குஜராத் பிரதமராக இருந்த நரேந்திர மோடியை, இந்தியாவின் பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்தபோது, அதனை செயல்படுத்தும் தளபதியாக நியமிக்கப்பட்டவர் மோடி அமைச்சரவையில் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்து, போலி என்கௌண்டர் வழக்கில் சிக்கி சிறை சென்ற அமித்ஷா. அவரின் தேர்தல் வியூகம் மோடியை பிரதமராக்கியது.
![reddy](http://image.nakkheeran.in/cdn/farfuture/rsduV_HDPy_3u9VBM-SCo4oGZknGhYbzRZP9vsXM3Mc/1533347654/sites/default/files/inline-images/janardhanreddy.jpg)
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் எடியூரப்பாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கும் பொறுப்பை பாஜக தலைமை, ஜனார்தன ரெட்டியிடம் ஒப்படைத்தது. காங்கிரஸ் கட்சி, சித்தராமைய்யாவுக்கு அதே வேலையை செய்ய சிவக்குமாரிடம் ஒப்படைத்தது. இந்த இருவரும்தான் தங்கள் கட்சி வெற்றி பெற கோடி கோடியாய் பணத்தை செலவழித்தார்கள்.
தேர்தல் முடிவு யாருக்கும் பெரும்பான்மையில்லை. பெரும்பான்மையில்லாத நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரத்தைக் கொண்டு கர்நாடகா முதல்வர் பதவியில் பாஜக எடியூரப்பாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வேலையை ஜனார்தனரெட்டியிடம் ஒப்படைத்துள்ளது பாஜக. எடியூரப்பாவை பதவியில் இருந்து இறக்கிவிட்டு காங்கிரஸ் – ஐக்கிய ஜனதா தளம் குமாரசாமியை முதல்வர் பதவியில் அமரவைக்கும் பொறுப்பை சிவக்குமாரிடம் ஒப்படைத்துள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை.
கோடி கோடியாய் பணம் வைத்துக்கொண்டு அனைத்து விதமான வழிகளிலும் பேரம் பேசிய இந்த தளபதிகள் பின்னணி என்ன?
![sivakumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/KKfim5JDFOUYGbBasTp4BmrfcRjRBl2fS8gavvHrkh0/1533347646/sites/default/files/inline-images/dc-Cover-v9lvls8l7v4og61qs6a5r2edn6-20170929062734.Medi_.jpeg)
பாஜக – ஜனார்தன ரெட்டி
ஆந்திராவில் இருந்து பிழைப்புக்காக கர்நாடகா வந்தவர் ஜனார்தனரெட்டி. இவரின் சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, நண்பர் ஸ்ரீராமுலு. கர்நாடகாவின் பெல்லாரி, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை வெட்டியெடுத்து சம்பாதித்துக்கொண்டு இருந்தார்கள் ரெட்டி பிரதர்ஸ். அரசியல் அடைக்கலம் வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
1999 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த சோனியாகாந்தி, பெல்லாரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் சுஷ்மா சுவராஜ்ஜை நிறுத்தியது பாஜக தலைமை. அப்போது சுஷ்மாவுக்காக தேர்தல் கள தளபதியாக இருந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். அந்தத் தேர்தலில் சுஷ்மா தோல்வியை சந்தித்தாலும் ரெட்டி சகோதரர்களின் தேர்தல் பணியால் கவரப்பட்ட சுஷ்மா, அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். அதோடு, அப்போது மத்தியில் பாஜக ஆட்சி என்பதால் சலுகைகளை வாரி வழங்க ரெட்டி சகோதரர்களின் தொழில் பல மடங்கு வளர்ந்து கோடிக்கோடியாய் கொட்டியது. அதில் ஒரு பங்கு சுஷ்மாவுக்கும் சென்றதாக சொல்லப்பட்டது.
