Skip to main content

எங்கெங்கும் ஏழைக்கு உதவும் வள்ளல்கள்! -இது கரோனா காலம்! 

Published on 05/06/2020 | Edited on 05/06/2020


‘கொள்ளையடித்தாவது மக்களைக் காப்பேன்..’, ‘பிச்சையெடுத்தாவது மக்களுக்கு உதவுவேன்..’, ‘வழிப்பறி செய்தாவது மக்களின் வறுமையை விரட்டுவேன்..’ என்பது போன்ற வாசகங்கள், இனி மதுரை அரசியல்வாதிகள் ஒட்டும் போஸ்டர்களில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், மக்களுக்கு உதவுவதை விளம்பரப்படுத்துவதில், அந்த அளவுக்குத் தீவிரம் காட்டி வருகிறார்கள், மதுரை அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஆர்.பி.உதயகுமாரும். ‘கொடைவள்ளல்’ என்று பெயரெடுத்த எம்.ஜி.ஆரை கூட, யாரும் இந்த அளவுக்கு விளம்பரப்படுத்தியதில்லை. மதுரை அமைச்சர்களோ, கரோனா புண்ணியத்தில், நாளும் விளம்பர வெளிச்சத்தில் நனைந்தபடியே உள்ளனர்.  
 

admk

 


ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு மேல் கரோனா நிவாரண உதவிகளைச் செய்துவிட்டாராம், செல்லூர் ராஜு. ஆனாலும், மக்களுக்கு உதவுவதில் ஓயவேமாட்டாராம். ‘என் வீட்டை விற்றுகூட கொடுத்துக்கொண்டே இருப்பேன்..’ என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை, போஸ்டராக்கி ஒட்டி குதூகலிக்கிறார்கள்,  அவருடைய ஆதரவாளர்கள். 

‘அப்படியென்றால், எங்க அமைச்சரும் (ஆர்.பி.உதயகுமார்) வாழும் வள்ளல்தான்..’ என  ’24 மணி நேரமும் யோசிப்பார். தமிழக மக்களை மட்டும்தான் நேசிப்பார். பல லட்சம் ஏழைக் குடும்பங்களுக்காக, தினமும் பேரிடராய், உறங்காமல் உழைத்துக்கொண்டிருப்பவர்..’ என்று போட்டிக்கு போஸ்டர் ஒட்டிவிட்டார்கள், ஆர்.பி.உதயகுமாரின் விசுவாசிகள். அறிந்தோ, அறியாமலோ அவர்கள், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரை ‘பேரிடர்’ என்று புகழ்ந்து(?)விட,  ‘உதயகுமார் வள்ளலா? பேரிடரா?’ என்று எதிர்த்தரப்பு கேலிப்பேசி சிரிக்கிறது. ஆக, அந்தப் போஸ்டரே,  அவருக்குப் ‘பெரும் துன்பம்’ ஆகிவிட்டது. 
 


ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு உதவியவர் என்று முதலில் விளம்பரப்படுத்திய அமைச்சர் செல்லூர் ராஜு தரப்பு, அடுத்த ‘அப்டேட்’. ஆக, 2 லட்சம் குடும்பங்களின் வறுமையைப் போக்கிய ‘ஏழைகளின் காவலர்’ என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறது. ‘24 மணி நேரமும் யோசிப்பார்..’ என்று போஸ்டரில் போட்டதெல்லாம் ரொம்ப ஓவர் என்பதை யாரும் சுட்டிக்காட்டினார்களோ என்னவோ, அடுத்த போஸ்டரில் ‘களப்போராளி’ என்ற அடைமொழியோடு நிறுத்திக்கொண்டனர். 
 

admk


“தி.மு.க.வினர் மட்டும் என்னவாம்? அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சொன்னதுபோல், ஒரு ரூபாய்க்கு உதவிவிட்டு, 100 ரூபாய் (டிவி விளம்பரக் கட்டணமாம்) செலவழித்து விளம்பரப்படுத்துகிறார்களே?” என்று, தி.மு.க.வை ஒரு பிடிபிடிக்கும் அ.தி.மு.க. தரப்பு, “அந்தக் கட்சிக்கு ஏகப்பட்ட டிவி சேனல்கள் இருக்கின்றன. அதன்மூலம், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவர் முகத்தையும்  வள்ளல் ரேஞ்சுக்கு காட்டி விளம்பரம் செய்கிறார்கள். ஏதோ எங்களால் முடிந்தது போஸ்டர்தான்..” என்று சமாளிக்கிறது.  
 

http://onelink.to/nknapp


மதுரையில் சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம் “24 மணி நேரமும் மக்கள் குறித்த யோசனையிலேயே இருக்கிறாராம், ஒரு அமைச்சர்? மக்களின் துயர் துடைப்பதற்காக, தன் வீட்டையே விற்பாராம், ஒரு அமைச்சர்? இந்த அளவுக்குக் கருணை உள்ளம் கொண்டவர்களா, நம் அமைச்சர்கள்? நம்பும்படியாகவா இருக்கிறது? அமைச்சர்கள் ஆவதற்கு முன் இவர்களது நிலைமை என்ன? இவர்கள் செலவழிக்கும் பணம் எங்கிருந்து வந்தது? ஒரு உண்மை தெரியுமா? தி.மு.க.வினரோ, அ.தி.மு.க.வினரோ, இங்கே பலரும், கரோனா நிவாரண உதவிகளைச் செய்கிறார்கள். ஆனாலும், அடுத்த ஆண்டு வரப்போகும் சட்டமன்ற பொதுத்தேர்தலை மனதில் வைத்தே இந்த உதவிகள் செய்யப்படுவதாக எண்ண வேண்டியதிருக்கிறது. ஒருவேளை, 4 ஆண்டுகளுக்கு முன்போ, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னோ, கரோனா வந்திருந்தால், சொந்தப் பணத்தைச் செலவழித்து மக்களுக்கு உதவுவதில், அரசியல் கட்சியினர் இத்தனை தீவிரம் காட்டியிருக்க மாட்டார்கள். இதுவே நிதர்சனம்.” என்றார். 

ஏழைகளுக்கு உரிய நேரத்தில் உதவுவதை, கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுவதும், நல்லவிதமாகப் பார்ப்பதுமே நல்லது!


 

சார்ந்த செய்திகள்