சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத் தலைவர் தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின் பேரில் பொறுப்பு ஆசிரியர்களான அன்பரசி, விஜயகுமார் ஆகியோரிடம் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி இப்பள்ளியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பாணாபுரம் என்ற கிராமத்திற்கு ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணம் சென்றனர்.
அங்கு மாணவர்கள் காட்டிய விவசாய நிலத்திற்குள் ஒரு தமிழ் கல்வெட்டு காணப்பட்டது. கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்து பார்த்ததில் அது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்து கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது. ஆசிரியர் அன்பரசி கல்வெட்டு படி எடுத்து ஆய்வு செய்து பார்த்ததில் அது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு என்பதை அறிந்து, படி எடுத்த கல்வெட்டை அதன் விபரங்களை அறிந்து கொள்ள சென்னை தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளர் முனைவர் சு. ராஜகோபால் அவர்களிடம் படிக்கச் சொல்லி கூடுதல் தகவல் பெற்றுள்ளனர்.
அதாவது, பூமிக்கு மேல் நின்ற நிலை உள்ள செந்நிற பலகை கல் 3 அடி உயரமும் 2.5 அடி அகலமும் உடைய கல்லில் 12 வரிகள் எழுதப்பட்டிருந்தது. அதில் கொங்கு வீரபாண்டியன் ( 1265 + 21 = 1286 ) பொது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து இறைவனுக்கு வாணாபுரம் (பாணாபுரம்) தேவதானமாக கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது. கொடுத்தவர் அரசனாக இருக்கலாம். நாடும் வண்ணவுடையும் கொடுத்திருக்கலாம் என்ற செய்தி கல்வெட்டில் உள்ளது. கல்வெட்டில் வாணாபுரம் என்று உள்ளது தற்பொழுது பெயர் மருவி பாணாபுரம் என்று அழைக்கப்படுகிறது என்பதும் தெரிய வந்தது.