Skip to main content

இனிமேல் காதல் தொந்தரவு செய்யமாட்டேன்... பாஜக பிரமுகர் சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

முஸ்லிம் பயங்கரவாதிகளால் திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை என்ற வாட்ஸ்அப் தகவல் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் தொடங்கி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கலவர அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. அதற்குக் காரணம், ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்களும் இந்துத்வா அமைப்பினரும் இதனை வைரலாகப் பரப்பியது தான்.
 

bjp



திருச்சி பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜயரகு என்பவர் கடந்த 27-ந் தேதி கொலை செய்யப்பட்டதுதான் இந்த பதற்றத்திற்குக் காரணம். ஒரு காலத்தில், திருச்சி காந்தி மார்க்கெட் ஏரியாவில் கொலை அடாவடி என பெயர்பெற்றிருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்த விஜயரகு, பின்னர் போலீஸ் சோர்ஸாக மாறினார். பா.ஜ.க. பக்கம் சாய்ந்தார்.

விஜயரகுவின் மகளையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றி வந்திருக்கிறார் மிட்டாய் பாபு எனப்படும் மொய்தீன்பாபு என்ற இளைஞர். திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் திருட்டு, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர் இந்த மிட்டாய் பாபு. மாற்று மதம், குற்றப் பின்னணி இவற்றால் டென்ஷனான விஜயரகு, மிட்டாய் பாபு மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் செய்ய, "இனிமேல் காதல் தொந்தரவு செய்யமாட்டேன்' என எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர் போலீசார். அதன்பிறகும் காதல் முயற்சிகளை பாபு தொடர்ந்துள்ளார். சிக்கல்களும் அதிகரித்தன.

 

incident



கடந்த ஆண்டு ஜனவரியில் மிட்டாய் பாபு, விஜய ரகுவின் மைத்துனன் கிருஷ்ணகுமாரின் தலையில் அரிவாளால் வெட்டியதில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. ஜாமீனில் வெளி வந்த மிட்டாய் பாபு கடந்த மே மாதம் எட்டாம் தேதி இரவு ஓரக்கண்ணுமலை அரிசி குடோன் அருகில் நின்ற விஜயரகுவை கத்தியால் குத்தி யுள்ளார். அதில் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது விஜயரகு அப்போதே காந்தி மார்க்கெட் போலீசாரிடம் "சார் நான் செத்துப் போனா காந்தி மார்க்கெட் போலீஸ்காரர்கள் நீங்க எல்லாம் சேர்ந்து இறுதிக்காரியம் செஞ்சிடுங்க சார்' என்று வேதனையோடு சொல்லியிருக்கிறார்.

 

incident



விஜயரகுவை கத்தியால் குத்திய வழக்கில் உள்ளே சென்று ஜாமீனில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக வெளியே வந்துள்ளார் மிட்டாய் பாபு. மிட்டாய் பாபு வெளியே வந்த தகவலை உளவுத்துறை அதிகாரிகள் காந்தி மார்க்கெட் போலீசுக்கு பாஸ் செய்துள்ளனர். விஜயரகுவும் தன் மகளிடம் பாபு குறித்து எச்சரித்துள்ளார்.

அதிகாலை 6:30 மணி அளவில் விஜயரகு காந்தி மார்க்கெட்டின் 6-வது நுழைவுகேட் அருகே வாகன நுழைவுக் கட்டண வசூலில் ஈடுபட்டுக்கொண்டு குனிந்து செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மிட்டாய்பாபு, அவருடைய கூட்டாளிகள் 3 பேர் திடீரென விஜயரகுவை தலையின் பின்னால் அரிவாளால் வெட்டினர். தப்பி ஓட முயன்றவரை நால்வரும் சுற்றி வளைத்து தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கொலையாளிகள் தப்பி விட, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயரகுவை அங்கிருந்தவர்கள் ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விஜயரகு.


