விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அ.தி.மு.க, தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்தார். இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தான் பிரதான இலக்கு என்றும், ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (18-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், த.வெ.க தலைவர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவர் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது அவருடைய நோக்கம். தனிப்பட்ட முறையில் ஒரு இளைஞர் (விஜய்) எம்.ஜி.ஆர் போல் தான் சம்பாரித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவ நினைக்கிறார். அவர் களத்திற்கு வந்த அவருடைய கொள்கை, செயல்பாடு உள்ளிட்டவையெல்லாம் முதலில் சொல்லட்டும். எப்போதுமே அதிமுக யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை வச்சுக்காது. அவர் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்” என்று கூறிச் சென்றார்.