‘இந்தி’ மட்டும்தான் இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய் திரும்பத் திரும்ப மக்களின் மனதில் திணிக்கப்படுகிறது. இந்தி என்பது மத்திய அரசின் ஆட்சிமொழி (Official Language)தானே தவிர, தேசிய மொழி (National Language) என்ற தகுதி அதற்கு மட்டுமே உரியதல்ல. (அதிலும்கூட, ஆங்கிலம் மத்திய அரசின் இணை ஆட்சிமொழியாக உள்ளது)
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள்தான். அதிலும் குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் இதில் முதன்மை பெறுகின்றன. இன்னும் பல மொழிகளும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமைப் பெற்று வருகிறது.
ஆதிக்க இந்தித் திணிப்புக்கு எதிரான குரல் அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஒலித்தது. சிறைவாசம்-உயிர்த்தியாகம் எனத் துணிந்து நின்று ஆதிக்கத்தை தகர்த்து, தாய்மொழியைக் காத்தது. தற்போது அந்த உணர்வு, கர்நாடகம், வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஒலிக்கிறது. இந்தக் குரலை இந்திய ஒன்றியத்தை ஆளும் மத்திய ஆட்சியாளர்களால் புறக்கணிக்க முடியாது என்பதற்கு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை சாட்சியமாகி உள்ளது.
சமஸ்கிருதத்தையும் இந்தியையும் மட்டுமே உயர்த்திப் பிடித்து, சந்து கிடைத்தால் திணித்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. இந்நிலையில், ஜூலை 18ந் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஒரு மணி நேரத்துக்கு முன்பே அனுமதி பெற்று பேசுவதற்கும், அவை தங்கு தடையின்றி மொழிபெயர்க்கப்படுவதற்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ், வங்காளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், அசாமி, குஜராத்தி, இந்தி, உருது, பஞ்சாபி, ஒரியா ஆகிய 12 மொழிகளுக்குத்தான் இந்த மொழிபெயர்ப்பு வசதி இருந்தது. இப்போது டோங்ரி, காஷ்மீரி, கொங்கணி, சந்தலி, சிந்தி, போடா, நேபாளி, மைதிலி, மணிப்புரி உள்ளிட்ட மேலும் 10 மொழிகளுக்கும் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் முழுமையாக மொழிபெயர்க்கப்படும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.
பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றிய அரசாங்கத்திடம் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கைகளில் ஒன்று நிறைவேறியுள்ளது. பா.ஜ.க.வைச் சேர்ந்தவராக இருந்தபோதும், குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இதில் அக்கறை செலுத்தியிருப்பதை அனைத்து மொழி உறுப்பினர்களும் பாராட்டுகிறார்கள். இந்தத் தொடக்கம் இன்னும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியுள்ளது.
மாநிலங்களவை போலவே மத்திய அரசின் அனைத்து நிலைகளிலும் இந்த மொழிபெயர்ப்பு வாய்ப்பு உருவாக்கப்படவேண்டும். அத்துடன், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தி மொழி போலவே இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், மொழிவழிப்பட்ட தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவில் சமத்துவத்திற்கான பாதை உருவாகும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளும் தகவல் தொழில்நுட்பமும் மிகுந்துள்ள உலகத்தில் இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, விரைந்து நிறைவேற்றுவது கடினமானதல்ல. இதன் வாயிலாக, அனைத்து மொழிக்காரர்களுக்கும் அங்கீகாரம் கிடைப்பதுடன், வேலைவாய்ப்புகளுக்கும் வழி வகுக்கும். எட்டாவது அட்டவணையில் இணைக்கப்படாமல் காத்திருப்பில் உள்ள பிற மொழிகளையும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மொழி உரிமை காக்கப்படும்போதுதான் மாநில சுயாட்சிக்கான செயல்பாடுகள் வலிமை பெறும். அதன் வழியாக, மத்தியில் .கூட்டாட்சி என்கிற இலக்கு நோக்கி நகர முடியும்.