
முதல்வரின் விசிட் குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். "இந்தப் பயணம் கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் எந்தப் பலனையும் தரவில்லை. கரோனா காரணம், அவரிடம் எங்களது குறைகளைச் சொல்வதற்கு நாங்கள் முயற்சி செய்தும் சந்திக்க மறுக்கிறார். எங்களது கோரிக்கைகளையெல்லாம் ஒரு மனுவாக எழுதி கொடுங்கள் என அதிகாரிகள் சொல்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் போகமுடியாத இடங்களுக்கெல்லாம் முதலமைச்சர் செல்கிறார். பேசுகிறார் என்பதைத் தவிர முதல்வர் விசிட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை.
எடப்பாடி ஆய்வு செய்யும் மாவட்டங்களில் கரோனா நிலவரம் எப்படி உள்ளது, நிறைவேற்றப்படும் திட்டங்கள் என்ன என்பதைப் பற்றிய புள்ளி விவரங்களுடன் முதல்வர் அலுவலகம் தயாரித்து தரும் பேச்சைப் படிக்கிறார். அது நேரலையாக ஒளிபரப்பாகிறது. எழுதிய பேச்சை, பச்சை நிறப் பின்னணியில் வரிக்கு வரி படிப்பதால், ஜெ'வாகிவிட முடியும் என நினைத்து நேரத்தை செலவு செய்கிறார். மக்களோ கட்சிக்காரர்களோ இதை ரசிப்பதில்லை.
கட்சி ரீதியாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியிடமும், ஓ.பி.எஸ் செல்வாக்கு எப்படி இருக்கிறது என விசாரிக்கிறார். அவருடன் வரும் உளவுத்துறையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சசிகலா வந்தால் என்ன நடக்கும் என முதல்வர் போகும் மாவட்டங்களில் உள்ள கட்சிக்காரர்களிடம் விசாரிக்கிறார்கள்.
அரசு சார்ந்த ஆய்வுப் பணிக்காக அவர் வரும்போது கட்சிக்காரர்களைத் திரட்டி வந்து வரவேற்பளிப்பதில் தொடங்கி, கார் டயரில் விழுகிற செயல் வரை அப்படியே ‘ஜெ'டப்பாடியாக இருக்கிறார் எடப்பாடி.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஆக்டிவாக செயல்பட முடியாதபடி கரோனா கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, ஆளில்லாத மைதானத்தில் ஆக்டிவாக கத்தி வீசிக்கொண்டிருக்கிறார்.