பாஜக எதை எதிர்க்கிறதோ அதை ஆதரிப்பதும், எதை ஆதரிக்கிறதோ அதை எதிர்ப்பதும் இந்தியாவில் புதிய ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தீபிகா படுகோன். ஏற்கெனவே இவர் நடித்த 'பத்மாவத்' திரைப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து அந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் உருவாக்கின. அந்தப் படம் வசூல்ரீதியில் வெற்றி பெற்றதற்கு இந்த எதிர்ப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில்தான், குண்டர்களால் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகாவையும், அவர் நடித்த சப்பாக் திரைப்படத்தையும் உலக அளவில் ட்ரெண்டாக்கினார்கள்.
சப்பாக் திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. தீபிகாவுக்கு துணிச்சலான பெண் என்ற பெயர் கிடைத்திருக்கிறது. தீபிகாவுக்கு தன்னைப் போல ஒருவரை ஆலோசகராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று யோகா சாமியார் ராம்தேவ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், தீபிகா படுகோன் தன்னிச்சையாக எடுத்த முடிவே புத்திசாலித்தனமானது என்பதை அவருடைய படத்தின் வசூல் ரிசல்ட் தெளிவுபடுத்திவிட்டது. மாணவர்கள் மீதான வன்முறையைக் கண்டித்தே தீபிகா ஜேஎன்யு மாணவர்களைச் சந்தித்தார். ஆனால், ராம்தேவோ குடியுரிமைச் சட்டம் குறித்தெல்லாம் லெக்சர் அடித்திருக்கிறார்.
சரி, தீபிகாவின் முடிவால் அவர் நடித்த சப்பாக் திரைப்படத்திற்கு லாபமா? நஷ்டமா என்பதைப் பார்க்கலாம். புகழ்பெற்ற இந்தி பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான குல்ஸாரின் மகள் மேக்னா குல்ஸார் இயக்கியிருக்கும் படம் சப்பாக். 2005 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணை நஹிம் கான் என்பவர் ஒருதலையாக காதலித்தார். அவருடைய காதலை லட்சுமி ஏற்க மறுத்தததால் அவர் மீது நஹிம்கான் ஆசிட் வீசினார். இதில் லட்சுமியின் முகம், கழுத்து, மார்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீண்ட அவர் தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
துணிச்சல் மிகுந்த அந்த வாழ்க்கைக் கதையை மேக்னா குல்ஸார் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கெனவே, தல்வார், ராஸி என்ற உண்மைக் கதைகளை மையமாகக் கொண்ட இரு படங்களை இயக்கியிருக்கிறார். சப்பாக் படத்தின் புரமோஷனுக்காக ஜனவரி 7 ஆம் தேதி டெல்லி சென்றார் தீபிகா படுகோன். அந்தச் சமயத்தில் ஜேஎன்யு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். அந்த சமயத்தில் சிலர் முகமூடி அணிந்து, ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கொடூரமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தத் தாக்குதலில் மாணவர் சங்க தலைவி ஆயிஷே கோஷ் உள்ளிட்ட மாணவர்களும் ஆசிரியர்களுமாக 39 பேர் காயமடைந்தனர். காயமடைந்த ஆயிஷே கோஷ் மீதே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மறுநாள் திங்கள்கிழமை இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மும்பையில் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸீ பன்னு உள்ளிட்ட பாலிவுட் திரையுலகினர் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில்தான், டெல்லியில் சப்பாக் படத்தின் புரமோஷனுக்காக சென்றிருந்த தீபிகா படுகோன், ஜேஎன்யு மாணவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் அங்கு சென்றதும் போராட்டக் களம் சூடாகியது. மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப அஞ்சி நடுங்கும் சூழலில் திரையுலகைச் சேர்ந்த தீபிகா படுகோன் நேரிலேயே போராட்டக்களத்தில் பங்கேற்றது ஆர்எஸ்எஸ் பரிவாரங்களை கோபமாக்கியது. அவர்கள் உடனே தங்கள் வழக்கப்படி சமூகவலைத்தளங்களில் தீபிகாவை டேமேஜ் செய்யும் படங்களை மீம்ஸ்களாக்கி வெளியிட்டனர். தீபிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யும் பதிவுகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பரப்பினர்.
சப்பாக் படத்தில் ஆசிட் வீசுகிறவரை இந்துவாக காட்டியிருப்பதாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டனர். ஆனால், படத்தில் ஆசிட் வீசுகிறவரின் பெயர் பஷீர் ஷேக் என்ற உண்மை உடனடியாக வெளியிடப்பட்டது. சப்பாக் 10 ஆம் தேதி வெளியாகும் என்ற நிலையில் அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும், தீபிகாவை எதிர்க்க வேண்டும் என்றும் பாஜக ஐ.டி. டீம் படுதீவிரமாக பிரச்சாரம் செய்தது. அந்தப் பிரச்சாரம் வழக்கம்போலவே தீபிகாவுக்கும், சப்பாக் திரைப்படத்திற்கும் ஆதரவாக திரும்பியது. சப்பாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் அறிவித்தன.
எல்லா எதிர்ப்புகளையும் மீறி ஜனவரி 10 ஆம் தேதி சப்பாக் திரைப்படம் வெளியாகியது. முதல் நாள் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அடுத்தநாள் ஆறேமுக்கால் கோடியும், 12 ஆம் தேதி ஏழரைக் கோடி ரூபாயும் வசூலித்ததாகத் தகவல். முதல் ஆறு நாட்களில் 30 கோடி ரூபாயைத் தாண்டியது. படத்தின் மொத்த பட்ஜெட் 35 கோடி ரூபாய் என்ற நிலையில், தயாரிப்புச் செலவை ஒரு வாரத்திலேயே வசூலித்திருக்கிறதாம் சப்பாக். படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் தீபிகாவுக்கு இது மிகப்பெரிய வெற்றி. இந்தப் படம் அடுத்த வார முடிவில் 50 முதல் 70 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று சினிமா வட்டாரத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
சப்பாக் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவு பாஜகவை அதிரவைத்திருக்கிறது. மோடிக்கு ஆதரவாக மிகப்பெரிய பிம்பத்தை இவர்கள்தான் கட்டமைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தும் வேலையையும் வெற்றிகரமாக செய்தவர்கள் இவர்கள்தான். ஆனால், சமீபகாலமாக இவர்களுடைய பிரச்சாரம் எடுபடவில்லை. அதுமட்டுமின்றி, யாரை எதிர்க்கிறார்களோ அவர்களுக்கே லாபமாகத் திரும்புவதை எப்போது உணர்வார்களோ?