தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் கரோனோ பாதிப்பு ஆரம்பத்தில் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்தது சிவப்பு மண்டலத்திற்கு மாறி திரும்பவும் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறி தற்போது சிவப்பு மண்டலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. திருச்சி மாவட்ட அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் இப்படித்தான் கலர் கலராக மாறுகின்றன.
ஊரடங்கால் மக்கள் உணவுக்குத் தவித்த ஆரம்ப கட்டத்திலேயே திருச்சி காந்தி மார்க்கெட், தாராநல்லூர் பகுதியில் சந்தையில் வேலை செய்த தினக்கூலிகள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாத நேரத்தில் அமமுக மாநகரச் செயலாளர் ஜெ.சீனிவாசன் அதிரடியாக, அம்மா உணவகத்திற்கு நிதி உதவி அளித்துத் தொடர்ந்து 3 வேளையும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து அதிமுக மாநகரச் செயலாளர் குமார், புறநகர் செயலாளர் ரத்தினவேல் அமைச்சர், வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, அம்மா உணவகத்திற்குத் தொடர்ச்சியாக இலவசமாக உணவு வழங்குவதற்கு இலட்சக்கணக்கில் தின உதவி அளித்தது தினகூலிகளுக்கு ஊரடங்கு நாட்களைக் கடத்தி விடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது.
மாநகரச் செயலாளர் குமார் திருவெறும்பூர் தொகுதியைக் குறி வைத்தாலும் திருச்சி மாநகராட்சியில் உள்ள 6 உணவகங்களுக்கும் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு கொடுக்க நிதி உதவி, 25 நாட்களாகத் தொடர்ந்து பொதுமக்களுக்குத் தினமும் 1,000 பேருக்கு காய்கறி பை கொடுத்தார். அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தன் மகன் ஜவஹர் துணையோடு தொகுதியில் ஆரம்பத்தில் மாங்காய் கொடுத்தவர் அடுத்து ஒவ்வொரு வார்டில் தினமும் 300 பேருக்கு அரிசி கொடுத்தார். பிறகு அவரே களத்தில் இறங்கி ஏரியா வாரியாக கிருமிநாசினி தெளித்தார். தொகுதியில் அதிகம் உள்ள இஸ்லாமியர்களுக்குத் தினமும் அரிசி கொடுத்தார். இப்படிச் சுழன்று களத்தில் கலக்கினார். இதே தொகுதியைக் குறி வைத்துக் காய் நகர்த்தும் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் வெளியே தெரியாமல் தன்னுடைய விசுவாசிகளை வைத்து ஒவ்வொரு வார்டிலும் தன்னுடைய ஆட்களைக் கொண்டு அரிசி, பொருட்கள் என வாரி இறைத்து வெளியே சொல்லாதீங்க என்று கொடுத்து ரகசிய உதவி செய்தார். தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்த கட்சிக் காரர்களிடம் 3 தொகுதிக்கு ஒரு மா.செ. போடுவாங்க, அதில் கண்டிப்பாக நான் மா.செ. ஆயிடுவேன் என ஆருடம் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க.வில் 3 மாவட்டங்களாக பிரிக்க இருப்பதாக எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அமைச்சர் வளர்மதி, தனது முத்தரையர் சமுதாயத் தின் பிரதிநிதித்துவ அடிப்படையில் மா.செ.வாகிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறார்.
ஜெ.வினால் நேரடியாக ஓரங்கட்டப் பட்ட என்.ஆர்.சிவபதி, சில காலம் அமைதியாக இருந்து விட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனவுடன் அவரும் நானும் மாமா, மாப்பிள்ளை எனப் பேசிக்கொள்ளும் பழக்கம் எனப் பெருமையாகச் சொல்லிக் கொண்டு கரோனா காலத்திலும் வீட்டை விட்டு வெளியே வராமல் அடுத்த மா.செ. நான் தான் எனப் புறநகர் அதிமுக அரசியலை அவ்வப்போது குழப்பிக்கொண்டு இருக்கிறார்.
இதனாலயே இந்தக் கரோனோ காலத்தில் நலத்திட்ட உதவிகள் செய்கிற புறநகர் பகுதியில் அவ்வப்போது சில கோஷ்டி சிக்கல் ஏற்பட்டாலும் புறநகர் மா.செ. ரத்தினவேல் பழைய அனுபவத்தின் துணையோடு சாதி அரசியலில் சிக்காமல் சிக்கலை சமாளித்துக் கொண்டு இருக்கிறார். இப்படி ஆளுங்கட்சியான அதிமுகவுக்குள் உட்கட்சி அரசியலில் உள்குத்து இருந்தாலும் பொதுவெளியில் தெரியாமல் பார்த்துகொள்வதில் கவனமாக இருக்கிறார்கள்.
எதிர்கட்சியாக இருந்தாலும் ‘மந்திரி’ என்ற பட்டத்தை இன்னமும் தக்க வைத்திருக்கும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அதிரடி செயல்பாடுகளில் கலக்குபவர். தன்னுடைய அரிசி ஆலையில் இருந்த அரிசி மூட்டைகளை எல்லாம் தொகுதியில் ஒரே நேரத்தில் பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்களை வைத்து 36,000 பேருக்கு ஒரே நாளில் போர்க்கால அடிப்படையில் வழங்கினார். அரிசியுடன் மளிகைப் பொருட்களும் சேர்த்து கொடுத்த விவரம், ஆளும் கட்சியின் தலைமை வரை தெரிந்து திக்குமுக்காடியது. அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இலட்சக்கணக்கில் காய்கறிகளை இறக்குமதி செய்து மக்களுக்குக் கட்சியினர் மூலம் தினமும் கொண்டு போய்ச் சேர்த்தது நேரு டீம்.
