Skip to main content

உலகின் முதல் 5ஜி மாவட்டம் எது தெரியுமா?

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

சீனாவைச் சேர்ந்த ‘சைனா மொபைல்’ நிறுவனம் கடந்த சனிக்கிழமை அன்று உலகின் முதல் 5ஜி தொழில்நுட்ப சேவையை  ஷாங்காய் மாகாணத்திலுள்ள ஹோங்கு மாவட்டத்தில் சோதனை முயற்சியாக செயல்படுத்தியது. இந்த மாவட்டதில்தான் உலகிலேயே முதன் முறையாக மாவட்டம் முழுவதும் 5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகா பிட் நெட்வொர்க் உள்ளிட்ட சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

5g

 

“மாவட்டம் முழுவதும் இணைய சேவை கிடைப்பதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பல 5ஜி அலைவரிசை கோபுரங்கள் நடப்பட்டுவிட்டன” என்று சீனாவை சேர்ந்த ஒரு செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஷாங்காயின் துணை மேயர்  ‘வு கிங்’ 5ஜி சேவையின் முதல் வீடியோ காலை (Video Call) பயன்படுத்தியவர். முதல் 5ஜி ஃபோல்டபுல் (Foldable) மொபைலான  ‘ஹுவாய் மேட் எக்ஸ்’ ஸ்மார்ட் போனில்தான் இவர் வீடியோ கால் செய்துள்ளார்.
 

இந்த வருடத்திற்குள்ளாகவே நகரம் முழுவதும் 10000 5ஜி அலைவரிசை கோபுரங்களை நட திட்டமிட்டுள்ளோம். இது 2021ஆம் ஆண்டிற்குள் 30,000  5ஜி அலைவரிசை கோபுரங்களாக நடப்படும் என்று ஷாங்காயின் தொலைதொடர்பு துறையின் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 

5ஜி என்பது அலைபேசி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்று சொல்லலாம். 4ஜி இணைய சேவையை விட 10-100 மடங்கு வேகமாக 5ஜி இணைய சேவையில் பதிவிறக்கம் (Download) செய்ய முடியும். 
 

video call

 

 

இது மட்டும் இல்லாமல், 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் நோக்கத்துடன், சீனாவின் 100 தொலைதொடர்பு ஆராய்ச்சி நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஷாங்காய் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி வருகிறது. இதன் மூலமாக 2021ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யுவான்(14.9 பில்லியன் டாலர்) வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீன ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சீனாவைச் சேர்ந்த ஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனம், உலகரங்கில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை மேற்கத்திய நாடுகள் பல எதிர்க்கின்றன, குறிப்பாக அமெரிக்கா இதை எதிர்க்கிறது. ஹுவாய் 5ஜி தொழில்நுட்ப சேவை என்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 
 

ஹுவாய் நிறுவனத்தின்படி, இந்த ஆண்டின் பாதியிலேயே மேட் எக்ஸ் ஸ்மார்ட் போன் விற்பனைக்காக சந்தைக்கு வருகிறது. இந்திய சந்தையை முக்கியமாக குறி வைத்துதான் ஹுவாய் நிறுவனம் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொபைல் வெளியிட்ட பின்னர், மிக விரைவில் 5ஜி இணைய சேவையையும் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.