2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக முதல் முறையாக பெல்லாரி பகுதியில் 3 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றது. அதற்கு முழு முதல் காரணகர்த்தா ரெட்டி சகோதரர்கள். 2006ல் கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டியில்லை. ஜனதா தளமும் – பாஜகவும் கூட்டணி சேர்ந்து, நீ இரண்டரை வருடம், நான் இரண்டரை வருடம் என ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார்கள். இதற்கு பெரும் பலமாய் இருந்தது ரெட்டி சகோதரர்கள். தனது நண்பர் ஸ்ரீராமுலுவை அமைச்சராக்கினார் ஜனார்த்தனரெட்டி.
மீண்டும் அடுத்த தேர்தல்... பாஜகவை ஆட்சியில் அமர்த்த கடுமையாக தேர்தல் வேலை செய்தது ரெட்டி சகோதரர்கள்தான். சில நூறு கோடிகளை செலவு செய்தார்கள். பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்று, சுயேட்சைகள் ஆதரவுடன் எடியூரப்பா முதல்வரானார். ஜனார்தனரெட்டி, சுற்றுலாத்துறை அமைச்சரானார். சகோதரர்கள் வாரிய தலைவரானார்கள். நண்பர் ஸ்ரீராமுலுவும் அமைச்சரானார். முன்பை விட பல மடங்கு உயர்ந்தது ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத கனிம வியாபாரம். இது தொடர்பான வழக்குகளுக்காக 2011 செப்டம்பர் 5ந்தேதி ஜனார்தனரெட்டி கைது செய்யப்பட்டார்.
எடியூரப்பா எவ்வளவோ முயன்றும் பாஜகவின் மத்திய தலைமை காப்பாற்றவில்லை. இதனால் கோபமான ஜனார்த்தனரெட்டி, 2013 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனது நண்பர் ஸ்ரீராமுலுவை பாஜகவில் இருந்து வெளியில் வரவைத்து தனிகட்சி தொடங்கவைத்தார். எடியூரப்பாவும் தனிக்கட்சி தொடங்கினார். 2013 தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால் பாஜக தலைமை, எடியூரப்பா, ஸ்ரீராமுலுவை சமாதானம் செய்து பாஜகவுக்கு அழைத்துக்கொண்டது. 2014ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரான பின், 2015 ஜனவரி மாதம் சிறையில் இருந்த ஜனார்தன ரெட்டிக்கு பிணை கிடைத்து வெளியில் வந்தார்.
அந்த ஜனார்தனரெட்டி, இந்த 2018 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதற்காக சுமார் 45 தொகுதிகளுக்கான தேர்தல் செலவை முழுவதும் ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்தார். மற்ற தொகுதிகளுக்கும் செலவு செய்தார். ஆனால் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தும் பிரதமர் மோடியின் ஆசிர்வாதத்தாலும் ஆளுநரின் அட்டகாசத்தாலும் முதல்வராகினார் எடியூரப்பா. பெரும்பான்மைக்கு தேவையான 7 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து இழுக்க ஒரு எம்.எல்.ஏவுக்கு 150 கோடி என ரேட் பிக்ஸ் செய்து வலை வீசினார் ரெட்டி. இதில் இரண்டு, மூன்று எம்.எல்.ஏக்கள் சிக்கினர். அதே நேரத்தில் பாஜகவின் எடியூரப்பாவுக்காக, ஜனார்தனரெட்டி பேரம் பேசிய ஆடியேவை காங்கிரஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இத்தனை வியூகங்களும் பேரங்களும் தோற்றுப்பாக கண்ணீர் உரை நிகழ்த்தி தனது 56 மணி நேர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவ்வளவு வலிமை மிக்க தளபதி இருந்தும் தளவாடங்கள் இருந்தும் இவரால் எம்.எல்.ஏக்களை கைப்பற்ற முடியாததற்கு காரணம் எதிரணியில் இருந்த பலமான இன்னொரு தளபதி.
![sivakumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/GnG9D3eZ2hX9q5unY8UDD_4GIwWa_gYdWoc2_vbyhag/1533347620/sites/default/files/inline-images/64732-odyudzrtoc-1501792307.jpg)
![reddy](http://image.nakkheeran.in/cdn/farfuture/j7hicVOWKfDBSx2A1xjqBOWXNqDTDcKSI-jb8HxzGso/1533347618/sites/default/files/inline-images/24-1422074540-janardhan-reddy-latest.jpg)
காங்கிரஸ் – சிவக்குமார்
மைசூர் அருகிலுள்ள கனகபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது தம்பி சுரேஷ். இரண்டு பேருமே தீவிர காங்கிரஸ் செயல்பாட்டாளர்கள். விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இன்று இவர்கள் செய்யாத தொழிலே கிடையாது. கனிம வளத்தை வெட்டி விற்பதுதான் முக்கிய முன்னணி தொழில். 1983ல் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் 1989 முதல் சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் அமரும்போதெல்லாம் இவருக்கு அமைச்சர் பதவி நிச்சயம். கடந்த 2013-2018 ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தார். 2015ல் இவர் மீது சுரங்க முறைகேடு என சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
2017ல் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு இரண்டு எம்.பிக்களை தேர்வு செய்யும் தேர்தலில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றபோது, அவர்களை பாதுகாக்கும் பணியை காங்கிரஸ் தலைமை, அமைச்சராக இருந்த சிவக்குமாரிடம்தான் ஒப்படைத்தது. அவர்தான் மைசூர் அருகே நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைத்து வேண்டியதை செய்து தந்து, ஒரு எம்.பி சீட்டை கன்பார்ம் செய்து தந்தார். இதில் கோபமான மோடி அரசாங்கம், வருமானவரித்துறையை சிவக்குமார் மீது ஏவியது. சென்னை, பெங்களுரு, டெல்லி என 67 இடங்களில் 300 அதிகாரிகள், 80 மணி நேரம் ரெய்டு செய்தும் அமைச்சராக இருந்த சிவக்குமாரை அசைக்க முடியவில்லை பாஜகவால்.
2018 சட்டமன்ற தேர்தலில் ராம்நகர் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட சிவக்குமார், வேட்பு மனுவில் 700 கோடி சொத்துள்ளது என்று கணக்குகாட்டி தேர்தல் ஆணையத்தை அலறவிட்டார். தேர்தல் முடிவில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனதா தளம் வேட்பாளர் நாராயணகவுடாவை விட 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்தார். காங்கிரஸ்க்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லையென்றதும் ஜனதா தளத்துடன் காங்கிரஸ் தலைமை கூட்டணி வைத்து, மஜத குமாரசாமியை முதல்வராக்க முடிவு செய்தது. அப்படி முடிவு எடுக்கப்பட்டதும் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருக்கும் பொறுப்பை சிவக்குமாரிடம் தான் சித்தாராமையா ஒப்படைத்தார். இந்த சிவக்குமார் தந்த தெம்பில்தான், குமாரசாமி, நாங்களும் பாஜகவில் இருந்து எம்.எல்.ஏக்களை தூக்குவோம் என்றார் கெத்தாக. சிவக்குமார் முதன் முதலாக 1985ல் சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் ஜக்கிய ஜனதா தளம் தேவகௌடா. அவரிடம் தோற்ற சிவக்குமார், இப்போது கட்சி தலைமை சொன்னதற்காக அவரது மகனை முதல்வராக்க முயற்சி எடுத்து வருகிறார்.
இப்படி காங்கிரஸ் – பாஜக இரண்டு தரப்பிலும் இரண்டு தளபதிகளை களத்தில் இறக்கினார்கள். கர்நாடகாவின் முதல்வர் யார் என்பது இந்த மைன்ஸ் அதிபர்கள் கைகளில்தான் உள்ளது. தற்போது எடியூரப்பாவின் தளபதி தோற்றிருக்கிறார். சித்தராமையாவின் தளபதி வெல்வாரா? விரைவில் தெரியும்.