பா.ஜ.க. பிரமுகரான விஜயரகு குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தவர். அதற்கு எதிரான பிரச்சாரத்தினர், மார்க்கெட் கடைகளை அடைக்க வலியுறுத்தியபோது அதனை எதிர்த்தவர். அதனால், அரசியல்ரீதியான படுகொலை இது என அரசு மருத்துவமனையில் திரண்டு இருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சுப்பிர மணியன், இல.கண்ணன், பார்த்திபன், கவுதம், ராஜசேகர் மற்றும் பலர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன்பு மெயின்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட் டனர். கண்டன போஸ்டர் அடிக்க முயற்சித்தபோது, போலீஸ் உத்தரவால் அச்ச கங்கள் மறுக்க, போலீசுக்கு எதிராகவும் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்த அவர்களுக்கும் போலீசுக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

10 நாட்கள் விடுப்பில் சென்றிருந்த காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அதனை ரத்து செய்துவிட்டு, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தார். ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் பா.ஜ.க.வினருடன் பேசி அவர்களை சமாதானம் செய்தார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் காந்திமார்க்கெட்டில் விஜயரகு கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சென்றபோது, பா.ஜ.க.வினரும் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். "கொலையாளிகளை கைது செய்' என கோஷங்களை எழுப்பியதால் அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், போலீஸ் துணை கமிஷனர் நிஷா ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். விஜயரகுவின் தம்பி செந்தில்குமார் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், மிட்டாய் பாபு தன் அண்ணனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு நிலைப்பாட்டினால் தனது அண்ணனை சிலர் மிரட்டியதாகவும், ஆகவே அதன் பின்னணியில் மிட்டாய்பாபு திட்டமிட்டு கொலை செய்திருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். சப்- இன்ஸ்பெக்டர் தங்கமணி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

விஜயரகு கொலை தொடர்பாக 9 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் கமிஷனரின் தனிப்பிரிவு போலீசார் மிட்டாய்பாபு, அவர் கூட்டாளிகள் ஹரி பிரசாத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைசெய்யப்பட்ட விஜயரகு இந்து பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் என்பதால், தேசிய பட்டியல் இன கமிஷன் துணைத் தலைவர் முருகனும் விசாரணை நடத்தினார்.

அதன் பின் ஊடகங்களிடம், "விஜயரகு குடும்பத்தினர் இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காந்தி மார்க்கெட் பகுதியில் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் அறிவித்த போது, விஜயரகு "நடத்தக்கூடாது' என்று போஸ்டர்கள் ஒட்டியதுடன் வியாபாரிகளிடம் பேசி கடைகளைத் திறந்து வைத்துள்ளார். இது ஒரு தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவரது 17 வயது மகளை, மொய்தீன் பாபு கடந்த இரண்டு வருடங்களாக காதலிப்பதாகச் சொல்லி தொல்லை கொடுத்துள்ளார். திருமணம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடப்பது போன்ற லவ் ஜிகாத் முறையில் அந்தப் பெண்ணை மூளைச்சலவை செய்துள்ளதாக விஜயரகு குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே விஜயரகு குடும்பத்தில் ஒருவரை பாபு வெட்டியுள்ள நிலையில், அந்த வழக்கில் சாட்சியாக இருந்த ரகுவையும் தற்போது படுகொலை செய்துள்ளனர்'' என்றார்.

விஜயரகு குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த ஹெச்.ராஜா, "கோவையில் சசிகுமார் கொலை செய்யப்பட்டபோது முதலில் போலீசார் இப்படித்தான் தனிப்பட்ட விரோதம் என்றார்கள். பின்னர் என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில்தான் உண்மை வெளிவந்துள்ளது. இந்த கொலைக்கான உண்மையான காரணத்தின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்'' என்றார்.

மத்திய மண்டல காவல்துறை தலைவரும், மாநகர காவல் துறை பொறுப்பு ஆணையருமான அமல்ராஜ், "பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை மதரீதியிலான கொலை அல்ல. கொலைக் குற்றவாளிகள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. 2-க்கும் மேற்பட்ட மதத்தினராக ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.

மிட்டாய் பாபுவின் உறவினர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் இந்தக் கொலை வழக்கை லவ் ஜிகாத் பயங்கரவாதம் என்று பி.ஜே.பி.யினரும் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சென்னையில் பதுங்கியிருந்த மிட்டாய் பாபுவும் அவனுடைய கூட்டாளியும் கடந்த 29-ந் தேதி கைது செய்யப்பட்ட நிலையில்... கொலையின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா, லவ் ஜிகாத் திட்டம் உள்ளதா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி பகுதியில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடைபெற்றது போலீசுக்கு பெரிய தலைவலியையும் பொதுமக்களுக்கு கூடுதல் பதட்டத்தையும் உண்டாக்கியுள்ளது.

-ஜெ.தாவீதுராஜ்