Skip to main content

இன்னொரு மெரினாவாக ஸ்டெர்லைட் போராட்டம் மாறும்! - தூத்துக்குடி ஜோயல்

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக மக்கள் பெருந்திரளாகக் கூடி போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். தொடக்கத்திலிருந்தே மதிமுக ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியது. மதிமுகவில் இருந்த பொழுது அதில் முக்கிய பங்காற்றினார் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல். அவரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்துப் பேசினோம்.  
 

Joel DMK



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக நடத்திய போராட்டங்களில், நீங்களும் முக்கிய பங்கு வகித்தீர்கள். இன்று அது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது. அது பற்றி? 

இந்த ஆலைக்கு எதிராக அப்போது மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். அப்போது மதிமுகவில் இருந்தேன். இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கச் சென்றோம். அப்போது பிரகாஷ் என்பவர் கலெக்டராக இருந்தார். மனுவை வாங்க மறுத்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே கேட்டுக்குப் பூட்டு போட்டோம். இன்றும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். தற்போது திமுகவிற்கு வந்த பிறகும் தலைமையின் அனுமதி பெற்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். தாமிரபரணியில் இருந்து மக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் திட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை சட்டத்தை தவறாக பயன்படுத்தி தினமும் பல கோடி லிட்டர் எடுத்தது. ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பைசாவுக்கு எடுத்துள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டு அதனை தடுத்து நிறுத்தினோம்.

மக்கள் மனதளவில் இந்த ஆலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயமே செய்ய முடியவில்லை. நல்ல காற்றை சுவாசிக்க முடியவில்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக இந்த ஆலையை மாற்ற முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்தால் தூத்துக்குடியில் வாழ முடியாது என்று ஒவ்வொருவரின் மனதிலும் தோன்றிவிட்டது. அதன் பிரதிபளிப்புதான் இன்று மக்கள் போராட்டமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக அரசு தலையிட்டு இந்த ஆலைக்கு கட்டுப்பாடு விதிக்காவிட்டால் மெரினா போராட்டம் போன்று மிகப்பெரிய போராட்டமாக மக்கள் மாற்றுவார்கள்.

 

sterlite protest



ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு இதுவரை என்ன வகையான பாதிப்புகள், நோய்கள் நேர்ந்திருக்கின்றன?

தமிழ்நாட்டிலேயே அதிகமான மக்கள் கேன்சரால் உயிரிழந்தது தூத்துக்குடி மாவட்டத்தில்தான். கடந்த வருடம் மட்டும் 365 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அப்படியென்றால் இந்த ஆலையால் ஒரு நாளைக்கு ஒருவர் தவறுகிறார். இந்தப்  புற்றுநோய் வருவதற்கு காரணம் இந்த ஸ்டெர்லைட் ஆலைதான்.

போராட்டத்தின் நோக்கம், ஸ்டெர்லைட்டின் விரிவாக்கத்தை தடுப்பதா அல்லது முழுமையாக ஸ்டெர்லைட்டை நிறுத்துவதா?

இந்த ஆலை தற்போது இருப்பதைவிட 5 மடங்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை முதலில் தடுக்கத்தான் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களுடன் இணைந்து திமுக போராட்டம் நடத்துமா?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களின் தன்னெழுச்சியான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு திமுக தார்மீக ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் மண்ணுக்கும், மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் உயிரைக் காவு வாங்கி, மண்ணை பாழ்படுத்தும் கேடான செயல்பாடுகளை அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் செயல் தலைவரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுப்போம்.