
நக்கீரன் 360 யூடியூப் சேனலில் குட்டி குட்டி லைப் என்கிற தொடரின் வழியாக பல்வேறு சிறிய வேலைகளை, வியாபாரங்களை செய்து பொருளீட்டி எளிய வாழ்க்கை வாழும் விளிம்புநிலை மனிதர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி உத்வேகம் அளித்து வருகிறது.
அந்த வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்து பலர் உதவிகளைச் செய்வதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சிறிய உணவுக் கடைகளை நடத்துகிறவர்களுக்கு, நமது பார்வையாளர்கள் சென்று அவர்களது உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்வித்து இருக்கிறார்கள். இது போன்ற பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் மற்றுமொரு நெகிழ்ச்சியான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சாலையோரம் இரும்புப் பட்டறை வைத்துக் கொண்டு வேலை பார்த்து வரும் முதியவரான சோமு என்பவரைக் குட்டி குட்டி லைப் நிகழ்ச்சிக்காக சந்தித்தது நக்கீரன் குழு. அவரது தமிழ் மொழியில் இலங்கைத் தமிழர்கள் பேசுகிற வட்டார வழக்கு மொழி நடை தெரிய வந்தது. அதன் பிறகு போரில் அவர் கண் முன்னே நடந்த கொடுமைகளை, சுட்டுக் கொல்லப்பட்டதையெல்லாம் விவரித்து இருந்தார். அத்தோடு சோமுவுக்கு பாடகராக விருப்பம். நாம் கேட்டுக் கொண்டதற்காக பாடல்களை பாடிக் காண்பித்தார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரான்சிலிருந்து நமது நக்கீரனைத் தொடர்புகொண்டு சென்னை வந்தார்கள், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகளும். இருவரும் இரும்பு பட்டறை சோமுவைப் பார்க்க விரும்பினார்கள். நாம் அழைத்துப் போயிருந்தோம். இரும்பு பட்டறை வேலையைப் பார்த்துக் கொண்டே தனது உறவினர்களை 15 வருடங்களுக்குப் பிறகு பார்த்தவருக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல் திகைத்துப் போனார். பிறகு வீட்டிற்கு அழைத்து போவதாகவும் மற்ற உறவுகளை சந்திப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். வீடியோ கால் வழியாக பிரான்சிலிருக்கும் மற்ற உறவுகளுக்கும் தொடர்பு கொண்டு பேசினார்.
பிரான்சிலிருந்து வந்திருந்தவர்கள் எங்களோடு பிரான்சிற்கு வாருங்கள் என்று அழைத்த போதும் இங்கேயே இரும்பு பட்டறை நடத்தி வாழ்ந்து கொள்வதாக சொல்லி அவர்களோடு பிரான்ஸ் போக மறுத்து விட்டார். பிரான்சிலிருந்து இவ்வளவு வருடத்திற்கு பிறகு தன்னைப் பார்க்க வந்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். போரினால் இலங்கையிலிருந்து பிரிந்து பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்த குடும்பங்கள் பல இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள். அப்படியாகப் பிரிந்த உறவுகளை நக்கீரன் மூலமாக மீண்டும் சந்திக்க வைத்ததற்காகப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...