Skip to main content

ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் டிவி நிகழ்ச்சி -இன்னொரு பிக்பாஸா?

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

தமிழில் புதியதாக அறிமுகமாகியுள்ள கலர்ஸ் தொலைக்காட்சி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களையும், ரியாலிட்டி ஷோக்களையும் தற்போது தமிழில் ஒளிபரப்பவுள்ளது.
 

arya


தமிழகத்தில் மிகவும் வரவேற்பைப்பெற்ற ''நாகினி'' தொடர் இவர்களுடைய தயாரிப்பே, தற்போது பல்வேறு தமிழ் தொடர்களையும் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள கலர்ஸ், தேனி மற்றும் பொள்ளாச்சியில் மாவட்டங்களை முகாமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த சேனலில் ஒளிபரப்ப ஆயத்தமாக உள்ள ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிதான் ''எங்கள் வீட்டு மாப்பிள்ளை". ஆர்யா தன் வாழ்க்கை துணையை தேடும்  இடமாக அந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொலைக்காட்சியின் தமிழ் விளம்பர தூதராகவும்  ஆர்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் ஆர்யா தன்  வாழ்க்கை துணையை தேர்தெடுப்பார் என அறிவித்துள்ளது. இதற்காக அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள கிட்டத்தட்ட 7000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் அதிலிருந்து 16 பெண்களை தேர்வுசெய்து நிகழ்ச்சியை தொடங்கவிருக்கிறது கலர்ஸ் தமிழ்.
 

arya


தற்போது நிறைய டிவி ரியாலிட்டி ஷோக்கள் டி.ஆர்.பி.(TRP) எனப்படும் தரம் முந்துதலுக்காக இப்படி ஏகப்பட்ட பரபரப்புகளை உருவாக்கும்  நிகழ்ச்சிகளை அதிலும் சினிமா பிரபலங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை சுவாரஸ்யப்படுத்தி நிகழ்ச்சிகளை தயாரித்து  ஒளிபரப்புகிறது. அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ''பிக்பாஸ்'' என்ற ஷோ பெரும் எதிர்பார்ப்பையும் அதேபோல் எதிர்ப்பையும் சந்தித்தது. அதையும் தாண்டி எகிறும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது ''எங்கள் வீட்டு மாப்பிளை''.

ஏற்கனவே அமெரிக்காவில் ABC-யில் ஒளிபரப்பப்பட்ட ''THE BACHELORS'' என்ற ஷோவின் அச்சு அசல் காப்பிதான் இந்த எங்கள் வீட்டு மாப்பிளை . இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தவர் மைக் ப்ளெய்ஸ். கிரிஷ் அரிசொன் வழங்கிய இந்த நிகழ்ச்சி அமரிக்காவின் ஒரு அடல்ட் ஷோ ஆகும். அந்த ஷோவில் வரும் பிரபலம் சில பிரபல நடிகைகளுடன் சேர்ந்து பல்வேறு டாஸ்க்குகளை (TASK) எதிர்கொள்வார். இடையிடையே எலிமினேஷன்கள் என பரபரப்பை ஏற்படுத்தி கடைசியில் தன் மனதிற்கும், குணத்திற்கும் ஒத்த பெண் பிரபலத்தை தேர்ந்தெடுத்து  திருமணம் செய்துகொள்வார். இதேபோன்ற ஒரு ஷோ தமிழில் வரப்போகிறதென்றால் கண்டிப்பாக சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது ஏனெனில் அமெரிக்க போன்ற நாடுகளின் கலாச்சாரம் என்பது வேறு, நம் கலாச்சாரம் வேறு. எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழில் தேவையா? என ஒரு  கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே பிக் பாஸ், சொல்வதெல்லாம் உண்மை போன்ற தனி மனிதனின் பிரச்சனைகளையும் கருத்துக்களையும் கொண்டு சுவாரசிய தீனிபோடும் டி.வி. நிகழ்ச்சிகள் பல விமர்சனங்களை பெற்றிருக்க இதுபோன்ற நிகழ்ச்சி தேவையா, இது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்குமா? என்ற ஒரு கேள்வியே எழுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.