Skip to main content

"லோக் ஆயுக்தாவில் மேலும் சில விஷயங்களை கொண்டு வருவோம்..." : வழக்கறிஞர் கே.பாலு பேட்டி 

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
balu


தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா மசோதா திருப்தியளிக்கிறதா? நீதிமன்றம் கெடு விதித்த 10ஆம் தேதிக்கு முந்தைய நாள் அவசர அவசரமாக இதை செய்திருக்கிறார்களே, இவ்வளவு தாமதம் ஏன்? இதன் செயல்பாடு வேகமாக இருக்குமா? இதில் என்னென்ன குறைகள்? அரசு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களும், பணியாளர் நியமனமும் இந்த லோக் ஆயுக்தாவின் கட்டுப்பாட்டில் வராது என்று குறிப்பிடப்பட்டுள்ளதே? வலிமை மிக்கதாக இது உருவாக என்னென்ன விஷயங்கள் சேர்க்க வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கு நக்கீரன் இணையதளத்திற்கு பதில் அளித்துள்ளார் பா.ம.க. செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு.

லோக் ஆயுக்தா கொண்டுவர வேண்டும் என்று பாமக உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் ஏன் லோக் ஆயுக்தா கொண்டுவரப்படவில்லை என்று கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கெடுவும் விதித்தது. லோக் ஆயுக்தாவை தமிழக அரசு தானாக கொண்டுவரவில்லை. நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிர்பந்தத்துடன்தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

 

 


அதிலும் இந்த லோக் ஆயுக்தாவை கொண்டு வந்தது, உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதற்காகவும், ஊழல் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான ஒரு நல்ல நோக்கத்திற்கான முயற்சியாக இது தெரியவில்லை. தமிழக முதலமைச்சரும் லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்புக்குள் வருவார் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. முதலமைச்சரும் ஓர் அமைச்சராகக் கருதப்படுவார் என்று 2(1)(ஐ)-பிரிவில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் மட்டுமே முதலமைச்சர் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் படி லோக் ஆயுக்தாவைக் கோர முடியும். இந்தக்  குழப்பத்தை முதலமைச்சர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய அமைப்பில் முதல் அமைச்சர், சட்டமன்ற தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என இவர்கள் மூன்று பேர் உள்ளனர். தமிழகத்தில் தகவல் உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இத்தகைய குழுவே தேர்ந்தெடுக்கிறது. இதற்கான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க முடியாத சூழலை உருவாக்கி, ஆளுங்கட்சிக்கு சாதகமானவர்களை தேர்வு செய்வதே வழக்கமாக உள்ளது. மூன்று பேரில் இரண்டு பேர் எடுக்கும் முடிவே இறுதியாக உள்ளது. அதே நிலைமைதான் லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியமனத்திலும் தொடரும். ஆளுங்கட்சியை ஆதரிப்பவர்களை நியமிப்பார்கள். இது மிக மிக தவறானது. 

ஆகவே லோக் ஆயுக்தா விசாரணை ஆணைய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய குழுவில் ஐந்து பேர் இருக்க வேண்டும். நடுநிலையான, நேர்மையான, அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி விசாரிக்கக்கூடிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் அதற்கு வழிவகுக்கவில்லை.

 

 


அரசு அலுவலங்களில் நடைபெறும் டெண்டர், உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்படக்கூடிய ஊழல்களை விசாரிப்பதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசு அலுவலகத்தில் நடைபெறும் ஊழல்கள், அரசு அதிகாரிகள் செய்யக்கூடிய ஊழல் புகார்களை லோக் அயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது. தமிழக அரசின் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்து, அதில் முகாந்திரம் இருப்பதாக அவர் கருதினால் மட்டுமே அப்புகார் லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சொல்வது தவறானது. இங்கு இருக்கக்கூடிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் இந்த அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதை செய்பவராகத்தான் இருப்பார். பொய் புகார் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஒராண்டு சிறை தண்டனை என்பது, ஊழல் தொடர்பாக புகார் கொடுக்க முன்வருபவர்களை மிரட்டும் வேலையாக இருக்கிறது. இப்படி சொன்னால் புகார் கொடுக்க யார் முன் வருவார்கள்?.

இதன் தலைவராக யார் இருக்க வேண்டும் என்றால், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி. அந்த நிலையில் இருப்பவர்கள்தான் இதற்கு தலைவராக இருக்க வேண்டும். ஆனால் இதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இருக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை ஆளும் கட்சியினர் தேர்ந்தெடுத்துக்கொள்வார்களே...

