குஜராத் மாநிலம் என்றாலே காந்தி பிறந்த மண் என்றிருந்த பெயர் தற்போது போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொர்க்க புரி என்பதாக மாறிவிட்டது. குஜராத்தின் 1,600 கி.மீ. நீளமுள்ள மிக நீண்ட கடற்கரையே போதைப்பொருள் கடத்தலுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுகங்களின் மூலமாகத்தான் போதைப்பொருட்கள் பெருமளவு கடத்தப்படுகின்றன. தற்போது தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத்தில், இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள், மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரமாக எழுந்துள்ளன. எனவே இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பிரச்சாரத்தின்போது பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
கடந்த மாதம் காந்திநகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தற்போது பெருகியுள்ள போதைப்பொருள் கடத்தலைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல், வழக்கம்போல், காங்கிரஸ் காலத்திலிருந்தே போதைப்பொருள் கடத்தல் குஜராத்தில் மிகுந்திருந்ததாகப் புள்ளிவிவரங்களை எடுத்துவிட்டார். அவரது பேச்சில், "கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2013 வரை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 1,257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் மொத்தம் 1,363 பேர் கைது செய்யப்பட்டனர். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், 2014ஆம் ஆண்டு முதல் 2022 வரை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 3,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 4,888 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 3.53 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.
இவரது ஒப்பீட்டிலிருந்தே, கடந்த எட்டு ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் மிகப்பிரமாண்டமாக அதிகரித்திருக்கும் உண்மை வெளிப்படுகிறது. அதேபோல், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகக் குஜராத்தை பா.ஜ.க. தான் ஆண்டு வருகிறது. எனவே அமித்ஷா குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் அனைத்துமே பா.ஜ.க.வுக்கு எதிரானதாகவே திரும்புகிறது. குஜராத்தில், கடந்த 2021, செப்டம்பர் 16ஆம் தேதி, பெருந்தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. இந்திய வரலாற்றிலேயே ஒரே சம்பவத்தில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இந்த ஹெராயின், தாலிபான்கள் ஆட்சியிலிருக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து டால்கம் பவுடரில் மிக்ஸிங் செய்து திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பாக, ஆஷி டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களான எம்.சுதாகரன், அவரது மனைவி ஜி.துர்கா பூர்னா வைஷாலி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதேபோல், கடந்த 2022, மே மாதத்தில் அதே அதானியின் முந்த்ரா துறைமுகத்தில், ரூ.500 கோடி மதிப்புள்ள 56 கிலோ எடைகொண்ட கொக்கைன் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். அடுத்ததாக, கடந்த ஜூலை 12ஆம் தேதி, ரூ.350 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதே முந்த்ரா துறைமுகத்தில் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவினர் கைப்பற்றினார்கள். ஏற்கெனவே பெரிய அளவில் போதைப் பொருட்கள் பிடிபட்ட நிலையில், மீண்டும் மீண்டும் அதே துறைமுகத்தில் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குப் பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி, குஜராத்தின் ஹட்ச் மாவட்டத்திலுள்ள பழமையான துறைமுகமான கண்ட்லா துறைமுகத்தில், ரூ.1,439 கோடி சர்வதேச சந்தை மதிப்புள்ள 205.6 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. உத்தரகாண்டைச் சேர்ந்த ஓர் நிறுவனத்துக்காக 17 கண்டெய்னர்களில் மொத்தம் 10,318 பைகளில், ஜிப்சம் பவுடர் கொண்டுவரப்படுவதாகக் கூறப்பட்டது. அதனைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது, அதில் ஹெராயின் கடத்தப்பட்டது தெரியவந்தது.
2021, நவம்பர் மாதத்தில் குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் மூன்று நபர்களிடமிருந்து ரூ.313.25 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கடந்த ஜூன் மாதம், ஒடிசாவிலிருந்து டிரக்கில் கடத்தி வரப்பட்ட ரூ.1.45 கோடி மதிப்பிலான 724 கிலோ கஞ்சாவை குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர். கடந்த மாதத்தில், குஜராத் கடற்கரையோரமாக சந்தேகப்படும்படியாகக் காணப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்றில், ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ கிராம் ஹெராயினை இந்தியக் கடலோர காவல்படையினர் கைப்பற்றினர்.
குஜராத் துறைமுகங்கள் மற்றும் அதையொட்டிய அரபிக்கடல் பகுதியில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும்போது, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவைப் போதைப்பொருட்களின் சந்தையாக மாற்றிவரும் அதிர்ச்சிகரமான செய்தியை உணர முடிகிறது. இதற்காகவே குஜராத்திலுள்ள அதானியின் துறைமுகம் மட்டுமல்லாது, அம்மாநிலத்தின் மற்ற துறைமுகங்களிலும் பல்வேறு துறைமுகங்களைச் சேர்ந்த சமூக விரோதிகளையும் சர்வதேச போதைப்பொருள் விற்பனை ஆசாமிகள் பயன்படுத்தி வருவது தெரியவருகிறது.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால் இரட்டை எஞ்ஜின் பொருத்தப்பட்ட ரயில் வண்டி போல, மாநிலத்தின் வளர்ச்சி துரிதமாக இருக்குமென்று பிரச்சாரம் செய்வது வழக்கம். ஆனால் குஜராத்திலோ, இந்த இரட்டை எஞ்ஜின் மூலமாகப் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ராகுல்காந்தி, "குஜராத்தில் போதைப்பொருள் வியாபாரம் செய்வது எளிதானதாக உள்ளது" என்று குற்றம் சாட்டினார். ஆம் ஆத்மி கட்சித்தலைவர் கெஜ்ரிவாலும் குஜராத்தின் போதைப்பொருள் கடத்தலைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் நினைவாக மது விலக்கு அமலில் உள்ளது. அப்படியும் போலி மதுபான விற்பனைக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதைவிட மோசமாகப் போதைப்பொருட்களின் சொர்க்க புரியாக பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மாறியிருப்பது கவலைக்குரியதாகும்.
- தெ.சு.கவுதமன்