Skip to main content

நக்கீரன் படங்களை காட்டி கலங்கிய பென்னிக்ஸ் சகோதரி... "நான் இருக்கிறேன்'' என நம்பிக்கை அளித்த ராகுல்...

Published on 08/03/2021 | Edited on 11/03/2021

 

rahul

 

பிப்ரவரி மாதக் கடைசியில் தென்தமிழகத்தில் ராகுல்காந்தி மக்களைச் சந்திப்பதாக தகவல் வர, நெல்லை மாவட்ட செவல்பண்ணையார் தொடங்கி ஆளாளுக்குத் தங்கள் விருந்து தரும் விருப்பங்களை ராகுலிடம் மின்னஞ்சலில் தெரிவித்த வண்ணமிருக்க, "உங்கள் வருகையின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்களை சந்திக்கலாமே..?'' என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா மின்னஞ்சலை அனுப்பிவைக்க, ராகுலின் வருகையில் அவசர அவசரமாக சாத்தான்குளம் பகுதி சேர்க்கப்பட்டது.

 

ராசியான கல்லூரி

 

இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமையன்று தூத்துக்குடி வாகைக்குள விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல்காந்தி, தென்மாவட்டங்களிலுள்ள வழக்கறிஞர்களைச் சந்திக்க தூத்துக்குடி வஉசி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், "நிலைநாட்டுவோம்! தேசத்தைக் காப்பாற்றுவோம்'' என்ற பெயரில் வழக்கறிஞர்களுடன் சிறப்பு கலந்துரையாடலை நிகழ்த்தினார்.

 

"நாட்டின் முக்கியமான அமைப்புகள்மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி அமைப்பைச் சீர்குலைத்து அழித்துவருகின்றனர். இதுகுறித்து பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எம்.எல்.ஏ.க்களை கட்சிதாவச் சொல்லி மிரட்டல் நடக்கிறது. எம்.எல்.ஏ. கட்சி தாவ மறுத்தால் மிகமோசமான நெருக்கடி கொடுக்கப்படுகிறது'' எனவும் சீனாவின் இந்திய ஆக்ரமிப்பையும் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார்.

 

நேரு குடும்பத்திற்கு ராசியான கல்லூரியாக வ.உ.சி. கல்லூரி கருதப்பட்டதால் முதல் நிகழ்ச்சியை அங்கேயே ஆரம்பித்தனர்.

 

அடுத்ததாக குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலையணித்துவிட்டு, கோவாங்காடு பகுதியிலுள்ள உப்பளத் தொழிலாளர்களை சந்திக்கச் சென்றார் ராகுல். அங்குள்ள பெண்களோ குலவையிட்டு ராகுலை வரவேற்க, "எனக்கு உங்களைப்போல் குலவையிடத் தெரியாது. இப்பொழுது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனாவிற்கு தடுப்பு மருந்தாக கண்டுப்பிடிக்கப்பட்ட கோவாக்சின் மருந்தில் உப்பு உள்ளது. எனவே கரோனா மருந்தை உட்கொள்ளும் போதாவது அத்தனை பேரும் இந்த உப்பளத் தொழிலாளர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்'' என்றார். பிரதமர் ஆனபிறகு மதுவை ஒழிக்க முதல் கையெழுத்து இட வேண்டும் என உப்பளத் தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தனர்.

 

பெர்சிக்கு நம்பிக்கையளித்த ராகுல்!

 

கோவாங்காட்டிலிருந்து புறப்பட்ட ராகுலின் வாகனம் ஆத்தூர், குரும்பூர் ஆகிய ஊர்களைக் கடந்து சாத்தான்குளம் நோக்கிச் செல்கையில், நாசரேத்திலுள்ள 92 வருட பழமையான புனித யோவான் பேராலாயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அங்கிருந்து புறப்பட்ட ராகுலின் வாகனம் அதற்கடுத்ததாக வள்ளியம்மாள்புரத்திலுள்ள டீக்கடையில் நிற்க, பாதுகாப்பு பிரிவினர் பதைபதைத்து செய்வதறியாது திகைத்துநின்ற அவ்வேளையில், அந்த சாலையோரக் கடையில் டீ குடித்து மகிழ்ந்தார்.

 

rahul

 

அங்கிருந்து புறப்பட்ட ராகுலின் வாகனம் சாத்தான்குளத்திலுள்ள காமராஜர் சிலை முன்பு நிறுத்தப்பட்ட நிலையில், பிரச்சார வாகனத்தின் மேலிருந்தே உரையாற்றத் தொடங்கினார். "தமிழக முதல்வர் மக்களுக்காகச் செயல்படுவதில்லை. அவர் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறார். அவர் ஊழல் செய்யத் தொடங்கியதிலிருந்து மோடியிடம் மண்டியிட்டுள்ளார். ஒரே மொழி, ஒரே பாரம்பரியம் என்பதை மோடி வலியுறுத்துகிறார். தமிழக பாரம்பரியம் இந்திய பாரம்பரியம் இல்லையா..? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குங்கள் அல்லது நாற்காலிகளைக் காலிசெய்யுங்கள். ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரைப் பற்றி மோடிக்கோ தமிழக முதல்வருக்கோ அக்கறை இல்லை'' என பொரிந்து தள்ளினார்.

 

சாத்தான்குள காவல் நிலைய போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலையுண்ட ஜெயராஜின் மகள் பெர்சியை சந்திக்க வாகனத்திலிருந்து கீழே இறங்கினார். வாகனத்தைவிட்டு வந்த ராகுலிடம், ஜெயராஜும், பென்னிக்ஸும் உடலெங்கும் காயத்துடன் இருக்கும் போஸ்ட்மார்ட்டம் படங்களைத் தாங்கிய 'நக்கீரன் இதழ்' பெர்சி கையால் கொடுக்கப்பட, பெர்சியின் தோளில் கைவைத்து, "வழக்கின் நிலை என்ன..?'' எனக் கேட்டறிந்து, "நான் இருக்கிறேன்'' என நம்பிக்கையளித்தார்.

 

மோடியைப் பார்த்தால் வேடிக்கையா இருக்கு!

 

முதல் நாள் வருகையின் நிறைவாக, "வாங்க, ஒரு கை பார்ப்போம்!'’ என்ற பெயரில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மைக் பிடித்த ராகுல், "தமிழகத்திற்கு வருகை தருவதென்றாலே எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்தியா எப்படி வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்பதை தமிழகம்தான் சுட்டிக்காட்டப் போகிறது. இந்தியாவிற்குத் தமிழகமும் தமிழர்களும்தான் வழிகாட்டுவார்கள்.

 

பிரதமர் குறித்து பேச எனக்குப் பயமில்லை. அவரைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக உள்ளது. நான் நேர்மையானவன். மக்கள் மத்தியில் மோடியின் செயல்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. மாறாக, என்னைப் பற்றியே 24 மணி நேரமும் நினைத்துக்கொண்டிருக்கிறார் மோடி. தமிழக முதல்வரும் இரவு நேரத்தில் நிம்மதியாகத் தூங்கமுடியாது. ஏனென்றால் அவர் நேர்மையற்றவர். அதனால் மோடியை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை'' என முடித்துக்கொண்டார்.

 

நெல்லையப்பர் கோவில் சாமி தரிசனம் உட்பட ராகுலின் தென்தமிழகப் பயணம் காங்கிரசாரை உற்சாகப்படுத்தியுள்ளது.