Skip to main content

ரஜினி எதிர்பார்த்த புரட்சி... சர்வே முடிவில் வெளிவந்த தகவல்... எதிர்பார்க்காத ஆதரவால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரஜினி! 

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி எந்த ஒரு குறிப்பையும் வைத்துக் கொண்டு பேசவில்லை. அவர் மனதில் இருந்ததை அப்படியே வெளிப்படையாக பேசினார்.

"கட்சி வேறு ஆட்சி வேறு என நான் சொன்னதை பலர் எதிர்க்கிறார்கள். இளைஞர்கள் சிலர்தான் அதை ஆதரிக்கிறார்கள்' என ரஜினி சொன்னது ஒரு இளைஞர் படையை பற்றியது. அந்த இளைஞர் படை தமிழகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்பதுதான் முதல் கேள்வி. அதற்குப் பதில் அளித்தவர்களில் பெண்கள் அதிகம் இடம் பெற்றிருந்தார்கள்.

 

rajini



இளைஞர்களும் உற்சாகமாக ஆதரித்தார்கள். இது ரஜினியை மிகவும் உற்சாகப்படுத்தியது. "ரஜினி முதல்வராகாமல் ரஜினி கைகாட்டுபவர் முதல்வரானால் ஏற்பீர்களா' என்கிற கேள்வி பொது மக்களுக்கு புரியவில்லை. யார் முதல்வர் ஆனால் என்ன சார்... எங்களுக்கு 100 நாள் திட்டத்தில் காசு வரணும் போன்ற தங்களது பிரச்சினைகளை மக்கள் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு சர்வே எடுத்த இளைஞர்கள் விளக்கமாக "ரஜினி முதல்வராக மாட்டார் அவரது கட்சி ஜெயித்தால் ஒரு நல்லவரை முதல்வராக்குவார். அவர் தவறு செய்தால் ரஜினி மாற்றிவிடுவார். ரஜினி கட்சி நிர்வாகிகள் ஆட்சியில் தலையிட மாட்டார்கள். அதுதான் கட்சி வேறு ஆட்சி வேறு என்கிற சித்தாந்தம்' என சொன்னார்கள். கட்சி வேறு ஆட்சி வேறு என்பது தமிழகத்திற்கு சரிப்படாது என 15 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ரஜினி சொல்வது சரி என 85 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் உண்மையை அறிய தமிழகத்தின் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமுள்ள திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்ட சாம்பிள்களை ரஜினியே நேரில் கொண்டு வரவைத்து பார்த்து, அதை எடுத்தவர்களுக்கு வாட்ஸ் அப்பில் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

 

rajini



இளைஞர்களுக்கு 60% வாய்ப்பு மற்ற கட்சியிலிருந்து வந்தவர்கள், திறமையான சமூக சேவகர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் போன்றவர்களுக்கு 40 சதவிகித வாய்ப்பு. கட்சி பதவியில் இருக்கும் 50,000 பேருக்கும் வாய்ப்பு தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் பணியாற்றும் அவர்களுக்கு ஆட்சியில் மரியாதை கிடையாது என்பதெல்லாம் மா.செ.க்கள் கூட்டத்தில் ரஜினி பேசிய பேச்சுகளின் ரிப்பீட்டுதான் என்கிறார்கள் மா.செ.க்கள்.


"அண்ணா, கலைஞர், ஜெ. ஆகி யோருக்கு மரியாதை, விவேகானந்தர், காந்தியடிகள் ஆகியோரை குறிப்பிட்டது எல்லாம் ஒவ்வொரு காரணத்துக்காகத்தான்' என்கிறார்கள். "சோ என்னை பாசிஸ்டு என கூப்பிடுவார். எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்பதால்தான் சோ என்னை அப்படி அழைப்பார்' என்கிற ரஜினி, ஸ்டாலினுக்கு கலைஞரின் வாரிசு என நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தையும், எடப்பாடி ஏகப்பட்ட செல்வத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளதையும் குறிப்பிட்ட ரஜினி "இதை மாற்ற 2021 தேர்தல்தான் ஒரே சந்தர்ப்பம். எனக்கு மறுஜென்மம் கிடைத்துள்ளது'' என உடல்நிலை பிரச்சினைகளையும் குறிப்பிடத் தவறவில்லை.

 

 

rajini



இதில் பலவற்றையும் மா.செ.க்கள் கூட்டத்தில் ரஜினி பேசினார். சிலவற்றை தன்னை சந்திக்க வந்தவர்களிடம் பேசினார். அதை கோர்வையாக்கி ஒரு உரையாக்கி பேசியுள்ளார். இதை வெளிப் படையாக ரஜினி பேச முன் வந்ததற்குக் காரணம். ரஜினி கட்சி வேறு ஆட்சி வேறு என்கிற கொள்கையை கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால்தான். ரஜினியின் வெளிப்படையான அந்தப் பேச்சில், பெண்கள் 30 சதவிதத்தினருக்கு அறிவு கிடையாது.

தலைவர்கள் சொன்னால் தொண்டர்கள் கேட்கணும்.

எனக்கு உடல்நிலை சரியில்லை வயது 71 நான் மறு ஜென்மம் எடுத்துள்ளேன் எனச் சொன்னதெல்லாம் விமர்சனத்தை எதிர்கொள்கிறது.


இதற்கிடையே ரஜினியுடன் சேர ஒரு படை தயாராகியுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரியான சிவனாண்டியும் ஜாபர் சேட்டும் ரஜினியின் மனைவி மூலம் ரஜினியுடன் இணைந்திருக்கிறார்கள். ரஜினிக்காக அவரது பிரச்சாரங்களை சிவனாண்டி ஒருங்கிணைக்கிறார். அதற்காக பல லட்ச ரூபாய் செலவில் ஒரு பெரிய அலுவலகத்தையே திறந்திருக்கிறார்.

இதில் ரஜினி மா.செ. கூட்டத்தில் பேசி பத்திரிகையாளர்களிடம் பேசாதது கூட்டணி பற்றி மட்டுமே. பா.ம.க., கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ரஜினியிடம் பேசி வருகின்றன. ஆனால் ரஜினி எதிர் பார்ப்பது- காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சிக. ஆகிய கட்சிகளையும் அழகிரி தலைமையில் தி.மு.க.வை உடைப்பதையும்தான். இதுதான் ரஜினி எதிர்பார்க்கும் "புரட்சி' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.