கூட்டணி அமைத்து முடித்த வேகத்தில் தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டுகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்கான நேர்காணல் 9 மற்றும் 10-ந்தேதி அறிவாலயத்தில் நடக்கிறது. வேட்பாளர் தேர்தலில் ஃபைட் பலமாக உள்ளது.
தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் எவை, கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதும் அடையாளப்படுத்தப்படுகின்றன.
அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ரிலீஸ் ஆகட்டும் என தி.மு.க. காத்திருக்கிறது. அதேசமயம், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளின் தலைமைகளுக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களுடன் பரஸ்பரம் நட்பு இருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைத் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், நேர்காணலுக்கு முன்போ அல்லது பின்போ தொகுதிகளின் பட்டியல்களை வெளியிட தயாராகியிருக்கிறது தி.மு.க.
வேட்பாளர்களின் தேர்வில் ஸ்டாலினின் முடிவே இறுதியானது என்கிற நிலையில், ஸ்டாலினின் பின்புலத்திலிருந்து அனைத்து வகையிலும் உதவி வருகிறார் அவரது மருமகன் சபரீசன். வேட்பாளர்களின் தேர்வு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதுவரை சபரீசனின் கவனம் உள்ளது.
இதுகுறித்து தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்தபோது, நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவதற்காக முழுவீச்சில் திட்டமிட்டு வருகிறார் சபரீசன். இதற்காக அவரது நிர்வாகத்தில் உள்ள ஓ.எம்.ஜி. நிறுவனத்தின் மூலம் வேட்பாளர் தேர்வு, தேர்தல் செலவு என இரண்டு கோணங்களில் காய்களை நகர்த்தி வருகிறார் சபரீசன்.
வேட்பாளர்களை 3 கோணங்களில் ஆராய்ந்து தேர்வு செய்யவிருக்கிறார்கள். முதல் கோணம், தொகுதியின் அரசியல் தட்பவெப்பம், வேட்பாளரின் செல்வாக்கு, கட்சியில் அவரது உழைப்பு, சாதி செல்வாக்கு, பண பலம் உள்ளிட்ட பயோடேட்டாக்கள். இரண்டாவது கோணம், வெற்றிக்குப் பிறகு அவர் எந்தளவு விசுவாசமாக இருப்பார் என்பது பற்றியது. மூன்றாவது கோணம், டெல்லியில் தனித்த செல்வாக்கை அவர் உருவாக்கிக் கொள்வாரா? வருமான நிலவரம் எப்படிப்பட்டது? அவையெல்லாம் கட்சிக்குப் பயன்படுமா, தன்னை மட்டும் வளர்த்துக்கொள்வாரா என்கிற ஆய்வு. இந்த 3 கோணங்களில் ஆராய்ந்தே வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளது சபரீசன் டீம்'' என்கின்றனர்.
தேர்தலில் ஆளுந்தரப்பு -எதிர்த்தரப்பில் பண விளையாட்டுகள் ஜரூராக இருக்கப்போகும் நிலையில், தி.மு.க.வின் பொருளாதாரம் எப்படி? என மத்திய-மாநில உளவுத்துறைகள் தி.மு.க.வை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
அவர்களிடம் நாம் பேசியபோது, தேர்தலை எதிர்கொள்ள 2000 சி' திரட்ட முடிவு செய்திருக்கிறது தி.மு.க. இதையும் ஓ.எம்.ஜி. குரூப்பிடம்தான் ஒப்படைத்துள்ளனர். தி.மு.க. கூட்டணிதான் ஜெயிக்கும் என்கிற நம்பிக்கையை பிரபல தொழிலதிபர்களிடம் உருவாக்குவதன் மூலம் '2000 சி' என்ற இலக்கை அடைய நினைக்கின்றனர். தி.மு.க. தலைமையிலிருந்து '500 சி' தேர்தல் நிதி ஒதுக்கப்படவிருக்கிறது. அந்தவகையில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு "2 சி" என ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு "12 சி'யை கட்சித் தலைமை கொடுக்கவுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்கள் "60 சி' வரை செலவிட வேண்டும் என்பது தி.மு.க.வின் திட்டம். அதேசமயம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு தனி பட்ஜெட். இதை நோக்கித்தான் துல்லியமாக தேர்தல் செலவுகளை திட்டமிட்டுள்ளனர்'' என தங்களுக்கு கிடைத்த புள்ளிவிவரங்களைத் தெரிவித்தனர்.
தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்தபோதும் இதனை ஒத்தே தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் "இந்த முறை ஓரிரு சீனியர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது; இளைஞர்களுக்கும் புது முகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் வலியுறுத்தியபடி இருக்கிறது சபரீசன் டீம். அதேபோல, சீனியர்களின் வாரிசுகள், குடும்பத்தினர் என யாருக்கும் சீட் தரக்கூடாது எனவும் யோசனை தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஒருவரது வாரிசுக்கு வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்களுக்கு இல்லாதபோது கட்சியில் அதிருப்தி உருவாகும். என்பதே ஓ.எம்.ஜி.யின் வியூகம். தற்போது துரைமுருகன், பொன்முடி, பொங்கலூர் பழனிசாமி, சு.ப.தங்கவேலன் என பெருந்தலைகள் பலரும் தங்களது வாரிசுகளுக்கு சீட் கேட்கின்றனர். இதில் யாருக்கு கொடுத்தாலும் கிடைக்காதவர்கள் அதிருப்தியடைவார்கள். அப்படி ஒரு சூழல் உருவாக வேண்டாம் என ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். இதனையறிந்துள்ள பலர், ஓ.எம்.ஜி. குரூப்பை ரகசியமாக சந்தித்து வாய்ப்புக் கேட்டு வருகின்றனர்.
தி.மு.க. வெற்றிபெற்றே ஆகவேண்டிய தேர்தல் களம். ஸ்டாலினின் தலைமேல் ஏற்றப்பட்டுள்ள அந்தச் சுமையை சுகமாக்கும் வியூகங்கள் கவனமாக வகுக்கப்படுகின்றன.