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையம் என்பது நிர்பந்தத்திற்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது. நாங்களும் கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் நினைப்பது என்னவென்றால், லோக் ஆயுத்தா என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தில் நான் சொன்ன விஷயங்களை உரிய சட்ட திருத்தங்கள் மூலமாகவும், நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாகவும் உள்ளே புகுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் காலத்தில் இந்த சட்டம் கடுமையாக்கப்படும். இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

 

 


அந்த வகையில் இந்த சட்டம் தமிழகத்தில் மிக மிக அவசியமானது. ஏனென்றால் இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழல், இலவசம், மது ஆகியவைதான் தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. நிர்பந்தத்தினால் இந்த லோக் ஆயுத்தா வந்திருந்தாலும்கூட, ஊழல் செய்தவர்கள் இதன் முன்பு நிறுத்தப்படுவார்கள். லோக் ஆயுத்தாவில் விரைந்து வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும். இன்னொன்று முக்கியமானது, நடுநிலையாக செயல்படுகிறது என்ற அபிப்ராயத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

லோக் ஆயுக்தா, ஆளும் கட்சியினுடைய துணை அமைப்பாக இருந்துவிடக்கூடாது. அப்படி இருந்தால் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வோம். நாங்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் சட்டத்தில் இல்லை என்று சொன்னாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக உள்ளே கொண்டு வருவோம். ஊழல் செய்பவர்கள் யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அவர்கள் கனவு விக்கிரவாண்டியில் பலிக்காது' - அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 'Their dream will not succeed in Vikravandi' - Anbumani Ramadoss interview

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதேபோல் தேமுதிகவும் இந்தத் தேர்தலை புறக்கணித்துள்ளது. திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனை போட்டியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், ''தேர்தல் நேரங்களில் 10 ஆளுங்கட்சி அமைச்சர்கள் இங்கேயே தங்கி அவர்களுடைய அதிகாரங்களை எல்லாம் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுதே வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம், எப்படி அவர்களை வாங்கலாம் என்றெல்லாம் திட்டம் போட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலைப் போன்றே செய்யலாம் என்று கனவில் இருக்கிறார்கள். இது விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறாது. காரணம் இது எங்களுடைய பகுதி, எங்களுடைய தொகுதி, நாங்கள் பலமாக இருக்கிற தொகுதி'' என்றார்.

Next Story

“மணல் கொள்ளையைத் தடுத்த கோட்டாட்சியரைக் கொல்ல முயற்சி” - அன்புமணி கண்டனம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 Anbumani Ramadoss emphasized wants to crack down on sand mafia

தமிழகத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர்  கோட்டாட்சியர் தெய்வநாயகியின் மகிழுந்து மீது சரக்குந்தை மோதி கொலை செய்ய மணல் கடத்தல் கும்பல் முயற்சி செய்துள்ளது. மணல் சரக்குந்து மோதியதில் வட்டாட்சியர் பயணித்த மகிழுந்து சேதம் அடைந்த நிலையில்,  மணல் சரக்குந்தை பின்னோக்கி இயக்கி வந்து  மீண்டும் மோத மணல் கடத்தல் கும்பல் முயன்றுள்ளது. மகிழுந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச்  செயல்பட்டு, மகிழுந்தை இடதுபுறமாகத் திருப்பியதால் கோட்டாட்சியரும், அவரது உதவியாளர்களும் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மணல் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாகத் தலைவிரித்து ஆடுகிறது. அதிகாரப்படிநிலையில் உயர்ந்த இடத்தில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால் அவர்களுக்கு  எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாஃபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி  சமுக அமைதிக்கும் மிகப்பெரிய  ஆபத்து ஆகும்.

மணல் மாஃபியாக்களால் தமிழ்நாட்டின் பொது அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது அலுவலகத்தில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதன்பின் சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தக் கிராம நிர்வாக அலுவலரை வெட்ட  கடத்தல் கும்பல் அரிவாளுடன் துரத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை  மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றது,  வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டுப் பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதைப் படம் பிடித்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உமாபதியை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியது என மணல் கடத்தல் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

இப்போதும் கூட இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும்  கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதில்தான் ஆர்வம் காட்டினார்கள். முறப்பநாட்டில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததைத் தவிர, மணல் கொள்ளையைத் தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளைக் கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.