நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட கருவேப்பம்பட்டி ஊராட்சி, கால் நூற்றாண்டாக அ.தி.மு.க. கோட்டையாக இருந்தது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அந்தக் கோட்டையை தி.மு.க. வசமாக்கி இருக்கிறார் திருநங்கை ரியா. மாநிலக்கட்சிகள் அளவில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற வரலாற்றுப் பெருமையையும் பெற்றிருக்கிறார் அவர்.
தேர்தல் களேபரங்கள் எல்லாம் முடிந்து, சற்றே பரபரப்பு தணிந்திருக்கும் ஓர் அந்திப்பொழுதில் ரியாவை அவருடைய வீட்டில் சந்தித்தோம். வீட்டின் முகப்பில், அரசு மானியத்தில் கட்டப்பட்ட கழிப்பறை இருக்கிறது. அதற்கு கதவுகூட போட இயலாத நிலையில், தகரத்தை வைத்து மறைத்திருக்கிறார்கள் என்பதில் இருந்தே ரியா குடும்பத்தின் பொருளாதார வலிமையை தெரிந்து கொள்ளலாம். அப்பா அன்பரசன். அம்மா சின்ன பாப்பா. தம்பி சிலம்பரசன்.
தி.மு.க.வின்பால் ஈர்க்கப்பட்டது, ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றதைப் பற்றியெல்லாம் விரிவாக பேசினார் ரியா. "மூன்றாம் பாலினத்தவர் என்றாலே கேலியாக பேசும் சமூகத்தில், எங்களைப் போன்றவர்களை திருநங்கை, திருநம்பி என்ற அழகான தமிழில் பெயரிட்டு அழைத்தார் தி.மு.க. தலைவர் கலைஞர். அந்த நிமிடமே தி.மு.க. மீதும் கலைஞர் மீதும் பற்று வந்துடுச்சு.
எங்களுடைய கருவேப்பம்பட்டி பஞ்சாயத்தில், சில ஊழல் முறைகேடுகள் நடந்தது பற்றி பஞ்சாயத்துத் தலைவர்கிட்ட தைரியமாக கேள்வி கேட்பேன். எங்க அப்பாவும் எனக்கு தூண்டுதலாக இருந்தார். அப்படித்தான் எனக்குள் அரசியல் ஆசை வந்தது. திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தி.மு.க.ல சேர்ந்தேன்.
கனிமொழி அக்கா எம்.பி. தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டப்ப, அவருக்காக பிரச்சாரம் செய்ததுதான் என்னுடைய முதல் அரசியல் மேடை. இந்த நிலையில்தான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகளும் தேர்தல் அரசியலில் பங்கெடுத்துக்கணும்னு ஒரு கூட்டத்துல பேசி, தீர்மானமும் கொண்டு வந்தாரு. அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தபோது, திருச்செங்கோடு 2-வது ஒன்றியத்தில் கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பிச்சேன். கட்சித்தலைமை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தது. அந்த நம்பிக்கையை, தேர்தலில் வெற்றிபெற்று காப்பாற்றி இருக்கேன்'' என வெற்றிக்களிப்பு குறையாமல் சொன்னார் ரியா.
"வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சம்பிரதாயமாகவே ஆகிவிட்ட சூழலில், தேர்தல் செலவுகளை எப்படிச் சமாளித்தீர்கள்?'' என்றோம். "சார், சொன்னா நம்ப மாட்டீங்க... ஓட்டுக்காக மக்களுக்கு நான் ஒத்த ரூபாய்கூட கொடுக்கல. காய்கறி வாங்கி குழம்பு வைக்கிற காச மிச்சம் பிடிச்சா தேர்தல் செலவுக்கு ஆகும்னு, பிரச்சாரம் நடந்த நாள்களில் வெறும் சோத்துல தண்ணீய ஊத்தி கரைச்சு குடிச்சிட்டு நான், அம்மா, அப்பாலாம் ஓட்டுக் கேட்க போயிருக்கோம். அதுக்காக, கூட ஓட்டுக்கேட்டு வந்தவங்க யாரோட வயித்தையும் காயப்போட்டுடல.
அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் மேல மக்களுக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததில்ல. அதனால நான் மக்களிடம் எந்த வாக்குறுதியும் கொடுக்கல. "திருநங்கையான எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. வெற்றிபெற்றால், இந்த ஊருக்கு என்னென்ன தேவையோ அதை செய்துதருகிறேன்'’என்று மட்டும் தான் சொல்லி ஓட்டு கேட்டேன். ஜெயிக்க வச்சுட்டாங்க.
நான் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோதே, "இதெல்லாம் தேர்தலில் நிற்க ரூல்ஸ்ல இடமில்லை. பஸ் ஸ்டாண்டுல கடை கடையா கை தட்டி காசு வாங்க ஓடிப் போய்டும்னுலாம்' ஆளுங்கட்சிக் காரங்க கேவலமா பிரச்சாரமே பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதே ஆளுங்கட்சியினர்தான், நான் ஜெயிச்சவுடனே மறை முகத் தேர்தலில் என்னுடைய ஆதரவுகேட்டு, 80 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசினாங்க. எதற்கும் அசைஞ்சு கொடுக்கல.
எங்க ஊர்ல பசங்க, பொண்ணுங்க படிச்ச படிப்புக்கு வேலைவாய்ப்பு இல்லாம கஷ்டப்படுறாங்க. அவர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதுதான் என்னுடைய முதல்வேலை. அதற்கான பணிகளையும் தொடங்கிட்டோம்'' என்று நம்பிக்கை மிளிர பேசுகிறார் ரியா.