மா.செ.வாகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மகேஷ் பொய்யாமொழியும் கலைஞர் அறிவாலயம் அருகே புதிய அலுவலகம் திறந்து அங்கிருந்து கலைஞர் பிறந்தநாளில் சீனியர்களுக்குப் பொற்கிழி, தினமும் ஒரு அமைப்பினருக்கு நலத்திட்ட உதவி என களச் செயல்பாட்டில் தீவிரமாக இருந்தார். அவருடனான இளைஞர் டீம் நலத்திட்ட உதவிகளில் வேகம் காட்டியது. அத்துடன் கே.என்.நேரு தலைமையில் அன்பில் மகேஷ் , சௌந்தரபாண்டியன் ஆகியோர் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் தினமும் 1,000 பேருக்கு உணவு கொடுக்கும் திட்டத்தின் கீழ் திருச்சியில் உள்ள சமூக நலஅமைப்புகள் துணையோடு தி.மு.க. கட்சி சாயம் இல்லாமல் அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் உணவு வழங்கியது. திருச்சி மாவட்ட பொதுமக்கள் அனுப்பிய கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க.வின் 3 சீனியர் வட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டது கட்சிக்குள் அதிர்வை ஏற்படுத்தியது. அன்பில் மகேஷின் மாவட்ட நிர்வாகத்துக்குட்பட்ட இவர்கள், கே.என்.நேருவுக்கு வேண்டியவர்கள் என்பதால் பரபரப்பு அதிகமானது. பகுதிச் செயலாளர் மதிவாணனின் தம்பி அருண் பொதுப்பணித் துறையில் வேலை செய்தபடியே, பொதுநலப்பணியாக தி.மு.கவில் அன்பில் மகேஷூக்கு உதவியாளராக உள்ளார். சீனியர்களுக்கு கட்சி தொடர்பான தகவல்கள் சரியாகப் போய்ச் சேராத நிலையில், மாவட்ட நிர்வாகத்துடனான முரண்பாடுகளால், அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதை ஆடியோவாக வைரலாக்கிவிட்டார் அருண் என்கிறார்கள் கட்சிக்குள். 30 ஆண்டுகளாக திருச்சி தி.மு.க.வில் வட்டச் செயலாளர் நீக்கம் என்பது நடந்தது கிடையாது என்பதால் பரபரப்பு கூடியது. உடனடியாக இப்பிரச்சினையில் கவனமெடுத்து, கட்சி நலனைக் கருத்தில்கொண்டு அனைத்து தரப்பிடமும் பேசி, நிலைமையை சுமூகமாக்கியிருக்கிறார் அன்பில் மகேஷ்.
இதனிடையே, தனது நம்பிக்கைக்குரியவரான விழுப்புரம் சிவாவுடன் குற்றாலத்துக்கு கே.என்.நேரு செல்ல, அவர் பா.ஜ.க தரப்புடன் பேசுகிறார் எனத் தகவல் பரவியது. பரபரப்படைந்த மா.செக்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராசன் ஆகியோர் குற்றாலம் செல்ல, எதையாவது கேட்டுட்டு வந்துடுவீங்களா என அவர்களை திருப்பியனுப்பியுள்ளார் நேரு. திருச்சி பிஜேபியினர் மோடி கிச்சன் என்கிற பெயரில் சமூக நல அமைப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். துணையோடு திருச்சியைச் சுற்றியுள்ள சேரிகள், நரிக்குறவர் காலனி, எனத் தினமும் உணவு வழங்கி தங்கள் இருப்பைப் பதிவு செய்தனர்.
கரோனோ காலத்தில் தமிழக அரசு மக்கள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ.களை ஆகஸ்ட் வரை வசூல் செய்யத் தடை விதித்த நிலையில் திருச்சி கிராமப்புற பகுதிகளில் கிராமவிடியல், ஆசீர்வாதம், எல்.என்.டீ, மைக்ரோ பைனான்ஸ் வட்டி வசூல் செய்வதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய மஸ்லீஸ் அமைப்பினர். மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் கலெக்டர் மைக்ரோ வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் அறிக்கை கொடுக்கவும் கிராமப்புற மக்கள் நிம்மதி அடைந்தனர்.
திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் சமூக விலகல் என்று வீட்டிலே முடங்கிக் கிடந்தவர் அனைத்துக் கட்சிகளும் களத்தில் இருப்பதால் நேரடியாக வந்து எம்.பி. நிதியில் இருந்து 20 இலட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகள் 35 பேருக்கு டூவீலர் வழங்கி தன் இருப்பைப் பதிவு செய்து கொண்டார். காங்கிரஸ் பிரமுகர் அடைக்கலராஜ் மகன் லூயிஸ் காங்கிரஸ் கட்சியினருக்கு வார்டு வாரி யாக பணம் கொடுத்து பொதுமக்களுக்கு அரிசி மூட்டைகள் கொடுத்து உதவினர். காங்கிரசின் கோஷ்டி அரசியலும் ஆங்காங்கே வெளிப்பட்டது.
திருச்சியில் எல்பின் என்கிற நிதி முதலீட்டு நிறுவனம் அதன் அறம் நலச் சங்கம் மூலம் கரோனோ நிவாரண நிதியாகத் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு 50 இலட்சம் நிதி கொடுத்தது மட்டும் இல்லாமல் அதன் நிறுவனர் ராஜாவின் பிறந்த நாளில் அவருடைய தம்பி ரமேஷ் ஏற்பாட்டில் 2 இலட்சம் பேருக்கு 3 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள் கொடுத்துத் திருச்சி அரசியல் கட்சியினரை ஆச்சரியப்பட வைத்தனர்.