Skip to main content

அண்ணே தினகரன் சரிப்பட்டு வரமாட்டார், நாமெல்லாம் தி.மு.க.வுக்குப் போயிரலாம்!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

மே 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்களை, எம்.பி. தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போதே அறிவித்தார் மு.க.ஸ்டாலின். சூலூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ஆம் தேதி அ.ம.மு.க.வின் வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன். ஆனால் ஆளும்கட்சியான அ.தி.மு.க.விலோ நான்கு தொகுதிகளுக்கும் விருப்ப மனு, நேர்காணல் என சீன்கள் ஓடிக்கொண்டிருந்தன. முதல்வர் பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அமர்ந்து, யாரை வேட்பாளராக அறிவிப்பது என கட்சி நிர்வாகிகளிடம் சீரியசாக டிஸ்கஸ் பண்ணினார்கள். 

 

ops eps



இந்த சீரியஸ் டிஸ்கஸனுக்குப் பின்னணியில் செம சீரியஸான, காரசாரமான மேட்டர் ஒன்று நடந்துள்ளது. இந்த மேட்டரின் பின்னணியில் இருந்தவர் மாஜி மந்திரியும் முன்னாள் மேயருமான செ.ம.வேலுச்சாமிதான். ஜெயலலிதா ஆட்சியின் போது, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் வீட்டுவசதித்துறை, தொழில் மற்றும் வணிகவரித்துறை, கூட்டுறவுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் வேலுச்சாமி. கோவை மாநகராட்சியின் மேயராகவும் கோலோச்சியவர் வேலுச்சாமி. 
 

velumani



ஜெ. மறைவுக்குப் பின் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். பக்கம் உறுதியாக நின்றார்கள் செ.ம.வேலுச்சாமியும் அவரது ஆதரவாளர்களும். ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேலுச்சாமியும் குரல் கொடுத்தார். பிறகு, இ.பி.எஸ்.சுடன் கைகோர்த்துக் கொண்டு ஓ.பி.எஸ். துணை முதல்வரானதும் தரமான, சிறப்பான எதிர்காலம் இருக்கும் என நம்பினார் வேலுச்சாமி.
 

velusamy



கோவை எம்.பி. தொகுதிக்கு சீட் கேட்டுப் பார்த்தார், கிடைக்கவில்லை. பா.ஜ.கவுக்குப் போய்விட்டது. வேலுச்சாமிக்கு சீட் கிடைக்கவிடாமல் பா.ஜ.க.வுக்கு சீட் கிடைப்பதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டவர் அமைச்சர் வேலுமணி. சரி கொஞ்சம் காத்திருப்போம் என வேலுச்சாமி நினைத்த போதுதான் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மறைந்தார். வேலுச்சாமியின் சொந்த ஊர் சூலூர் என்பதால், அவருக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் செ.ம.வின் ஆதரவாளர்கள். 

 

stalin



சென்னைக்கு போய் இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் சூலூர் தொகுதிக்கு சீட் கேட்டார் வேலுச்சாமி. அதற்கும் பிரேக் போட்டார் அமைச்சர் வேலுமணி. இனிமேல் சீட் கிடைக்காது என நிச்சயமாக தெரிந்ததும் நேரடியாக இ.பி.எஸ்.சிடம் போனார். “இந்தக் கட்சிக்காக எவ்வளவோ பாடுபட்டிருக்கேன், ஜெயிலுக்குப் போயிருக்கேன். கட்சியில படிப்படியா முன்னுக்கு வந்தவன். எனக்கு சீட் கொடுக்கக் கூடாதுன்னு யார் சொன்னாலும் கேட்பீங்களா? என்னை கேவலப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டீங்க. நான் இப்ப கிளம்பிப் போறேன். நான் போனதும் என்னை சமாதானப்படுத்தணும்னு நினைச்சு, சூலூர் வேட்பாளரா என்னை அறிவிச்சீங்கன்னா, நான் வேட்பாளர் இல்லைன்னு பத்திரிகைகாரங்களை கூப்பிட்டு சொல்லிருவேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் அசிங்கப்பட வேண்டியிருக்கும்''’என சரவெடியாய் வெடித்ததும், அருகில் இருந்த ஓ.பி.எஸ். கிறுகிறுத்துப் போனார். கோவை வட்டாரத்தில் தன்னை மீறி மீண்டும் ஒரு அ.தி.மு.க. புள்ளி உருவாகக்கூடாது என நினைக்கும் வேலுமணிக்கு வெளிப்படுத்த முடியாத உற்சாக மனநிலை. 

செ.ம.வேலுச்சாமியிடம் அவரது ஆதரவாளர்கள், "அண்ணே தினகரன் சரிப்பட்டு வரமாட்டார், அதனால நாமெல்லாம் தி.மு.க.வுக்குப் போயிரலாம்'' வற்புறுத்தி வருகிறார்கள். இது உண்மையா என தெரிந்துகொள்ள செ.ம.வை நாம் தொடர்புகொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப்.  செ.ம.வேலுச்சாமி அல்லது மாதப்பூர் பாலு ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என அ.தி.மு.க.வினர் நினைத்துக்கொண்டிருந்தபோதுதான், யாருமே எதிர்பார்க்காத வி.பி.கந்தசாமியை களமிறக்கியிருக்கிறார்கள் இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும். 

பொள்ளாச்சி தொகுதியின் எம்.பி.யாக இருந்த சுகுமார் அ.ம.மு.க.வின் வேட்பாளர். இந்த சுகுமார்தான் நாடாளுமன்றத்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கும் போது வீடியோவில் சிக்கியவர்.  சூலூர் களம் சூடு பறக்கிறது.
 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.