கர

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அடிக்கடி வந்து கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில் பாஜகவைச் சேர்ந்த பலர் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த மோடி, அமித்ஷாவின் பயணங்கள் அதிகப்படியான கேள்வியை எழுப்பியுள்ளது. இவர்களின் பயணம் தேர்தல் அடிப்படையிலானதா என்பது குறித்து மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்ற நிலையில் அடுத்த நாளே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். இவர்களின் வருகையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முன்னெடுப்புகள் இருந்ததாகப் பரவலாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவற்றைப் பற்றி அவர் பேசியதாகக்கூறப்படுவது குறித்து என்னநினைக்கிறீர்கள்? இதுதொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

Advertisment

தேர்தல் வரும் சமயத்தில் யார் வந்தாலும் இதைத்தான் கூறுவார்கள். சொந்தக்காரங்க வீட்டில் துக்க காரியத்துக்கு வந்தால் கூட கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழாமல் இருக்காது. அவர்களுக்குத் தமிழகம் எப்போதுமே தோல்வியைப் பரிசளித்து வரும் ஒரு இடம். ஆகையால் அவர்கள் இங்குத் தீவிரமாகக் கவனம் செலுத்தப் பார்க்கிறார்கள். இதனால் எப்படிப் போனால் யாரை வழிக்குக் கொண்டு வந்தால் வெற்றி வசப்படும் என்ற யோசனையிலிருந்து வருகிறார்கள். ஆகையால் தன்னால் ஆன சாம, பேத செயல்களை எல்லாம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

அதையும் தாண்டி ராகுல்காந்தி சும்மா இல்லாமல் தமிழகத்தில் உங்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார். அது அவர்களை வெகுவாக சீண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் மிக ஆக்ரோஷமாக ராகுல் பேசினார், உங்கள் ஜென்மத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்திருந்தார். அதைப் பொய்யாக்க வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதனால் கட்சியினருக்கு ஒரு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் அவர்கள் ஒவ்வொருவராகத் தமிழகம் வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்திலேயே அதிக நேரம் செலவிடுவார்கள். ஆனால் முடிவு என்ற ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் விரைவில் காண்பார்கள்.

Advertisment

தமிழகம் வந்த பிரதமரைத் தனியாகச் சந்தித்துப் பேச எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு முயன்றதாகவும், ஆனால் யாரையும் சந்திக்க அவர்கள் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் வெளியானது. அதிமுக எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதில் நிறையக் கஷ்டத்தில் இருப்பவர் எடப்பாடி, அவருடைய நண்பர்கள் வீட்டில் அதிரடியான சோதனைகள் நடந்து முடிந்துள்ளது. அதில் சில சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளார்கள். அவர்கள் மலையளவு சொத்துக்களை வைத்திருந்தாலும் சிறிய கல் அளவு தற்போது கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அந்த சின்ன கல்லைப் பெயர்க்கும்போது பெரிய மலையே விழுந்துவிடும். அதனால்தான் சொல்கிறேன். எடப்பாடிக்குப் பெரிய சிக்கல் வர இருக்கிறது. இவர் பெரிய தலைவர்களைப் பார்ப்பதால்தான் எடப்பாடியிடம் உள்ள கூட்டமே அவரிடம் தொடர்ந்து இருக்கிறது. அந்த நம்பிக்கை போய்விட்டது என்றால் எடப்பாடியிடம் இருந்து அனைவரும் பிரிந்து வந்துவிடுவார்கள்.

அதனால்தான் எடப்பாடிக்கு மிகுந்த கஷ்டமான சூழ்நிலையாக தற்போது இருக்கிறது. தமிழகம் வரும் அவர்களைக் கட்டாயம் சந்தித்துப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. தான் அவர்களோடு நெருக்கமாக இருக்கிறேன் என்பதை அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருடன் இருப்பவர்களுக்குக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் அவர்கள் சந்திக்க மறுத்தாலும் அவர்களைத் தேடி இவர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் பன்னீர் தரப்புக்கு அந்தத்தேவை இல்லை. ஒரு எம்பி இருந்தாலும் அதை வைத்துச் செய்ய வேண்டியதை அவர் செய்து கொள்கிறார். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பன்னீர் தரப்பு செயல்படுவதால் அவர்களுக்கு உண்டான நெருக்கடி குறைந்துள்ளது.