
சென்னையில் அமித்ஷா வருகைக்கு பிறகான அரசியல் தட்பவெப்ப நிலை சூடு பிடித்துள்ளது. பாஜக கூட்டத்தில் பேசிய அவர் தமிழக அரசியலில் வாரிசு அரசியல் நிலவுவதாக திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் கட்சிகளை உடைக்கும் வேலையில் மறைமுகமாக ஈடுபட பாஜக தரப்புக்கு அவர் சிக்னல் காட்டியுள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியத்திடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
" கூட்டணி தொடர்பாக திமுக நன்றாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். பாஜக கூட்டணியை உருவாக்குவதை விட அதை முறியடிக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யும். அதனால் திமுக தனது கூட்டணியை வலிமையாக்கும் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இந்தக் கூட்டணியில் கமல் உள்ளிட்டவர்களையும் இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். கமலை இணைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இருக்கப்போவதில்லை. அவருக்கு நகரப் பகுதிகளில் சில இடங்களில் செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதையும் தாண்டி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் சில இடங்களில் நல்ல வாக்கு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஒரு சீட் கொடுக்கலாம். அதில் ஒன்றும் தப்பில்லை. திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அனைவரையும் அனுசரித்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்பதே நம்முடைய எண்ணம்.
ஏனென்றால் பாஜக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். வெற்றிபெற வேண்டும் என்பதைத் தாண்டி திமுக வெற்றிபெறக் கூடாது என்பதைக் கண்டிப்பாகப் பார்ப்பார்கள். திமுகவை வாரிசு அரசியல் என்று அமித்ஷா கூறினார் என்று கேட்கிறீர்கள். இதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. வாரிசு அரசியல் என்ற பதம் அவருக்குப் பொருந்துமா? 50 ஆண்டுக் காலமாக அரசியலில் இருப்பவர் ஸ்டாலின். அவரை வாரிசு அரசியல் என்று கூறினால் வாரிசு அரசியல் என்ற பதமே தவறாகப் போய்விடும். சாதாரண தொண்டனாக ஆரம்பித்து இந்த 50 வருடத்தில் எட்ட முடியாத உயரத்தை அடைந்துள்ளார். இதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா?
ஸ்டாலினை விமர்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் விமர்சனம் செய்யுங்கள். உங்களுக்கு எப்படியாவது அரசியல் செய்ய வேண்டும். அதற்காக வாரிசு அரசியல் என்று கூறி அவரின் அரசியல் அனுபவத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள். அது உங்களுக்கே தீங்காகப் போய்விடும். அடுத்த தலைவர் இவர்தான் என்பதைக் கலைஞர் இனங்காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். படிப்படியாக உயர்ந்த அவரை இப்படிச் சொல்வதை அரசியல் அறிந்த யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதயநிதி கட்சிக்காக உழைக்கிறார். அவருக்குக் கட்சி அங்கீகாரம் கொடுக்கிறது. இதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது. பாஜக மனிதப் புனிதர்கள் கட்சியா? அடுத்தவர்களை இவர்கள் குறை கூறுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர்கள் செய்யும் வாரிசு அரசியலைப் பேசினால் பெரிய லிஸ்ட் போட்டு அதை மட்டுமே நாம் பேச முடியும். ஆகையால் அவர்கள் பேசுவதைப் பேசட்டும். மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.