Skip to main content

பலநாள் திருடனைப் போல போலீஸ் தற்போது மாட்டிக் கொண்டுள்ளது - சி.கே. குமரவேல் குற்றச்சாட்டு!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

v


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். 

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை, மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களது மரணத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த சி.கே குமரவேல். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

100 நாள் 'லாக் டவுன்' முடிந்துள்ளது, நீங்கள் ஒரு பிசினஸ் மேனாகவும் இருப்பதால் இதில் நிறைய சிரமங்களைச் சந்தித்து இருப்பீர்கள். மக்களும் பல்வேறு சிரமங்களைக் கடந்து இதனைச் சமாளித்து வந்துள்ளார்கள். இந்த 'லாக் டவுன்' தோல்வி அடைந்த ஒன்றா, அல்லது வெற்றி பெற்ற ஒன்றா என்ற கேள்வி தற்போது அதிகம் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. மன ரீதியாக பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 'இருட்டுக் கடை அல்வா' உரிமையாளர் கூட நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த 'லாக் டவுன்' சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அசாதாரண சூழ்நிலையாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எல்லோரையும் நாம் குறை சொல்லிவிட முடியாது. இந்தச் சூழ்நிலைகளை இதற்கு முன் யாரும் சந்தித்தது இல்லை. அது அதிகாரிகளாக இருக்கலாம், நாடுகளாக இருக்கலாம், தனி நபராகக்கூட இருக்கலாம். அனைவருக்கும் இதுதான் முதல் அனுபவம். அதனால் நிறைய விஷயங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி அனுமானிக்க முடியவில்லை. அதில் தனிப்பட்ட குற்றம் சொல்ல முடியாது. அதையும் தாண்டி பிரதமர் மோடி இந்த 'லாக் டவுனை' அறிவிக்க தாமதப்படுத்தி விட்டார் என்பதே எங்களுடைய குற்றச்சாட்டு. 

 

டிசம்பரில் உலகத்தில் அதன் பரவல் ஆரம்பித்து விட்டது. ஜனவரியில் இந்தியாவுக்கு வந்துவிட்டது. பிப்ரவரியில் ராகுல் காந்தி இதைப்பற்றி சொல்கிறார், ஆனால் மிக தாமதமாக மார்ச் இறுதியில் இந்த 'லாக் டவுன்' முடிவை எடுக்கிறார்கள். எட்டு மணிக்குச் சொல்லி 12 மணிக்கு அதை அமல் படுத்தியதால்தான் தேசிய அளவில் பல்வேறு பிரச்சனைகள் இன்றளவும் நாம் சந்தித்து வருகின்றோம். தமிழகத்தில் ஓரளவு டைம் கொடுத்தார்கள். மக்கள் போக வேண்டிய இடத்திற்குச் சென்றார்கள். திங்கள் கிழமை அறிவித்து செவ்வாய் வரை நேரம் கொடுத்தது ஒருபுறம் உதவியாக இருந்தது. ஆனால் மோடி அவர்கள் இதன் பாதிப்புகள் எதனையும் யோசிக்காமல் இந்த முடிவு எடுத்தது தவறான ஒன்றாகும்.

 

http://onelink.to/nknapp

 

சாத்தான் குளத்தில் தந்தை மகன் மீது போலிஸ் அணுகுமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று சொல்வார்கள், இங்கே பலநாள் போலீஸ் அகப்பட்டுள்ளார்கள். அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களுக்கும் இது புதிது கிடையாது. இதே மாதிரி போலிசார் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் இருக்கிறார்கள். திடீரென சாத்தான் குளத்தில் மட்டும் மூன்று சாத்தான்கள் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. இந்த மாதிரியான ஆட்கள் தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறார்கள். காக்கிச் சட்டை போட்ட சாத்தான்கள் நிறைய ஸ்டேசன்களில் சுற்றிவருகிறார்கள். அதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் திருடர்கள் தற்போது மாட்டி இருக்கிறார்கள். இன்னும் மாட்டாத திருடர்கள் பலபேர் தமிழகம் முழுவதும் இருந்து வருகிறார்கள்.