குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தேவையில்லை, கட்டணம் வசூலிக்கவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகிறது எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ''ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கக் கூடாது என்று அறிவித்து சில மணி நேரத்தில் கற்பிக்கப்படலாம் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மாற்றி கூறியுள்ளார். தனியார் பள்ளி மாணவர்கள் அறிவில் மட்டும் கவனமா? அல்லது கட்டணம் வசூலிப்பதற்கு ஒத்துழைப்பா? அப்படியென்றால் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவர்கள் நிலை என்ன? கட்டணம் வசூலிக்க ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்கள்.
இதனால் ஆன்லைன் வகுப்பைக் காரணம் காட்டி மாணவ மாணவிகள் அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதனால் தேவையற்ற வயதுக்கு மீறிய பல விஷயங்கள் விஷமாகப் பிஞ்சு மனதில் பதிய தொடங்கிவிட்டன. இதனால் ஏற்படபோகும் சீரழிவைத் தடுக்க வேண்டும்.
திருச்சி மணப்பாறை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசயத்தைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அதுபோன்ற விசயங்கள் இனி நடக்கக் கூடாது என்பதற்குத்தான் சொல்கிறேன். குழந்தைகள் படிப்பை மறந்துவிடுவார்கள் என்றால், ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. அந்தப் பாடங்களை பள்ளி திறக்கும் வரை திரும்பப் படிக்குமாறு வலியுறுத்தலாம்.
பொதுத்தேர்வைச் சந்திக்கக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தலாம். அதில் தவறில்லை. அதனை நான் முழுமையாக வரவேற்கிறேன். வசதி வாய்ப்பு குறைந்த குடும்பங்களில் உள்ள மாணவ மாணவிகள் ஸ்மார்ட் போன்களுக்கு என்ன செய்வார்கள்? என்பதையெல்லாம் அரசு யோசித்ததாகத் தெரியவில்லை. குறைந்தப்பட்சம் 8ஆம் வகுப்பு வரையாவது ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம் என்பது எங்களது வேண்டுகோள். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளோம். அவரை நேரில் சந்தித்தும் எங்களது கோரிக்கைகளை வைக்க உள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.